சச்சின் மறு வெளியீட்டில் சாதனை – கலைப்புலி தாணு நெகிழ்ச்சி

புதிய நேரடி தமிழ் படங்கள் தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வரும் சூழலில் ஏற்கனவே வெற்றி பெற்ற தமிழ்படங்களை கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளர்கள் மறு வெளியீடு செய்து வருகின்றனர். பல திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வசூலை குவிக்கின்றன.

பெரும் முதலீட்டு செலவு இல்லாமல் பழைய படங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதுமே கூடுதல் வருவாயாக தயாரிப்பாளருக்கு கிடைக்கிறது. அந்த வரிசையில்ஏப்ரல் 18-ம் தேதி விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது.

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய், ஜெனிலியா, சந்தானம், வடிவேலு, பிபாஷா பாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் மறுவெளியீட்டிலும்  வசூல் சாதனை செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவருடன் இயக்குநர் ஜான் மகேந்திரன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் நடன இயக்குநர் ஷோபி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

கலைப்புலி தாண்ட பேசியதாவது “‘திருப்பாச்சி’, ‘மதுர’ போன்ற அதிரடி திரைப்படங்களில் கவனம் செலுத்தும் பொழுது, ஒரு மாற்றத்திற்காக விஜய்யுடன் கலந்துரையாடும் போது இயக்குநர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் என்னிடம் ‘குஷி’ போன்ற கதை ஒன்றை கூறினார். நீங்கள் கேட்கிறீர்களா என்று கேட்டேன். அதன் பிறகு இயக்குநர் ஜான் மகேந்திரன் விஜய்யிடம் கதை கூற ஏற்பாடு செய்தேன். ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய்யிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, ‘கதை மிகவும் பிடித்திருக்கிறது; கண்டிப்பாக பண்ணலாமென்று’ கூறினார்.

உலகமெங்கும் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட்டேன். திரைப்படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல வசூல் சாதனை செய்ததாக கூறினார்கள். 200 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது, இப்பொழுது விளம்பரப்படுத்துதலின் செலவு குறைந்திருப்பதாலும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை எளிதாக சென்றடைவதன் மூலம் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி, மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள்.

‘சச்சின்’ மறுவெளியீடு செய்த மறுநாள் என் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றேன். அப்படி ஒரு மக்கள் கூட்டத்தை நான் பார்த்ததில்லை.

தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல், அவர்களை உயர்த்தி ஊக்குவிக்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். ‘சச்சின்’ திரைப்படம் மீண்டும் வெற்றியடைய திரையரங்கு உரிமையாளர்களும் மிகப் பெரிய காரணம். மேலும், திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, மிகப் பெரிய வெற்றியடைய செய்த ஊடக நண்பர்களுக்கு மிக்க நன்றி” என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து

“முதலில் வெளியான போது ‘சச்சின்’ தோல்விப் படம் என்கிறார்களே” என்ற கேள்விக்கு
“அந்தச் சமயத்தில் விநியோகஸ்தர்கள் அனைவருமே நல்ல லாபம் கிடைத்ததாக எனக்கொரு தொகையைக் கொடுத்தார்கள். அதில் ஒரு தொகையைக் கொண்டு போய் இயக்குநர் எஸ்.ஏ.சியிடம் கொடுத்தேன். லாபம் வந்தால் போதும் சார் என்று பணத்தை திரும்பிக் கொடுத்தார். இதுதான் இந்தக் கேள்விக்கான பதில்”
என்று பதிலளித்தார் தாணு.