“பாக்கெட் நாவல்” பெயரில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்

பாக்கெட் நாவல்” என்பது கிரைம் கதைகளை விரும்பிபடிக்கும் தமிழர்கள் மத்தியில் பிரபலமானது. புதிதாக வாசிப்பு உலகில் நுழையும் வாசகர்களை தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை வளர்த்ததில்” பாக்கெட் நாவல்” முக்கிய பங்கு வகித்தது. அந்தப் பெயர் விஜய் சேதுபது நாயகனாக நடிக்கும் படமொன்றிற்கு வைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் மூலம் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் பி ஷெட்டி தமிழ்படத்தில் அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ என்ற தொடருக்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாகத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்ட்ரூ லூயிஸ் கதை மற்றும் திரைக்கதை எழுத, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.

திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்தின் கீழ் தியாகராஜன் குமாரராஜாவே இந்தப் படத்தைத் தயாரிக்கின்றார்.

கடந்த 2019-ல் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்குச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால், ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.