காதல் பிரிவை கூறும்” பூக்கி” திரைப்படம் எப்படியிருக்கிறது?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதும், தொட்டவனை அல்லது தொட்டவளை வாழ்க்கை கூட்டாளியாக்கி வாழ்வது பண்பாடு என பயணப்பட்ட சமூகத்தில் பழகி பார்த்து பிடித்து இருந்தால் திருமணம் இல்லையென்றால் விலகி கொள்வது, அல்லது விலக்கி வைக்கும்” பிரேக்கப் அப்” வழக்கத்திற்கு மாற்றம் கண்டுள்ள இன்றைய தலைமுறையின் காதலையும், அதனால் ஏற்படும் அழுத்தம், வலி எல்லாவற்றையும், குடியும், கூத்துமாக சொல்லி முடிக்கிறது காதலை குறிக்கும் சொல்லான” பூக்கி” எனும் பெயரில் வந்திருக்கும் திரைப்படம்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டகாதல் ஜோடிகளான நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷா ஆகியோர் ஒருகட்டத்தில் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிகிறார்கள்.அந்தப் பிரிவைத் தாங்க முடியாமலும், துறக்கவும் முடியாமல் அவர்களிருவரும் எதிர்கொள்ளும் மன அழுத்தம்தான் படம்.
காதலனாக நடித்திருக்கும் நாயகன் அஜய் திஷனுக்கு,காதல் உணர்வுகள், பிரிவின் கொடும்வலி, தந்தை பாசம் உட்பட பல்வேறு அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

நாயகி தனுஷா, நாயகனுக்கு இணையான வேடமேற்று அதேபோல் நடிப்பிலும் அவருக்கு இணையாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

லக்‌ஷ்மி மஞ்சு, பாண்டியராஜன்,சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, எம்.ஜே.ஶ்ரீராம்,அஸ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் ஏற்றுக் கொண்ட வேடங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு இசை மற்றும் படத்தொகுப்பு ஆகியனவற்றை விஜய் ஆண்டனி செய்திருக்கின்றார்.

படத்தொகுப்பாளராக முதல்பாதியில் சறுக்கினாலும் இரண்டாம்பாதியில்  நிமிர்ந்து நின்றுவிடுகிறார்.
திரைக்கதையின் பங்காகவே பின்னணி இசை அமைந்திருக்கிறது

கதை,திரைக்கதை,வசனம் எழுதியிருக்கும் புதியபரிதி, இக்கால இளையதலைமுறையின் எண்ணவோட்டங்களைக்  எழுத்தாய் வடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் கணேஷ் சந்திரா.முழுமையாகப் பார்க்கும் நேரத்தில் சிலகுறைகள் இருக்கின்றன என்பது பலவீனம்.அதேநேரம், எக்காலத்திலும் உயிர்ப்புடனிருக்கும் காதல் உணர்வுகளின் இக்கால நிலை என்ன என்பதைக் காட்சிகளாகப் பதிவு செய்திருப்பதும் பார்ப்போர் மனதில் பதிய வைத்திருப்பதும் அவருடைய பலம்