சுமோ – திரைப்பட விமர்சனம்

சென்னையில் விடிவி கணேஷின் உணவகத்தில் மிர்ச்சி சிவா வேலை செய்து வருகிறார். ஒரு நாள் கடற்கரைக்கு சென்ற போது, அங்கு ராட்சச உருவத்துடன் ஒருவர் மயங்கி கிடக்கிறார். அவரை மீட்டு தான் வேலை செய்யும் உணவகத்திற்கு அழைத்து வருகிறார்.

வெளிநாட்டவர் ஆன அவரை பார்த்தவுடன் விடிவி கணேஷ், அவரை போலீஸ் ஸ்டேஷனில் விடுமாறு சொல்கிறார். மிர்ச்சி சிவாவும் அவரை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார். அவரை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர், இங்கு அவரை வைத்துக் கொள்ள முடியாது. நீங்களே அழைத்துச் செல்லுங்கள் என சொல்லிவிடுகிறார்.
தன் உயிரை காப்பாற்றிய மிர்ச்சி சிவாவை கடவுள் போல் பார்க்கிறார் அந்த வெளிநாட்டவர். தனது பழைய ஞாபகங்களை இழந்த அவரை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொள்கிறார் சிவா.
அதன் பிறகு தனது வீட்டிற்கு அழைத்துவரும் மிர்ச்சி சிவா, அவரை வைத்து பல வழிகளில் பணம் சம்பாதிக்கிறார். அப்படி ஒரு இடத்திற்கு அவரை அழைத்துச் செல்லும் போது அங்கு இருந்த ரஜினிகாந்த் படத்தையும், ஜப்பான் நாட்டு கொடியை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்து அப்படியே நிற்கிறார்.
ஒரு கட்டத்தில், இவர் ஒரு சுமோ வீரர் என கண்டுபிடிக்கும் சிவா, அவரை மீண்டும் ஜப்பானுக்கு அனுப்ப வேண்டும் என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் ஏன் ஜப்பான் கொடியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்? உண்மையில் அவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருக்கு நினைவு திரும்பியதா? அதன்பின் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதி கதை.

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் தொடாத ஒரு கதைக்களத்தை இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் கையில் எடுத்துள்ளார். வழக்கமான சிவாவின் பஞ்ச் வசனங்களும் இதில் குறைவு தான். திரைக்கதையில் வைத்துள்ள காமெடிகள் ரசிக்கும் படி இல்லை.

 கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் கதையுடன் பொருந்தி போகவில்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரம் சுமோ வீரர் தான். அந்த கதாபாத்திரமாவது  ரசிக்கும்படி இருக்கும் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே.

சிங்கிளாக இருந்தாலே மிர்ச்சி சிவா எதையாவது செய்து சிரிக்க வைப்பார். இதில் ஹீரோ என்ற பெயரில் அவருடன் படம் முழுக்க சுமோ வீரரை உடன் வைத்து, அவரை சுமக்க வைத்துள்ளனர்.

பிரியா ஆனந்த் வழக்கமான ஹீரோயின் போல் வந்து செல்கிறார். விடிவி கணேஷ் கேரக்டர் அலுப்பை ஏற்படுத்துகிறது. தேவையே இல்லாமல் இதில் யோகி பாபு எதற்கு என்கிற கேள்வியும் எழுகிறது. காமெடியாவது ஒர்கவுட் ஆகும் என எதிர்பார்த்தால், அதுவும் சொதப்பல். இதில் நடிகர் சதீஷ் கேமியோ வேறு. இப்படி பல கேரக்டர்கள் இருந்தும் படம் நகர்வது பார்வையாளனை சோர்வடைய செய்கிறது.

படத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்தாலும் எடிட்டிங் மோசமாக உள்ளது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை மட்டும் தான் படத்திற்கு கொஞ்சம் பலம்.