சொட்ட சொட்ட நனையுது – திரைப்பட விமர்சனம்

நாயகன் நிஷாந்த் ரூசோவுக்கு திருமணம் நடக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே போகிறது. அவரை பார்க்கும் பெண்கள் ‘அய்யய்யோ இவரா’ என அலறுகிறார்கள். காரணம், நிஷாந்துக்கு வழுக்கை தலை. அதையும் மீறி பக்கத்து வீட்டு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்த வேளையில், ஒரு தவறான வீடியோ காரணமாக அதுவும் நின்று விடுகிறது. 

விரக்தி அடையும் நாயகன் சென்னை சென்று விக் வைத்து வழுக்கை இருப்பதை மறைத்து, வர்ஷினி வெங்கட்டை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அதற்கும் பல தடைகள். கடைசியில் வழுக்கை தலை நாயகனுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? இதுதான் சொட்ட சொட்ட நனையுது கதை.

 மேக்கப் மூலம் வழுக்கை தலை ஆளாக மாறி, நடித்துள்ள நாயகனின் ஈடுபாட்டை பாராட்டலாம். ஆனாலும், வழுக்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பல காட்சிகளில் சுமாராக நடித்து இருக்கிறார் நிஷாந்த். உணர்ச்சிவசப்பட வேண்டிய இடங்களில், கோபப்படுகிற இடங்களில் கூட அவர் நடிப்பு சுமார். காதல் காட்சிகளில், திருமண காட்சிகளில் இன்னும் சுமார். முதற்பாதியில் நாயகியாக வருகிற ஷாலினி சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். பிற்பாதியில் நாயகியாகவருகிற வர்ஷினி வெங்கட் ரீல்ஸ் மோகத்தில் தவிப்பவராக ஓவர் ஆக்டிங் கொடுத்து இருக்கிறார்.
 அம்மா, அப்பா, பாட்டி கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களின் நடிப்பு பக்கா நாடகத்தனம்.
திருமணவீடு காட்சிகளை கலர்புல்லாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரயீஸ். இசையமைப்பாளர் ரஞ்சித் உன்னி இசை ரசிக்க வைக்கவில்லை. வேலைகள் ஈர்க்கவில்லை.  திரைக்கதையில் விறுவிறுப்பு, திருப்பங்கள் இல்லாததும் நெளிய வைக்கிறது.

திருமணத்துக்கு எத்தனையோ தடைகள் வரும். குறிப்பாக, ஆண்களுக்கு சொட்ட தலை இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும். அவர்களின் மனப்போராட்டம் எப்படி இருக்கும். அதை தடுக்க ஆண்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற அழகான கரு. ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். ஆனால், சுமாராகவும், சில சமயம் போராடிக்கிற மாதிரியும் எடுத்து பொறுமையை சோதித்து இருக்கிறார் இயக்குனர் நவீத் ஃபரித்