கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கலை இலக்கிய மற்றும் திரைப்பட வெளியில் ஆக்கபூர்வமாக இயங்கிவருபவர் எழுத்தாளர் அஜயன் பாலா. பாலுமகேந்திரா பள்ளியில் படித்த அவரது முதல் திரைப்பட முயற்சிதான் மைலாஞ்சி. தென்றலைப்போல வருடும் மெல்லிய காதல் கதை.
ஊட்டியில் தொடங்கி அதே ஊரிலேயே முடியும் காதல். ஊட்டிக்கு வரும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் கார்த்தி, அங்கு கிரிஷா குரூப்பைச் சந்திக்கிறார். ஏற்கெனவே அந்தப் பெண்ணுக்கு ஒரு காதல் தோல்வி. மீண்டும் அந்தப் பழைய காதலனைச் சந்தித்துப் பேச விரும்புகிறார்.
தன் மனத்துக்குப் பிடித்த பெண்ணின் முதல் காதலனுடன் இமெயில் மூலம் தொடர்பு கொள்கிறார். இரண்டு முறை வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றியவர், திடீரென ஒரு நாள் காதலியைச் சந்திக்கும் ஆர்வத்துடன் ஊட்டிக்கு வருகிறார். திருமணமும் நிச்சயமாகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘மைலாஞ்சி’ படத்தின் திரைக்கதையாக விரிகிறது.
ஊட்டிக்குப் போய்வந்ததுமாதிரியான உணர்வைத்தான் படம் பார்க்கும்போது நாம் உணர்வோம். சிறு ரத்ததமும் சிந்தாத காதல் கதை. மெல்லிய நீரோடை போன்ற சிக்கல் இல்லாத திரைக்கதை. அதுவே இப்படத்திற்கும் சுவாரசியத்திற்கும் பலவீனமாக மாறுகிறது.
புகைப்படக் கலைஞரான கார்த்திக், கிரிஷா குரூப்பைப் பார்த்ததும் காதலிப்பதற்கான அழுத்தமான காரணங்களை முன்வைக்கவில்லை. அதே நேரத்தில் கிரிஷாவின் காதலுக்கு உதவும் சிறுவனின் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. எந்த எதிர்பாராத திருப்பங்களையும் திரைக்கதையில் இயக்குநர் சேர்க்கவில்லை.
கிரிஷா குரூப்பின் தோற்றமும் பதின்பருவ சிறுமியைப் போன்ற செயல்பாடுகளும் ரசிக்க வைக்கின்றன. முனிஷ்காந்த், சிங்கம்புலி கதாபாத்திரங்கள் படத்தில் காமெடி பஞ்சத்தைத் தீர்க்கிறது. ஒளிப்பதிவாளர் செழியனின் ஒளிப்பதிவு, ஊட்டியின் அழகை ஒரு கவிதையைப் போல ஒளியில் எழுதிவைத்திருக்கிறது.
காதல் காட்சிகளின் அழகை தன் நேர்த்தியான அழகியல்மிகுந்த ஒளிப்பதிவின் மூலம் ரசிக்கவைத்திருக்கிறார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. எங்கேயோ கேட்டதுபோல இருக்கின்றன. பின்னணி இசையில் பெருமைப்படுத்தியுள்ளார்.
காதலை உணர்வுபூர்வாக அமைதியாக சொல்ல முயற்சிசெய்திருக்கும் அஜயன்பாலா பாராட்டுக்குரியவர். முதல் முயற்சியில் வென்றிருக்கிறார். நவீன காலத்திற்கேற்ப திரைக்கதையை அமைத்திருந்தால் ‘மைலாஞ்சி’ மனதில் நிற்கும் படமாக இருந்திருக்கும்.
– சுந்தர புத்திரன்