ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவர் ஜெகன்ராயன் இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”
அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
ஏலகிரியில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் ஹீரோ, ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான் கதை.
ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் 15.03.2026 ஆம் தேதிநடைபெற்றது.
நிகழ்வில்‘ரூம் பாய்’ படத்தின் இயக்குநர் ஜெகன் ராயன் பேசியதாவது..,
“நிறைய பேச மாட்டேன்… திரைப்படத்தில்தான் பேசுவேன். “இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது” இந்த இசை வெளியீட்டு விழாவை எனது தந்தை என்.வி. சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன், “என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான் என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்”.
அவரின் ஆதரவில் இயக்குநர் படிப்புக்கு பதிலாக Sound Engineering and Recording படிப்பு படித்து 2004 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் மாநில விருதை பெற்றேன்.
“சினிமா ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர். மூழ்கிப் போகிறவர்கள் பலர். இருந்தாலும் எனக்குள் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது”. பல வருட போராட்டத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம்
எனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன்,
ஆனால் அவர் அதற்கு பதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார்.“எனக்கு தோல்வி வந்து ரொம்ப பழசு. நிறைய தோல்விகளை சந்தித்த பிறகுதான் இன்றைய நிலையை அடைந்தேன். ஆனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும்” என்று தயாரிப்பாளர் கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.
படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார், அதனால் தான் என்னால் இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்க முடிந்தது. “இந்த படம் எங்களுக்கு அனைவருக்கும் ஒரு பெரிய பயணம். நிச்சயமாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.