வியாபார சிக்கலில் ரிலீஸ் தள்ளிப் போன “தாய் கிழவி”திரைப்படம்

பவுனுத்தாயி என்ற 75 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கும்படம் தாய் கிழவி

அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

அந்தஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் நடித்திருக்கிறார்.இதுதவிர மற்ற முக்கிய இரண்டு கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மேலும்,உசிலம்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள நடிகர்கள் அல்லாத கிராமத்து மக்கள் பலரும் இதில் நடித்திருக்கின்றனர்.

மணிகண்டனிடம் பணிபுரிந்த விவேக் விஜயராஜ் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும், ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சன்ஸ் மற்றும் பேசன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்துதயாரித்திருக்கின்றன.

இவர்கள் தவிர வெளிப்படையாகத் தெரியாமல் ஒரு விநியோகஸ்தரும் பங்குதாரர் என்று சொல்லப்படுகிறது.

கிராமத்தில் உள்ள மனிதர்கள், அவர்களின் வாழ்க்கைமுறை மூலம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தின் மதிப்பை கலகலப்பாக பேசியிருக்கும் இப்படத்தில், உசிலம்பட்டி வட்டாரத்தில்  உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை பற்றிய கதையாகவும், அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுநடை, அவர்களின் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள், சடங்குகள் ஆகியவற்றைப் பேசும் படமாக இது இருக்கும். என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.

இப்படம்,பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தேதியை மாற்றி பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

திடீரென இப்படத்தின் வெளியீடு ஒரு வாரம் தள்ளிப்போனது ஏன்?

இப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஒரு விநியோகஸ்தர் பெற்றிருந்தாராம்.குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் சுமார் பத்துகோடி கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.அதற்காக முன்பணம் சுமார் இரண்டு கோடி கொடுத்த அவர், அதன்பின் பணம் தராமல் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தாராம்.

இதனால், படத்தை அவரிடம் கொடுக்காமல் ஒரு பெரியநிறுவனத்துக்கு விநியோக அடிப்படையில் கொடுத்துவிடலாம் என்று சிவகார்த்திகேயன் கூறினாராம்.அதை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள்.இதனால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகவே படத்தின் வெளியீடு ஒருவாரம் தள்ளிப்போயிருக்கிறது என்று சொல்கிறார்கள்.