லவ் ஷேர் அண்ட் சப்ஸ்கிரைப்- திரைப்பட விமர்சனம்

காதல் என்பது காதலிக்கும் ஆண், பெண்  சம்பந்தப்பட்டது மட்டுமன்று.அது இரண்டு குடும்பங்களுக்குமானது என்றொரு கருத்தை மையமாக வைத்திருக்கும் படம் லவ் ஷேர் அண்ட் சப்ஸ்கிரைப்.

நாயகன் ஆதவ் கிருஷ்ணா மீது நாயகி சிம்ரனுக்குகாதல். நாயகன் விலகிப் போனாலும் விடாமல் விரட்டி காதலிக்கிறார்.அதன்விளைவாக நாயகன் மட்டுமின்றி அவருடைய பெற்றோர் சம்மதமும் பெறுகிறார். அதன்பின், தந்தையை விட்டு பிரிந்து வாழும்தன்னுடைய தாயை தேடிப் போகிறார் நாயகி. அப்போது ஏற்படும் சிக்கல்கள்,அவற்றின் முடிவென்ன? என்பதுதான் படம்.

புதுமுக நடிகர் ஆதவ் கிருஷ்ணா நாயகனாகமுதல்படத்திலேயே காதல், பாசம் ஆகியன மட்டுமின்றி நகைச்சுவையும் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சித்திருக்கின்றார்.

நாயகி சிம்ரனுக்கும் அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.

படவா கோபி, வினோதினி,ஜாவா சுந்தரேசன், தனஞ்செயன்,ரோகித், முத்து புவன் உள்ளிட்ட நடிகர்களும் தத்தம் கதாபாத்திரங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

என்.எஸ்.சதீஷ்குமார் காட்சிகள் அனைத்தும் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.காசி நகரத்தை அவர் பார்வையில் பார்த்து நமக்கு மாறுபட்ட உணர்வுகளைக் கொடுத்திருக்கிறார்.

அஸ்வமித்ரா பின்னணி இசை மூலம் காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் என்.பி.ஶ்ரீகாந்த் உழைப்பில் படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.

கதை வசனம் எழுதியிருக்கும் அசோக் அமிர்தராஜ், காதல் கதையை மாற்றி யோசித்திருக்கிறார்.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.மகாலட்சுமி முருகன். காதல் கதைக்குள் இருக்கக் கூடிய பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தக் கூடிய கதைக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார்.