தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மகுடம் சூடப்போவது யார்?

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால்
2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நடைபெற உள்ள தேர்தலில் இப்போது துணைத்தலைவராக இருக்கும் ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையில் ஒரு அணியும்,தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தலைமையில் ஒருஅணியும் போட்டியிடுகின்றனர்.  சுயேச்சையாக தலைவர் பதவிக்கு கடந்த முறை போட்டியிட்ட மன்னனும், செயலாளர் பதவிக்கு தற்போதைய செயலாளர் கதிரேசனும், இணை செயலாளர் பதவிக்கு விஜயசேகரன்
பொருளார் பதவிக்கு விடியல் ராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஜி.எம்.தமிழ்க்குமரன் தலைமையில்   துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ், எஸ்.கமலக்கண்ணன், செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன்,கமீலா நாசர், பொருளாளர் பதவிக்கு என்.சுபாஷ் சந்திரபோஸ், இணைச்செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த தேர்தலில் ஓரணியில் நின்ற முரளி ராமசாமியும் தமிழ்க்குமரனும் இத்தேர்தலில் எதிரெதிராக நிற்கிறார்கள்.இதனால், கடந்தமுறை நான் தலைவராகச் செயல்பட முடியாமல் போனதற்கு இவர்களே காரணம் என்று செயலாளர் துணைத்தலைவர் ஆகியோரைச்  சொல்கிறாராம் முரளி ராமசாமி.அதனால் இம்முறை அவர்களை விலக்கி வைத்துவிட்டு நான் புதிய அணியோடு தேர்தலைச் சந்திக்கிறேன் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று வாக்கு கேட்டு வருகிறார்.

முரளி ராமசாமி தலைவராக இருக்கிறார் அவர் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று நம்பியிருந்தேன் ஆனால் அவர் செயல்படவே இல்லை என்பதால் அவரை விட்டுவிட்டு அணி அமைத்துப் போட்டியிடுகிறோம் என்று தமிழ்க்குமரன் சொல்லி வாக்கு கேட்டு வருகின்றார்.

ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருந்த முரளி ராமசாமிக்கு தற்போது அந்த ஆதரவு இல்லை அதனால்தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்குமரன் அணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது என்று கூறப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சி தமிழ்குமரனை ஆதரிக்கவில்லை. அப்படி இருந்தால் முரளி ராமசாமியை போட்டியிட வேண்டாம் என கூறியிருக்கும். லைகா நிறுவனத்துடனான வணிக ரீதியான உறவின் அடிப்படையில் தமிழ்குமரன் அணிக்கு சுற்றுப்பயண ஏற்பாடுகளை ரெட் ஜெயண்ட் செய்து கொடுத்திருக்கிறது,தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு என்பதுஇல்லை என்கின்றனர் நடுநிலையான தயாரிப்பாளர்கள்.
தேர்தல் களத்தில் முரளி ராமசாமி, தமிழ்குமரன் இருவரது அணிகளும் தமிழகம் முழுவதும் இருக்கின்ற வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டு வரும் சூழலில் தலைவர் பதவிக்குஇருமுனை போட்டி என்று கூறப்பட்டு வந்த நிலையில் சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் மன்னனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருவதால்தலைவர் பதவிக்கான போட்டி மும்முனை போட்டியாக தீவிரமடைந்துள்ளது.இதனால் மன்னன் பிரதான தலைவர் பதவிக்கான போட்டியாளராக வாக்களர்கள் மத்தியில் முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளார்.
கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பதில் கரன்சி கவனிப்பு பிரதான பங்கு வகித்தது. அது இந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்தாது என்கின்றனர் மூத்த தயாரிப்பாளர்கள்.
முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், கதிரேசன் மூவரும் வாக்களிக்க தகுதியுள்ள தயாரிப்பாளர்கள் மத்தியில் குறிப்பிட்ட சதவீத  ஆதரவு பெற்றவர்களாக உள்ளனர். இவை மட்டுமே வெற்றியை தீர்மானிக்க போதாது. ரஜினிகாந்த், எஸ்.ஏ. சந்திரசேகர், முரளிராமசாமி, R.K. செல்வமணி, தேனப்பன் போன்ற தயாரிப்பாளர்கள் மட்டும்78 வாக்குகள் செலுத்த கூடியவர்களாக உள்ளனர்.நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 68 வாக்குகள் என 146 வாக்குகள் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிக்கும் இந்த வாக்குகளை கரன்சி மூலம் வாங்க முடியாது.
இருமுறை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து திறம்பட பணியாற்றியவர் மறைந்த இராமநாராயணன் அவரது வாரிசு என்கிற அடிப்படையில் தலைவர் பதவிக்கு போட்டியிட ராதாகிருஷ்ணனால் அழைத்து வரப்பட்டு இருமுறை வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன், தமிழ்குமரன் இருவரது பங்களிப்பில் இரண்டு தேர்தல்களை எதிர்கொண்ட முரளி ராமசாமி இம்முறை அவர்கள் இல்லாமல்தனி அணி அமைத்து போட்டியிடுகின்றார். ராதாகிருஷ்ணன், தமிழ்குமரன் இருவரும் தனி அணி அமைத்து போட்டியிடுகின்றனர்.  அதனால் தனித்து தனது சுய பலத்தை நம்பி தேர்தலை சந்திக்கின்றார் முரளி ராமசாமி.
அவரது பலம் பலவீனம் என்ன?
இருமுறை சங்கத்தின் தலைவராக பதவியில் இருந்த போதும் தயாரிப்பாளர்கள் எளிதில் அணுக கூடியவராக எப்போதும் அவர் இருந்ததில்லை என்கின்றனர் தயாரிப்பாளார்கள்.
அவர் தயாரித்த திரைப்படங்கள் மூலம் ஏற்பட்ட கடன் பிரச்சினை, நெருக்கடிகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே தலைவர் பதவி பயன்பட்டது எனக் கூறும் தயாரிப்பாளர்கள் ஆளும்கட்சியின் முதல்வர், அமைச்சர்களை சந்திப்பது, அதனையொட்டி அறிக்கை வெளியிடுவது மட்டுமே கடந்த நான்காண்டுகளில் அவரது சாதனையாக கூற முடியும் என்கின்றனர்.
பலம்….
முரளி ராமசாமிசமூகம் சார்ந்த, திமுக ஆதரவு தயாரிப்பாளர்கள் என சுமார் 300 வாக்குகள்  அவரது தந்தையை தொடர்ந்து முரளிராமசாமிக்கு பெரும் பலமாக இருந்து வருகிறது. இது எந்த நிலையிலும் மாறாது அவருக்கு கிடைக்க கூடியது. இதனை கடந்து பாரம்பர்யம், நடுநிலையுடன் கரன்சிக்கு கை நீட்டாதவர்களின் ஆதரவை பொறுத்தே இவருக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமடையும் என கூறப்படுகிறது.
தமிழ்குமரன் பலம், பலவீனம்?
கடந்த தேர்தலில் மன்னனை வீழ்த்தி முரளி ராமசாமி வெற்றி பெற வியூகம் அமைத்து, செலவுகளை சமாளித்த ராதாகிருஷ்ணன், தமிழ்குமரனை தலைவர் வேட்பாளராக முன் நிறுத்தியுள்ளார். தமிழ்குமரனுக்கு என்று வாக்கு வங்கி இல்லை என்றாலும் தனக்கு இருக்கும் வாக்குவங்கி பலம், குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் கைவசம் இருக்கும் 78 வாக்குகளில் பெரும் பகுதி தமிழ் குமரனால் பெற்று விட முடியும் என்பதுடன் மேட்டுக்குடி தயாரிப்பாளர்களின் வாக்குகள் தங்கள் அணிக்கே கிடைக்கும் என்பதுடன்கரன்சிக்கு வாக்களிப்பவர்களில் கணிசமான வாக்குகளை கைப்பற்றி விட்டால் தமிழ்குமரன் வெற்றி உறுதியாகி விடும் என்கின்றனர்தமிழ்குமரன் தலைமையிலான அணியினர்.
தமிழ்குமரன் பலவீனமாக தயாரிப்பாளர்கள் மத்தியில் கூறப்படுவது
 முரளி ராமசாமி தலைமையில் துணை தலைவராக இரண்டு வருடங்கள் இருந்தவர் நிர்வாக குழு கூட்டங்களில் கூட முழுமையாக கலந்து கொண்டதில்லை. லைகா நிறுவன தலைமை நிர்வாகியாக அந்த நிறுவனத்தையே வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக மாற்ற முடியாதவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தை எப்படி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்கிற கேள்வியை எழுப்புகின்றனர்.
 சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் நலனுக்கு எதிராக செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் சூழலில் ஒரு கார்ப்பரேட் நிறுவன நிர்வாகி  தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு வருவது சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
 இவற்றையெல்லாம் கடந்து வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்று தமிழ்குமரன் தலைவராக வெற்றி பெறுவார் என்கின்றனர் தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணியினர்.
சுயேச்சை, அணி அமைக்கவில்லை தேர்தல்களத்திற்கே வர மாட்டார் என்று கடந்த வாரம் வரை கூறப்பட்டு வந்த மன்னன் தலைவர் பதவிக்கான போட்டியில் சமபல போட்டியாளராக களத்தில் விஸ்வரூபம் எடுத்திருப்பது மற்ற இரண்டு அணியின் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது என்பது கள நிலவரமாக உள்ளது.
கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மன்னன் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
சுபாஷ் சந்திர போஸ் தமிழ் குமரன் அணியின் பொருளாளர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் மன்னன்அணி அமைக்காமல்
தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிடுகிறார்.
சுயேச்சையாக செயலாளர் பதவிக்குபோட்டியிடும் கதிரேசன், இணை செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் விஜயசேகரன் இருவரும் செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடும் சிலரை இணைத்து கொண்டு தங்கள் அணியின் தலைவர் வேட்பாளர்மன்னன் என அறிவித்து வாக்கு கேட்டு வருகின்றனர்.
இதனால் கதிரேசன் வசம் இருக்கும் கரன்சிவாக்குகள் மன்னனுக்கு கிடைக்ககூடும் என்கின்றனர்.
இருமுறை தலைவர் பதவியில் இருந்த போதும் தீவிரமாக செயல்படாத முரளி ராமசாமி, கார்ப்பரேட் பிரதிநிதியாக கருதப்படும் தமிழ்குமரன் இருவரையும் வேண்டாம் என்பவர்களும்  மன்னனுக்கு வாக்களிக்க கூடும் என்கின்றனர்.
இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு வெற்றி பெற போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மன்னன் மாறியுள்ளார். இதனால்” தலைவர்” மகுடம் சூட வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பது மன்னன் தேர்தல்கள வருகைக்கு பின்பு மதில் மேல் பூனையாக மாறியுள்ளது.
– இராமானுஜம்.