அவருடைய குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில்தான் சுடலை மாடன் சாமிக்கு சிலை இருக்கிறது. அங்கேதான் ஒவ்வொரு வருடமும் சுடலைமாடன் கொடை விழாவை நடத்துவார்கள்.ஆனால் சில ஆண்டுகளாகசுடலை மாடன் கொடை விழா நடத்த முடியாமல் இருக்கிறது.
முருகனின் தந்தை திடீரென்று நோய்வாய்ப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்றவர் கடைசியாக தன்னுடைய மருத்துவ செலவுக்காக சுடலை மாடன் சிலை இருந்த அந்த நிலத்தை அதை ஊரைச் சேர்ந்த ஞானமுத்து என்பவரிடம் அடமானமாக வைத்துவிட்டார்.
மருத்துவர்கள் சிகிச்சை பெற்று நல்ல உடல் நலம் பெற்று வீடு திரும்பிய அவர் அந்த பணத்தினால்தான் உயிர் பிழைத்ததாக கருதி திடீரென்று கிறிஸ்தவ மதத்துக்கு மாறி தன்னுடைய பெயரையும் தாமஸ் என்று மாற்றிக் கொண்டார். அவருடைய மனைவியும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார். ஆனால் முருகன் மட்டும் இன்னமும் மாறவில்லை.
இந்த நேரத்தில் பாட்டிக்கு சீரியஸ் என்ற செய்தியை அறிந்து ஊர் திரும்ப முருகனிடம் அவருடைய பாட்டி, “இந்த வருஷமாவது சுடலை மாடனுக்கு விழா நடத்துப்பா.. நேர்த்திக் கடன் பண்ண முடியாமல் சொந்தக்காரங்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..” என்று வற்புறுத்துகிறார்.
பாட்டி சொல்லைத் தட்டாமல் சுடலை மாடனுக்கு விழா நடத்த நினைக்கிறார் முருகன். இதன் முதல் கட்டமாக அந்த நிலத்தை மீட்க முயற்சிகள் இறங்குகிறார். ஆனால் பணம் கடனாக கொடுத்த ஞானமுத்து 30 இலட்சம் ரூபாய் கொடுத்தால் நிலத்தை திருப்பி தருவதாக சொல்கிறார். 30 லட்சம் மிகப் பெரிய தொகை என்பதால் அதை தருவதற்கு முருகனால் முடியவில்லை.
இது விஷயமாக பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு நடக்கும் ஒரு பஞ்சாயத்தில் அடிதடி நடந்து அதில் ஒரு கொலையும் நடந்துவிடுகிறது. அந்தக் கொலைப் பழி முருகன் மீது விழ, முருகனும் சிறைக்கு செல்கிறார்.
இதனால் இந்த கொடை விழா நடக்குமா.. நடக்காதா… என்று மறுபடியும் அந்த ஊர் மக்களிடையே மிகப் பெரிய குழப்பம் ஏற்படுகிறது.
முருகன் சிறையில் இருந்து மீண்டாரா.. ஊர் மக்கள் கொடை விழாவை நடத்தினார்களா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.
முருகனாக நடித்திருக்கும் புதுமுகம் கோகுல் கௌதம் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்திற்கு அப்படியே மிக கச்சிதமாக பொருந்தியுள்ளார்.அதே சமயம் கிளைமாக்ஸ் சீனில் அவருடைய உடலுக்குள் சுடலை மாடன் புகுந்தவுடன் அவர் ஆடுகின்ற அந்த வெறி ஆட்டம் அட்டகாசம் என்று சொல்லலாம்.
ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் சூப்பர்குட் சுப்பிரமணியம் தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை காண்பித்திருக்கிறார். தன்னுடைய இயலாமை, கோபம் தன்னுடைய குடும்பத்திற்கு தன்னால் நடந்திருக்கின்ற இவ்வளவு பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டு… ஞானமுத்துவிடம் போய் மறுபடியும் கெஞ்சுகின்ற பொழுது இப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு சோதனையா என்று நாம் பரிதாபப்படத்தான் முடிகிறது.
சின்ராஜ் ராமின் ஒளிப்பதிவில் அந்த கிராமத்து அழகு பளீச்சென்று தெரிகிறது. கிராமத்தை அப்படியே நம் கண்முன்னே காண்பித்திருக்கிறார். விபினின் இசையில் பாடல்கள் கேட்கும்விதமாக மிக, மிக எளிமையான வார்த்தைகளினால்… நம் காதுகளுக்குள் நுழைந்து புரிய வைத்திருக்கின்றன. அதேபோல் பின்னணி இசையையும் மென்மையாக போட்டிருக்கிறார். ஆனால், கடைசியாக சுடலை மாடன் சாமி ஆடுகின்ற ஆட்டத்திற்கு போட்டிருக்கும் அந்த இசை அட்டகாசம். ஆர்ப்பாட்டமானது.
இந்தப் படத்தில் போகிற போக்கில் சொல்லப்பட்டிருக்கும் மதமாற்றம் என்பது ஒரு மனிதனுக்கு அமைதியை தருமா? அவனுடைய வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்குமா.. அவனுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை சொல்லுமா… என்பதை இந்த படத்தில் பதிவு செய்து இருக்கிறார் இயக்குநர்.
அதற்கான வசனங்களும் இந்த படத்தில் மிக அழகாக எழுதப்பட்டிருக்கின்றன, அந்த வகையில் கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி, இந்து மதமாக இருந்தாலும் சரி.. அன்பையும், பண்பையும், நேசத்தையும், பாசத்தையும் காட்டுகின்ற எந்த மதமும் ஏற்புடையதுதான் என்பதை இந்தப் படத்திலும் அழுத்தந்திருத்தமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் தங்கப்பாண்டி.