சூப்பர்நேச்சுரல் திகில் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. வெறுமனே ரசிகர்களை பயமுறுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், கதைக்கேற்ற தொழில்நுட்பத்தை துல்லியமாக திரையில் கொண்டுவந்து பார்வையாளர்களை தக்க வைப்பதிலும் படத்தின் வெற்றி அடங்கியுள்ளது.
‘தி கான்ஜுரிங்’ மற்றும் ‘தி ஈவில் டெட்’ போன்ற ஹாலிவுட் ஃபிரான்சைஸ் படங்கள் ஒரே மாதிரியான கதாபாத்திர தொடர்ச்சி மற்றும் சூழ்நிலையுடன் கூடிய சூப்பர்நேச்சுரல் படங்கள் எவ்வாறு ரசிகர்களை தக்கவைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
தமிழ் சினிமாவிலும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டிமான்டி காலனி’ படத்தின் தொடர்ச்சி மூலம் இதேபோன்று ரசிகர்களை தக்க வைத்துள்ளார். படத்தின் முந்தைய இரண்டு பாகங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றதை தொடர்ந்து 2026 ஆம் வருடத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘டிமாண்டி காலனி3’ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியிருப்பதாவது “‘டிமாண்டி காலனி3’ படத்துடன் புதுவருடம் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கிரியேட்டிவ் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் அஜய் படத்தை மிகவும் நேர்த்தியாக எடுத்துள்ளார். தயாரிப்பாளராக எனக்கும் இது நம்பிக்கை அளித்தது. அருள்நிதியின் கமிட்மெண்ட்டும் அவரது உழைப்பும் இந்தப் படத்தின் மிகப்பெரிய நங்கூரம். இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் இன்னும் ஆழமாக இந்த மூன்றாம் பாகத்தில் இருக்கும். ரசிகர்கள் எதிர்பார்ப்பை மூன்றாவது பாகம் நிச்சயம் பூர்த்தி செய்யும்” என்றார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து பகிர்ந்து கொண்டதாவது,
“புது வருடத்தில் ‘டிமாண்டி காலனி3’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பகிர்ந்து கொள்வது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்திற்கு முழு ஆதரவு கொடுத்த சுதன் சாருக்கு நன்றி. கதையில் எந்தவிதமான தலையீடும் செய்யாமல் எங்களை சுதந்திரமாக பணிபுரிய வைத்தார். நடிகர் அருள்நிதிக்கும் நன்றி. முந்தைய படங்களை விட இதில் அருள்நிதியின் நடிப்பை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்றார்.
ஞானமுத்து எழுதி இயக்கியுள்ள ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.