காதல் குறித்து மாறுபட்ட பார்வையை விவரிக்கும் 29 திரைப்படம் எப்படி?

காதல் குறித்து வேறொரு பார்வையை முன்வைக்கும் திரைக்கதையில் வெளியாகி இருக்கும் படம் 29.

வாழ்க்கையில் 29 வயது வரை தனக்கென ஒரு தனி அடையாளம் இல்லாதவராக  இருக்கும் நாயகன்,அழகியபெண்ணின் காதலன் என்கிற அடையாளம் பெறுகிறார்.ஆனால் அந்த அடையாளமும் கைவிட்டுப் போகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் 29 திரைப்படத்தின் திரைக்கதை.

ரெட்ரோவில் எதிர்மறை வேடமேற்றிருந்த விது இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

.காதல்,கொணடாட்டம்,இழப்பு,வலி,போராட்டம் ஆகிய எல்லாவகை உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம்.அதைப் பொருத்தமாகச் செய்திருக்கிறார்.

நாயகி ப்ரீத்தி அஸ்ரானி காதலி வேடத்துக்கு மிகச் சரியாக இருக்கிறார்.காதல் மட்டும் வாழ்க்கையில்லை என்று சொல்லி காதலனை வழிநடத்தும் பொறுப்பேற்கும் காதலியாகவும் இருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அவினாஷுக்கும் காதல் இருக்கிறது.அது ரசிகர்களைச் சிரிக்க வைப்பதற்காகவே வைக்கப்பட்டிருக்கிறது.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டியலட்சுமி, நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சிந்து ஷியாம் ஆகியோர் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்குக்கு ஏற்றவர்களாக அமைந்திருப்பது படத்துக்குப் பலம்.

சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் படத்தில் வரும் காட்சிகள் படத்தில் இருக்கும் காதலர்களுக்கானது மட்டுமன்றி ஒட்டுமொத்த காதலர்களுக்கானவையாக அமைந்து திரைக்கதைக்கு வலுச்சேர்த்துள்ளது.

ஷான்ரோல்டன் இசையில்படம் மெதுவாக நகர்கிறது என்கிற எண்ணம் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் பின்னணி இசை அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ்குமாரின் உழைப்பில் படம் தொய்வின்றி நகர்ந்து செல்கிறது.

2010 ஆம் ஆண்டு பின்னணியில் இந்தக்கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.அப்படி ஓர் ஆண்டுக்கணக்கைத் தேர்ந்தெடுத்து கதை சொல்லியிருப்பதன் காரணம் படத்தில் இருக்கிறது.காதலை மறுவாசிப்பு செய்யும் படமென்று இதைச் சொல்லலாம்.அந்த அளவுக்குக் காதல் குறித்த வேறொரு பார்வையை முன்வைத்திருக்கிறார் இயக்குநர்.அவருடைய எண்ணத்தைச் சரியாக உள்வாங்கி வெளிப்படுத்தக் கூடிய நடிகர்களும் அமைந்துவிட்டதால் கவனிக்கத்தக்க படங்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது.