தமிழ்த் திரைப்பட ,தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதற்காக நடைபெற்ற, நடைபெற்று வரும் இட ஒதுக்கீடு, கரன்சி பேரங்கள் என களை கட்டும் சட்டமன்ற தேர்தலுக்கு இணையாக “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல்” எதிர்வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளன.
அரசியல் கட்சிகளை போன்று சங்க தேர்தல் அறிவிக்கப்படும் வரை ஒரே அணியாக இருந்தவர்கள் அதிகார மோகம் காரணமாகஎதிரெதிர் அணிகளாக மாறியுள்ளார்கள். இருமுறை சங்கத்தின் தலைவராக இருந்த முரளி ராமசாமி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருடன் கடந்த தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற தமிழ்குமரன் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி அமைத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார். இந்த அணியின் வியூக அமைப்பாளராக, சாரதியாக செயல்படுபவர் சங்கத்தின் தற்போதைய செயலாளர் இராதாகிருஷ்ணன். கடந்த 15 ஆண்டுகளாக தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் செயலாளர், பொருளாளர்பதவிகளுக்கு தேர்தல் மூலம் வெற்றி பெற்று வரும் இராதாகிருஷ்ணன் கடந்த தேர்தலில் முரளி ராமசாமி அணியில் இருந்து வெற்றி பெற்றவர்.
எத்தகைய வலிமை மிக்க அணி அமைத்தாலும் வாக்களர்களுக்கு கரன்சி கொடுத்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும் என்பதை அனுபவரீதியாக கற்றுக் கொண்ட மன்னன் அணி அமைக்காமல் தனித்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார். அவரை போன்றே பைவ் ஸ்டார் கதிரேசன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அணி அமைத்து பிரதான பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சுபாஷ் சந்திர போஸ் தமிழ்குமரன் தலைமையிலான அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகின்றார். இவரை எதிர்த்து இராமநாராயணன் அணி சார்பில் சி.வி.குமாரும், சுயேட்சையாக விடியல் ராஜு போட்டியிடுகின்றனர்.
மொத்தமுள்ள 33 நிர்வாக குழு பதவிகளுக்கு 88 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிரதான போட்டி தலைவர், செயலாளர், பொருளாளர், இணை செயலாளர் பதவிகளுக்கு நடைபெற உள்ளது. செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான போட்டியில் நீண்ட காலமாக படங்கள் தயாரிக்காத, சீனியர் நிலைய வித்வான்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
தலைவர் பதவிக்கு மூன்று பேர் போட்டியிட்டாலும் இருமுனை போட்டி கடுமையாக இருக்கிறது. செயலாளர் பதவிக்கு ஐவர் போட்டியிட்டாலும் இருவரை தேர்வு செய்ய மூவருக்கு இடையே கடுமையான போட்டி உள்ளது.

பொருளாளர் பதவிக்கான போட்டியில் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்ட திருப்பதி பிரதர்ஸ்சுபாஷ் சந்திர போஸ் – திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் இருவருக்குமிடையில் நேரடி போட்டி நிலவுகிறது. இவர்களை எதிர்த்து போட்டியிடும் சிறுபட தயாரிப்பாளர்களின் ஆதரவு பெற்ற விடியல் ராஜுகளத்தில் கடுமையான போட்டியாளராக இருப்பார் என கூறப்படுகிறது.

நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளை நெருங்கி வரும் பாரம்பர்யம் மிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்கியவர்கள் இன்று எவரும் இல்லை.
தயாரிப்பாளர்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட பெருமைக்குரியது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். அந்த சங்கம் தங்கள் சுயநலனுக்காக பதவிகளை பயன்படுத்துபவர்களின் கூடாரமாகி விட்டது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்கிற சுழலில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது என்கின்றனர் மூத்த தயாரிப்பாளர்கள்.
அதனால்தான் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள்” நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்” என்கிற தனி அமைப்பு தொடங்க காரணமானது என்கின்றனர். இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து கொண்டு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஒருவரால் வாக்கு கேட்க முடிகிறது. வெளிநாட்டில் நிரந்தரமாக குடியேற முயற்சிப்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிகிறது. தனதுபதவிக்காலங்களில் சங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவரால் மீண்டும் மீண்டும் வெற்றி பெற முடிகிறது. இவற்றுக்கெல்லாம் காரணம் எப்போதோ ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டு அதன் பின் வெவ்வேறு தொழிலுக்கு மாறிவிட்ட, சொந்த ஊருக்கு குடி பெயர்ந்து போன வாக்காளர்கள் 80% ம் உள்ளனர்.
இவர்களை பொறுத்தவரை சங்க நலன்களை காட்டிலும், வேட்பாளர்களின் தகுதியை காட்டிலும் தேர்தல்யொட்டி தங்களுக்கு”GPAY” மூலம் எவ்வளவு கிடைக்கும் என்பதை வைத்தே வாக்களிக்கின்றனர்.
மறைந்த தலைவர்இராம நாராயணனுக்கு பின் தகுதியான தலைமை சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கின்றனர் தற்போதும் திரைப்பட தயாரிப்பில் உள்ள தயாரிப்பாளர்கள். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நிழலும் நிஜமும், கரன்சியின் ஆதிக்கம் , அணிகளுக்குள் நடக்கும் உள்குத்து என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களுடன் “ஜெயிக்கப் போவது யாரு” சிறப்புத் தொடர் பிப்ரவரி 1 முதல் வெளிவர உள்ளது.