போராளிப் படைத் தலைவராக நடித்திருக்கும் சனத்,நம் மக்களுக்குப் பாதிப்பின்றி எதிரிப்படையைத் தாக்கவேண்டும் என்கிற பொறுப்புடன் இருக்கும் அசல் போராளியாகவே வாழ்ந்திருக்கிறார்.
ஈழப்பெண்களாக நடித்திருக்கும் ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்தமக்களின் துயர்களை தம் கண்கள் மூலமாகவும் உடல்மொழிகள் மூலமாகவும் வெளிப்படுத்திப் பதற வைத்திருக்கிறார்கள்.
நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகிய நடிகர்களின் கதாபாத்திரங்களும் அவற்றில் அவர்களின் நடிப்புகளும் அதிர்வை ஏற்படுத்துகின்றன.
மிக மிக முக்கியமான ஒரு வரலாற்றைக் காட்சிப்படுத்துகிறோம் அதை அசலாகப் பதிவு செய்யவேண்டும் என்கிற கவனத்துடன் கதைக்களத்துக்கேற்ற ஒளியமைப்புகளை நேர்த்தியாக வடிவமைத்துபடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பார்த்திபன்.
படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்,இப்படம் பேசும் செய்தி சரியாகப் போய்ச்சேரவேண்டும் என்கிற சிரத்தையோடு படத்தைத் தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் சோமிதரன்.தமிழீழ விடுதலைப் போராட்டக் காலகட்ட துயர்களையும் வலிகளையும் இரத்தம்,மரணம் ஆகியன இல்லாமலேயே பதிவு செய்திருக்கிறார்.அதோடு,இதுவரை யாரும் சொல்லாத இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களை பதிவு செய்திருக்கிறார்.