கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா ஆகியோரோடு வசித்து வருகிறார். கலையரசன் வனத்துறையில் தற்காலிக காவலராகப் பணியாற்றி வருகிறார். எப்படியாவது அரசு ஊழியராகி விட வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். ஆனால், உயர் அதிகாரிக்கும், தினேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் கலையரசனின் தற்காலிகப் பணியும் பறிக்கப்படுகிறது.
இதனால் தம்பியை எப்படியாவது அரசுப் பணியில் சேர்த்துவிடத் ஆசைப்படும் தினேஷ், குடும்ப ஜீவாதாரமான நிலத்தை விற்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு உருவாக்கிய சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைந்து பயிற்சி பெற தம்பியை அனுப்புகிறார்.
அங்கு என்னவெல்லாம் நடக்கின்றன? அவற்றின் விளைவுகளென்ன? என்பதை பதற வைக்கும் அளவுக்குப் பதிவு செய்திருக்கிறது தண்டகாரண்யம் திரைப் படம்.
பழங்குடியின இளைஞராகவே வாழ்ந்திருக்கிறார் தினேஷ்.
கலையரசனின் வேடமும் அதில் அவருடைய நடிப்பும் பார்ப்போரை படபடக்க வைத்திருக்கின்றன.
ரித்விகாவின் பாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் இடம்கொடுத்திருக்கலாம்.
பாலசரவணன், சபீர், முத்துக்குமார், வின்சு ஆகியோரது நடிப்பும் நன்று.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் வருகிற ஒப்பாரிப் பாடல் மனம் கனக்கச் செய்கிறது.பின்னணி இசையில் படத்தை முன்னணிக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஓ ப்ரியா ப்ரியா, மனிதா மனிதா ஆகிய இளையராஜா பாடல்கள் கதைக்களத்துக்கு வலுச்சேர்த்திருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா உழைப்பில்,வனங்கள் கண்களில் நிறைகின்றன.வனமக்களின் வாழ்க்கை வலி கண்களைக் கண்ணீரால் நிறைக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் அதியன் ஆதிரை திரையில்நாட்டில் நிகழ்ந்த உண்மைக் கொடுமைகளை அம்பலப்படுத்தியதோடு அதனை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தையும் கேள்வி கேட்டு வேடிக்கை பார்க்கும் ஒட்டுமொத்ததலைகுனிய வைத்திருக்கும் முதல் தமிழ் திரைப்படம் தண்டகாரண்யம் என்பது குறிப்பிடத்தக்கது.