ரஜினிகாந்த் நடிக்கும் பட வேலைகளை தொடங்கிய ராஜ்கமல்

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 ஆம் தேதி அந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சுந்தர்.சி அறிவித்துவிட்டார்.

கதையில் தலையீடு இருந்ததால் அவர் விலகிக்கொண்டார் என்று சுந்தர்.சி தரப்பில் சொல்லப்பட்டது.இதுதொடர்பாக கமல் கொடுத்த பேட்டியில், ரஜினிகாந்துக்குக் கதை பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.அதன்பின்,ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கப்போவது யார்? என்கிற கேள்வி எல்லோருக்கும் இருந்தது.

அந்தநேரத்தில், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரஜினி ஆகிய இருதரப்பின் ஒப்புதலோடு, பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மகாராஜா பட இயக்குநர் நித்திலன் மற்றும் டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோரிடம் ரஜினிக்காக கதை எழுதும்படி சொல்லியிருந்தார்களாம்.

இவர்களில் யாருடைய கதை ரஜினிக்குப் பிடிக்கிறதோ? அந்தக் கதையில் அவர் நடிக்கட்டும் என்று ராஜ்கமல் தரப்பில் சொல்லப்பட்டது.

இப்போது இந்த மூன்று இயக்குநர்களில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார்? என்கிற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

மூன்று பேரில் அஸ்வத் மாரிமுத்துவின் கதையில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.கதையில் சிற்சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டு அந்த வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

இதனால், ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள்.

அதனால், தை பிறந்தவுடன் ஒரு நன்னாளில் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன்ஆகிய இருவருக்கும் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லப்படுவதால், அப்படத்தின், முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் நாயகி உள்ளிட்டு மற்ற நடிகர் நடிகைகள் ஒப்பந்தம் ஆகியன தொடர்பான வேலைகள் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.