ஒரு நாள் விலைமாதுவைச் சந்திக்கப் புறப்படும்போது தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். அப்போது கீர்த்தி சுரேஷ் அவரை பலம் கொண்டு தாக்குகிறார். தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே உயிரை விடுகிறார் சூப்பர் சுப்பராயன். கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, சட்ட விரோதமாக சடலத்தை அப்புறப்படுத்த மொத்த குடும்பமும் களத்தில் இறங்குகிறது.
ஆனால் நினைத்தபடி அதைச் செய்ய முடியாதளவுக்கு காவல்துறை அதிகாரியின் பழிவாங்கும் நோக்கம், வில்லன்களின் துரத்தல் என பல பின்னடைவுகளைச் சந்திக்கிறார்கள்.
இறுதியில் கீர்த்தி சுரேஷ் சடலத்தை அப்புறப்படுத்தினாரா? கொலை பழியிலிருந்து தப்பித்தாரா? என்பது மீதிக் கதை.
பக்திப் பரவசத்தோடு வரும் ராதிகா, அம்மா வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருப்பதோடு தன் அனுபவத்தால் திரை இருப்பை தனதாக்கிக் கொள்கிறார்.
வில்லன்களாக வரும் சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ்,காவல்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் ஆகிய அனைவரும் பதட்டம் இல்லாமல் நடித்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிங்ஸ்லி சிரிக்க வைத்துள்ளார்.மற்ற வேடங்களில் வரும் சென்ராயன், சுரேஷ் சக்கரவர்த்தி, ப்ளேடு சங்கர், ராமச்சந்திரன் உட்பட அனைவரும் இயக்குநர் கட்டளையை அப்படியே செய்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் பிளாக் காமெடி படத்துக்கு எற்ப வித்தியாசமான வண்ணத்தில் ஒளிப்பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
பாடல்கள் இல்லை என்பதால் பின்னணியிலேயே தன் இருப்பை வெளிப்படுத்தி உள்ளார் இசையமைப்பாளர் சான் ரோல்டன்.
ஒரு சடலத்தை மறைக்க ஒரு சாமானியப் பெண் என்ன செய்யமுடியும் என்பதை காட்சிக்குக் காட்சி நகைச்சுவை கலந்து கொடுப்பது என்று முடிவு எடுத்து லாஜிக் பார்க்காமல் மேஜிக் செய்ய நினைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே.சந்துரு.