காந்தி கண்ணாடி – திரைப்படம் எப்படி இருக்கிறது?

நேற்று ‘காந்தி கண்ணாடி’ சிறப்புக் காட்சி பார்த்தேன். 

ஷெரீப் என்கிற இளைஞனிடமிருந்து இப்படி ஒரு படத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இயக்குநராக அவனுக்கு இது இரண்டாவது படம் என்றாலும், குறைந்தபட்ச சமரசங்களோடு ஒரு வணிகரீதியான படத்தை செய்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்காமல் தரமான ஒரு படத்தை கொடுத்து நம்மை வியக்க வைத்திருக்கிறான்.
படத்தில் இறுதி அரைமணி நேரம் பண்பட்ட ஒரு வயதான இயக்குநரின் முதிர்ச்சியோடு இயக்கியிருப்பது எனக்கு அடுத்த வியப்பு. எப்படி இவனுக்கு இது சாத்தியமானது என்று! அவனிடமே கேட்டேன்; நாணிப்போனான்.
Pre-climax காட்சி. Single shot என்று சொல்கிற எந்த வெட்டும் இல்லாத ஒரே காட்சியாய் ஒன்பது நிமிடங்கள் ஓடுகிறது.
சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குநர் சசிகுமார்தான் இதை முதலில் செய்துகாட்டினார் என்றாலும், அந்தக் காட்சி திரைக்கதையின், காட்சியமைப்பின் அடிப்படையில் இறுக்கமாகச் சென்றது. கேமரா கதாபாத்திரத்தின் கூடவே நடந்துசென்று அந்த realtime உணர்வைக் கொடுத்து நம்மை சிலிர்க்கவைத்தது.
இந்தப்படத்தில் அர்ச்சனா என்கிற அற்புதமான நடிகையின் close-up shot-ஐ மட்டும் வைத்து, அவர் முகபாவனையை மட்டுமே வைத்து, அவர் உணர்ச்சிபொங்க பேசுகிற அந்த வசனங்களோடு வருகிற மாறுபட்ட single shot.
இதை இப்படி சிந்தித்த இயக்குநர் ஷெரீப்புக்கும், கேமராவை மட்டுமே பார்த்து இவ்வளவு உணர்வுபூர்வமாக இயல்பாக நடிக்க முடிந்த அர்ச்சனாவுக்கும் எவ்வளவு பாராட்டை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
இப்படி ஒரு காட்சி கிடைத்துவிட்டதே என்று சினிமாத்தனமாக அதிகமாக, செயற்கையாக நடித்துவிடாமல், ஒரு 60 வயது அம்மாவின் இயல்பான, அளவு மீறாத நுணுக்கமான முகபாவனைகளோடு, சாந்தமாக அந்த உணர்வுபூர்வமான வசனங்களைப் பேசிய விதம், வேறு யாராவது இதை இவ்வளவு துல்லியமாகச் செய்திருக்க முடியுமா என்கிற கேள்வியை என்னுள்ளே எழுப்பியது. நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
அர்ச்சனா நான்கைந்து நிமிடங்கள் பேசியபிறகு, அந்த இளம் கதாநாயகி நமீதா ஒரு மூன்று நிமிடம் உணர்வுகளைக் கொட்டி பேச, இவற்றையெல்லாம் கேட்டு முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் குற்ற உணர்வோடு, வெளியே சொல்லமுடியாத உணர்வுகளை உள்ளே வைத்துக்கொண்டு முழுநேரமும் சிலைபோல பாலா நிற்க, அற்புதமான ஒரு நிகழ்வு அந்த ஒன்பது நிமிடங்களும்.
தொண்டையை அடைக்கும்… விம்முவீர்கள்.. அக்கம்பக்கம் பார்த்து கண்களை மெல்லத் துடைத்துக் கொள்வீர்கள். இது உங்களுக்கு நான் தரும் alert!
ஒளீப்பதிவாளரைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா?
Close-up-ல் தொடங்கி பின்பு, எதிரே நிற்கிற பாலாவையும், நமீதாவையும் மாறிமாறி பார்த்து, பிறகு அந்த மேடையில் இருந்து இறங்கி ஒவ்வொருவராக வெளியே மழையில் நடந்துபோக, கேமராவும் பின்பற்றிச் செல்ல, அட்டகாசம் போங்கள்!
Well done! ஷெரீப்-அர்ச்சனா-நமீதா-பாலா!
விவேக்-மெர்வின் இரட்டையர், பின்னணி இசையில் கடைசி அரைமணி நேரம் அசத்தல்தான்.
*கதையின் நாயகன் பாலாஜி சக்திவேல் (‘காதல்’ பட இயக்குநர்தான்). அவரைப்பற்றி தனியாக ஒரு பதிவு எழுதவேண்டும். படத்தைப் பார்த்துவிட்டு அவரை எங்காவது நேரில் பார்த்தால் கட்டிப்பிடித்துக் கொள்வீர்கள்
– இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூல் பதிவு