பட்ஜெட்டில் கதையை நம்பி படங்களை தயாரித்து வந்த மலையாள சினிமா வணிக போட்டியில் தாக்குப் புடிக்க
வழக்கமான தங்கள் பட்ஜெட் சினிமாவை தவிர்த்து பிரம்மாண்டமான, பேண்டஸி படங்களை கடந்த சில வருடங்களாக தயாரிக்க தொடங்கி அதில் வெற்றியும் பெற்று வருகிறது.
அந்த வரிசையில் முழுமையான கேங்க்ஸ்டர் வயலன்ஸ் படமாக வந்திருக்கிறது பால் ஜார்ஜ் இயக்கியுள்ள காட்டாளன்.
ஆண்டனி வர்கீஸ் பிரதான நாயகன். சுனில், கபீர் துகான்சிங், துஷாரா விஜயன், ராஜ் திரந்தாசு, பார்த் திவாரி, ஹரிசங்கர் நாராயணன், சந்தீப் ரவிராஜ் என நடிகர் பட்டாளமே களமிறங்கியுள்ளது.
கேமியோ ரோலில் அல்போன்ஸ் புத்திரன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என திரை பிரவேசம் செய்திருக்கிறார்கள்.
நெடுங்காட்டில் யானைகளைக் கொன்று தத்தங்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி பல கோடிகளைச் சம்பாதிக்கும் கார்டல் எனப்படும் வணிகக்கூட்டமைப்பை நடத்துகிறார்( சுனில்) மாரி.யார் எதிர்த்துக் கேட்டாலும் இரக்கமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.
மலைவாழ் மக்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களை மீறி யாரும் காட்டில் ஒரு யானையைக் கூட கொல்லமுடியாத நிலை. சுனிலுக்குஅரசு இயந்திரங்கள், அரசியல்வாதிகள் சேவகம் செய்கின்றன.
சுனிலின் கார்டலை வீழ்த்துவதற்காக ஆண்டனி வருகிறார். ஒரு ஹெர்குலிஸ்போல வீரனாக இருக்கிறார். எதிரிகளின் கூட்டமைப்பை உடைத்து காட்டை தன் வசத்துக்குள் கொண்டுவருகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் ஒருவரிகதை.
ரத்தம் ஆறாக ஓடும் வன்முறையை அழகியலாகக் காட்டுவதுதான் முழு திரைக்கதையின் இலக்கு. சிறு இடைவெளிகூட விடாமல் கதிகலங்க வைக்கும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ரவி பஸ்ரூர். நடந்தால், அடித்தால், உட்கார்ந்தால், பேசினால் என எல்லா காட்சிகளிலும் இசை மூலம் நிரம்பியிருக்கிறார்.
தந்தம் கடத்தும் கும்பல் தலைவனாக சுனிலின் நடிப்பு மிகச் சிறப்பு. அந்த கேரக்டரின் எதார்த்தத்தை தன் அனுபவ நடிப்பால் உணரவைக்கிறார். ஆண்டனியின் உடல்மொழியில் தனித்துவம் வீரமும் வெளிப்படுகிறது. அதிகம் பேசவில்லை. தந்தங்களைக் கடத்துவதுதான் முழு வேலையாக இருக்கிறது.
நாட்டில் அரசு, போலீஸ், ராணுவம் இருக்கிறதா? என்று கேட்க கூடாது ஏனென்றால் இதுவொரு கற்பனைச் சித்திரம். மலைவாழ் மக்களை துன்புறுத்துவது மிக எளிதாக நடக்கிறது. பச்சிளம் சிசுவைக்கூட கொல்லும் காட்சி அதிதீவிர வன்முறையாக தெரிகிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு திருப்பமாக வெள்ளுடையில் பெரிய டானாக வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
செம்மண் பூமியில் கார் சேஸிங் சண்டைக் காட்சிகள் டெக்னிக்கல் எக்சலன்ஸ். அதாவது ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இருவரும் காட்டாளனை ஆள்கிறார்கள். கற்பனைக்கு எட்டாத வேறொரு ரகசிய உலகம் இயங்குகிறது என்பதை பிரம்மாண்டமாக காட்டுகிறது காட்டாளன்.