54வது கோவா சர்வதேச திரைப்பட விழா எப்போது?

54-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா வரும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெற இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், 

“உலக அளவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இந்தியா 5-வது மிகப்பெரிய சந்தையாக திகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த சந்தை மதிப்பு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மைக்கேல் டக்ளஸூக்கு (Michael Douglas) வழங்கப்பட உள்ளது.
இந்த திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்படங்களுக்கான பிரிவில் திரையிடப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை 3 மடங்கு இம்முறை அதிகரித்துள்ளது. இது கோவா சர் வதேச திரைப்பட விழா மீதான சர்வதேச திரைப்பட துறையின் மதிப்பை வெளிப்படுத்துகிறது” என்றார்.
ஐநாக்ஸ் பாஞ்சிம் (4), மக்வினெஸ் பேலஸ் (1), ஐநாக்ஸ் போர்வோரிம் (4), இசட் ஸ்கொயர் சாம்ராட் அசோக் (2) ஆகிய 4 இடங்களில் 270-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் சர்வதேச பிரிவில் 198 படங்கள் திரையிடப்பட உள்ளன. முந்தைய ஆண்டைக்காட்டிலும் 18 படங்கள் கூடுதலாக இம்முறை திரையிடப்பட உள்ளன.இந்திய பனோரமாவில் தேர்வு செய்யப்பட்ட 25 படங்களில் வெற்றிமாறனின் ‘விடுதலை’, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘காதல் என்பது பொதுவுடைமை’, சம்யுக்தா விஜயன் இயக்கிய ‘நீள நிற சூரியன்’ ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.அதேபோல் மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவில் தேர்வாகியுள்ள 5 படங்களில், மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்“ திரையிடப்படவுள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய “தி கேரளா ஸ்டோரி“ படமும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.