சினிமாவில் தவிர்க்க முடியாத வழக்கமான காதல் கதைதான். அதனை திரைக்கதையில் புதுசாக, ஆபாசம் இல்லாது உணர்வுகளின் சங்கமமாக காட்சிபடுத்தப்பட்டிருக்கும் படம்” கப்புள் பிரண்ட்லி”
கதாநாயகன் இன்ட்ரியர் டிசைனிங் செய்வதில் பெரும் விருப்பம் கொண்டு சென்னை வருகிறான். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சறுக்கி வறுமையை தருகிறது.
கதாநாயகி மென்பொருள் பட்டதாரி பெற்றோரின் திருமண ஏற்பாட்டில் இருந்து தப்பிக்க வேலை தேடி சென்னை வருகிறாள்.
இந்த இருவரும் ஒரு இக்கட்டான சூழலில் சந்திக்கிறார்கள். நாயகி வந்தபின் அவனது கனவும் வாழ்வும் மேல்நோக்கிச் செல்கிறது. இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேரும் சூழல் உருவாகும் நேரத்தில் இருவருக்கும் இடையில் அர்த்தமற்ற வாக்குவாதம் வழக்கம் போல திரைப்படத்தை நீட்டிக்க இருவரும் பிரிகின்றனர். இருவரும் மீண்டும் இணைந்தார்களா என்பதே இரண்டாம்பாதி.
கதையின் நாயகனாக சந்தோஷ் சோபன் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு பொருந்தி போகிறார. நாயகி மானசா வரணாசி அற்புதமான நடிப்பை இயல்பாக நம்முன் கடத்துகிறார். ஆர்பாட்டம், அட்ராசிட்டி இல்லாமல் யோகிபாபு கதையின் போக்கில் ஸ்கோர் செய்கிறார்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன் எதார்த்தம் மீறாத காட்சிகளை கண்களுக்கு விருந்தாக தந்துள்ளார். ஆதித்யா ரவீந்திரனின் இசை இந்தப்படத்தின் மற்றொரு ஆன்மா. பின்னணி இசையும் பாடல்களும் மனதை நிறைக்கின்றன.
மிக இயல்பாக பயணிக்கும் படம் நம் கண்களை எங்கும் அகல விடவேயில்லை. ஒரு பெண் தனியாக இருப்பதே பிரச்சினை என்கிற நிலையில் நம்பிக்கை கொண்டு பயணித்தால் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது திரைப்படம்.
காமம் கலந்த காதல், கழட்டு விடும் காதல், பிரேக் அப் காதல், என்று காதலில் பல பரிமாணங்களை இன்றைய தலைமுறை கடைபிடித்து வருகிறது. அவைகளில் இருந்து வேறுபட்ட ஆண், பெண் உறவின் உன்னதத்தை, காதலின் மகத்துவத்தை பதிவு செய்திருக்கிறது யுவிகிரியேஷன்ஸ் தயாரிப்பில் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் தயாராகி வெளியாகி இருக்கும் “கப்புள் பிரண்ட்லி” திரைப்படம்.