பட வேட்டு – விமர்சனம்

எங்கள் மண் எங்களுக்கே எனும் மண்ணுரிமைப்போராட்டத்தை மையப்படுத்தி கன்னடத்தில் வெளியான காந்தாரா மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.அதற்கு இணையாக மலையாளத்தில் வெளியாகி வரவேற்புப் பெற்றிருக்கும் படம் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருக்கும் படவெட்டு.
தொப்பையும்தொந்தியுமாய் இருப்பதோடு எப்போதும் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள மல்லூரில், மல்லூர் எக்ஸ்பிரஸ் என்று பெயரெடுத்த விளையாட்டுவீரர். ஓட்டப்பந்தயம், மோட்டார் பந்தயம் ஆகியனவற்றில் முன்னிலை வகித்த அவரை மோட்டார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து முடக்கிப்போடுகிறது.அதிலிருந்து அவர் மீண்டாரா? அவருடைய இயலாமை எப்படிப்பட்ட விளைவுகளையெல்லாம் ஏற்படுத்துகின்றன? என்பதை அழுத்தந்திருத்தமாய் சொல்லியிருக்கிறது படவெட்டு. 
என்ன இது? நிவின்பாலி இப்படி ஒரு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாரே? என்று நினைக்க வைக்கிறது முக்கால்வாசிப்படம். இறுதியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எல்லாவற்றையும் நேர்மறையாக்கிவிடுகிறது.அமைதியாக அதேசமயம் ஆழமான அவருடைய நடிப்பு படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.
சோர்ந்திருக்கும் நிவின்பாலியை ஊக்கப்படுத்துவதற்காகவேநாயகி அதிதிபாலன் இருக்கிறார். கண்களிலேயே அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் சிறப்பு.அரசியல்கட்சித் தலைவராக வருகிறார் ஷம்மிதிலகன். அவருடைய அப்பா திலகனுக்கு இணையாக நடிப்பில் மிரட்டுகிறார்.
தீபக்மேனனின் ஒளிப்பதிவில் கண்ணூரின் அழகு கட்டற்றுக் காணக்கிடைக்கிறது.
கொட்டும்மழையில் தேநீர்க்கடைக் காட்சிகள்அழகு.கோவிந்த்வசந்தாவின் இசை படத்தின் மதிப்பை உயர்த்துகிறது. லிஜுகிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கிறார். 

பரப்புரை தொனியில்லாமல் ஆதிக்கச் சக்திகள் எப்படி இயற்கையையும் மண்வளத்தையும் கொள்ளையடிக்கின்றன என்பதை ஷம்மிதிலகனின் தொழிலை வைத்துச் சொல்லியிருக்கிறார்.
கேரளாவில் சிவப்பு சிந்தனையுடைய பொதுவுடைமைக் கட்சிக்கு மாற்றாகக் கட்சியை வளர்த்து அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் அரசியல்கட்சி செய்யும் தகிடுதத்தங்கள், சூழ்ச்சிகள் ஆகியன அப்படியே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜகவை நினைவுபடுத்துகின்றன. 
இப்படி நேரடியாகக் குற்றம் சாட்டும் துணிவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.மண்ணுரிமையை நிலைநாட்ட அவ்வளவு பெரிய கூட்டத்துக்குள் தனிமனிதனாய் நிவின்பாலி களமிறங்கும்போது கையில் ஈட்டியுடன் அப்பாவின் தோளில் அமர்ந்த காட்சியைக் காட்டும்போது சிலிர்ப்பாக இருக்கிறது.பாஜகவின் சதிகளை அப்பட்டமாகத் தோலுரிக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்று செய்து வெளியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.படவெட்டு என்றால் போர் என்று பொருளாம்.அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக நிவின்பாலி நிகழ்த்தும் போர்தான் இப்படம். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதைத் தன் நடிப்பால்பலமடங்கு உயர்த்தியிருக்கும் நிவின்பாலிக்கு வாழ்த்துகள்.