மக்கள் அரசியல் பேசும் சிறை – திரைப்பட விமர்சனம்

சினிமாவை நேசிப்பவர்கள்

இணைகிறபோது சிறந்த திரைப்படங்கள் திரைக்கு வரும். அந்த வகையில் ஆண்டின் இறுதியில் வெளிவந்திருக்கும் சிறை திரைப்படம் மக்களை சிறைப்பிடித்திருக்கிறது
என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில்.
காவலர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் மன உணர்வுகள்,செயல்பாடுகள் ஆகிய நுட்பமான நிகழ்வுகளைப் பதிவு செய்து,ஒரு கைதி இஸ்லாமியர் என்றால் அவரை சமுதாயம் எப்படிப் பார்க்கிறது? என்பதையும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி கவனம் ஈர்க்கிறது இப்படம்.
சிறை கதை என்ன?
சிறை என்று பெயரிருந்தாலும், பேருந்திலும் லாரியிலும் ஆட்டோவிலுமாக அப்துலை கதிரவன் குழுவினர் இட்டுச் செல்லும் நீண்ட பயணம்தான் திரைக்கதை. காவலர்களின் கடமையுணர்வற்ற செயல்கள், வழியில் ஒரு காவல்நிலையத்தில் ஒரு குறுகிய விசாரணை, நீதிமன்றத்தில் விரைவாக உள்ளே அழைக்கப்படுவதற்கு தலைமைக்காவலராகவே இருந்தாலும் ரகசியமாகக் கையில் பணத்தை ஊட்டுகிற அவலம் (இதனால்தான் கையூட்டு என்ற சொல்லாடல் வந்ததோ?), காவல்துறைக்குள் நேர்மையானவர்களும் அதைத் துறந்தவர்களுமாக இரு பிரிவினர் இருப்பது போலவே நீதித்துறையிலும் பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்கிறவர்களும், “எனக்கே சட்டம் சொல்லித் தர்றீங்களா,” என்று தன்னகங்காரம் கொள்கிறவர்களுமாக இரு பிரிவினர் இருப்பது… இப்படி அந்த நீண்ட காவல் பயணத்தில் காட்சிப்படுகின்றன.
‘டாணாக்காரன்’ படத்துக்குப் பிறகு காவல்துறையின் இன்னொரு பிரிவு பற்றிய துல்லியமான படம் இது.
ஐந்து ஆண்டுகளாக ஒருவன் விசாரணைக் கைதியாகவே இருக்கிறான். இயல்பாக அவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறைவாசத்துக்கு அதிகமான காலம். அதன் பின்னணி, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள், போதுமான நீதிமன்றங்கள் இல்லாமை, துறைகள் சார்ந்த மெத்தனம் போன்றவை மட்டுமல்ல – அவன் பெயர் அப்துல் என்பதும்தான். கூர்மையாகவும், கச்சிதமான அளவோடும் மதமாச்சரியப் பார்வையை விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். இடைவழியில் அவர்கள் எதிர்கொள்ளும் காவல் நிலைய அதிகாரி கேட்கிறார். கைதியை அழைத்துச்செல்கிறபோது, விதிமீறலாகத் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரம்பியிருப்பது ஏன்?
“அய்யா, அக்யூஸ்டு ஒரு முஸ்லிம்..  அதனாலதான்…” என்று இவர்கள்  பதிலளிக்கிறார்கள். “அதுக்கு?,” என்று கேட்கிறார் அதிகாரி. ‘அயோத்தி’ படத்தில் கதாநாயகன் தன் பெயர் என்ன என்று கடைசியில் சொல்வானே, அதே போல் அந்த அதிகாரி தன்னை வெளிப்படுத்துகிறார். அரங்கம் கரவொலிகளால் நிரம்புகிற மற்றுமொரு தருணம் அது.
நீதிபதியின் தனியறை விசாரணைக்குப் பிறகு வெளியே வரும் அப்துலும் கலையரசியும் கதிரவன் காலில் விழுந்து கதறுகிறபோது கண்கள் துளிர்க்கும் அக்‘ஷய் குமார், அனுஷமா அனில்குமார் இருவரும் முதல்படமென்றே தோன்றாத அளவுக்குச் சிறப்பான ஒத்திகைகளை மேற்கொண்டு நடித்திருப்பது தெரிகிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையாலும், மாதேஷ் மாணிக்கம் படப்பதிவாலும்,  பிலோமின் ராஜ் படத்தொகுப்பாலும் இயக்குநரின் நோக்கத்திற்குப் பங்களிக்க, இவ்வாண்டின் முக்கியமான ஒரு சினிமாவை ஆண்டிறுதியில் வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் எஸ். எஸ். லலித் குமார்.
டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.அவர் நிஜத்தில் காவலராக இருந்தவர் என்பதால் அவர் அறிந்த உண்மை நிகழ்வைக் கதையாக்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, கதையின் கருவை பொறுப்பாகச் சுமந்து அழகிய குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறார்.
பேருந்து நிறுத்தங்களில், சிறைக் கைதிகள்,அவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் காவலர்கள் ஆகியோரை அடிக்கடி பார்க்கலாம்.இதுவரை மிக எளிதாக அவர்களைக் கடந்து சென்றுவிடுவோம்.இனி நின்று பார்த்துச் செல்வோம்.