பூரி ஜெகன்நாத் இந்திய சினிமா தவிர்க்க முடியாதவர் – விஜய் சேதுபதி

பூரி கனெக்ட்ஸ் – ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள,  விஜய்சேதுபதி  நடித்திருக்கும்   திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடந்த படத்தின்  டீசர்  வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ” முதலில் துனியா விஜய் சாரைப் பற்றி சொல்லவேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்டகாலமாக கவனித்து வருகிறேன்.
கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார்.
விடிவி கணேஷ் சாரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு. ஆனால், அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்துகொள்ள முடிந்தது. சம்யுக்தா மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார்.
பூரி ஜெகன்நாத் ஒரு வரலாறு. அவரது சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது.
பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது” என்றார்.
ஸ்லம் டாக் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.