நாங்கள் – திரைப்பட விமர்சனம்

குழந்தைகளுக்கான திரைப்படம் என்பது இந்தியாவில் குறைவாகவே எடுக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ் சினிமாவில்  எப்போதாவது ஒரு சில படங்கள் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படுகின்றன. அப்படியாக குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிங்கிள் பேரண்ட் படும் அவஸ்தையையும், அதனால் குழந்தைகளின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதையும் விவரிக்கிறதுஇயக்குனர் அவினாஷ் பிரகாஷ் இயக்கியுள்ள ‘நாங்கள்’ திரைப்படம்.
ஊட்டியில் கான்வெண்ட் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வரும் அப்துல் ரபே, தன் மனைவி பிரார்த்தனாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரிடம் மூன்று மகன்களும் வளர்கின்றனர். மூன்று மகன்களையும் மிகவும் கண்டிப்பாக வளர்க்கிறார். இருப்பினும் குழந்தைகளை வளர்ப்பதில் அவருக்கு சிரமம் ஏற்படுகிறது. அதோடு வீட்டில் மிகவும் தனிமையில் அவதிப்படுகிறார். இதன் காரணமாக மகன்களும் சந்தோஷமாக இல்லை. இந்த சூழ்நிலை தொடர்ந்ததா? இதற்கு யார் காரணம்? அவர் மனைவியை விட்டு ஏன் பிரிந்தார்? இறுதியில் குழந்தைகளின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் அறிமுக நடிகராக களம் இறங்கி உள்ள அப்துல் ரபே, மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகன்களிடம் கண்டிப்பாக நடந்து கொண்டாலும், சில காட்சிகளில் நகைச்சுவை கலந்த வில்லன் போல் நடித்து அசத்தியுள்ளார்.

மகன்களாக நடித்து இருக்கும் மிதுன், ரித்விக், நிதின் ஆகியோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இவர்கள் மூவருமே ஊட்டியில் வசிக்கும் படுகர் இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரார்தனா, ஸ்ரீகாந்த், ராக்சி, ஜான், தணிகா குருபிரசாத் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். இயக்குனர் பொறுப்போடு ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் வேலையையும் அவினாஷ் பிரகாஷ் சிறப்பாக செய்துள்ளார்.
இரவு காட்சிகளை மிகவும் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார். இவரது ஒளிப்பதிவில் ஊட்டி அழகாக தெரிகிறது. வேத் ஷங்கரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இருப்பினும் திரைக்கதை ஓட்டம் ரசிகர்களை சோர்வடைய செய்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை புகுத்தி இருந்தால் மேலும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.