கஜானா இசை வெளியீட்டு விழா

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி திரைப்படம் ‘கஜானா’. இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கே.எம்.ரியாஷ் படத்தொகுப்பு செய்ய, சீனிவாசன் சங்கர் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். நைஃப் நரேன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். கபிலன் அம்ற்றும் கானா சல்லு பாடல்கள் எழுத, நிசார் கான் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில்

நடிகர் செண்ட்ராயன் பேசுகையில்,
 “கஜானா ஒரு பிரமாண்டமான திரைப்படம். சாம் அண்ணன், படம் பெருசாக வந்திருக்கிறது, சிறப்பாக வந்திருக்கிறது, என்று சொல்வார். இன்று படத்தின் டிரைலரை பார்க்கும் போது அவர் சொன்னது அனைத்தும் உண்மை என்பது புரிகிறது. சினிமாவில் முதல் முறையாக இந்த படத்தில் யாளி விலங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் நான் சண்டைப்போடும் காட்சியும் படத்தில் உண்டு. படம் மிக சூப்பராக பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும், குறிப்பாக சிறுவர்களுக்கு அதிகம் பிடிக்கும். படத்தில் ஏகப்பட்ட விலங்குகள் இருக்கிறது. எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சாருக்கு நன்றி. மே 9 ஆம் தேதி வெளியாகிறது, குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பாருங்கள்,” என்றார்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசுகையில்,
“கஜானா படம் கிரிப்பிங்காகவும், எண்டர்டெயினராகவும் இருக்கும். இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இது சாதாரண விசயம் இல்லை, கிராபிக்ஸ் பணி செய்தவர்களுக்கு பாராட்டு. இனிகோ சிறப்பாக நடித்திருக்கிறார். சாந்தினி, வேதிகா உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் வாழ்த்துகள். படம் நிச்சயம் வெற்றி பெறும், நன்றி.” என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விக்னேஷ் பேசுகையில்,
 “இந்த படத்தின் இயக்குநரை பாராட்ட வேண்டும், காரணம் அவர் இயக்குநர் மட்டும் அல்ல தயாரிப்பாளர். நான் இரண்டு படங்கள் தயாரித்திருப்பதால், அதன் வலி எனக்கு தெரியும். இது மிக கஷ்ட்டமான விசயம். சினிமாவில் நான் 30 வருடங்களாக இருக்கிறேன். எங்கு சென்றாலும், எந்த தொழில் செய்தாலும், அதில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் தான் போடுவேன். படம் தயாரிப்பது சுலபம், ஆனால் வெளியிடுவது மிக மிக கடினமாகி விட்டது. படத்தின் டிரைலர், பாடல்களை பார்த்தோம், சிறப்பாக இருக்கிறது. திரில்லிங்காகவும், இண்டர்ஸ்டிங்காகவும் இருக்கிறது. இந்த படத்தை பத்திரிகையாளர்கள் தான் மக்களிடம் சேர்க்க வேண்டும்.

இன்று தமிழ் சினிமாவில் 10 ஹீரோக்கள் மட்டும் தான் இருப்பார்கள், அவர்கள் 100 கோடி, 200 கோடி என்று சம்பவளம் வாங்குகிறார்கள். ஆனால், சினிமாவில் ஆயிரக்கணக்கான ஹீரோ, இயக்குநர்கள் இருக்கிறார்கள், அவர்களை நமக்கு தெரியாது, தெரிந்தது எல்லாம் 10 பேரை தான். எனவே ரசிகர்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன், நீங்கள் சினிமா ரசிகர்களாக இருக்க வேண்டும், தனிப்பட்ட மனிதரின் ரசிகராக இருக்க கூடாது. புதிய முயற்சிகளையும், வித்தியாசமான கதைகளையும் ரசிக்கும் சினிமா ரசிகர்களாக மட்டுமே மக்கள் இருக்க வேண்டும். கேரளாவில் சிறு சிறு விசயங்களை வைத்துக் கொண்டு அதை அழகாக சொல்லி வெற்றி பெறுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் நான்கு பாடல், மூன்று சண்டைக்காட்சிகள் என்று இன்னமும் முழுக்க முழுக்க கமர்ஷியலாக தான் எடுக்க வேண்டி இருக்கிறது. எனவே, ரசிகர்கள் அனைத்து படங்களையும் பார்க்க வேண்டும், புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல படங்கள் வரும். எனவே, சின்ன படங்களுக்கு, நல்ல படங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க. இந்த ‘கஜானா’ படத்தின் மூலம் படக்குழுவின் கஜானா நிரம்ப வேண்டும், என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், “கஜானா மிக அழகான தலைப்பு, ரொம்ப பாசிட்டிவான தலைப்பு. இசையமைப்பாளர் அச்சுவின் பணி சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சாம் அதிகம் பேச மாட்டார். இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு ரொம்ப சாதாரணமாக இருக்கிறார். நான் இந்த படத்தை பார்த்தேன், மிக சிறப்பாக இருக்கிறது. படம் எடுப்பது கஷ்ட்டம் இல்லை, ஆனால் படத்தை ரிலீஸ் செய்வதில் தான் பாதி உயிர் போய்ட்டு வந்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலையில், இந்த படத்தை இவ்வளவு பெரிய அளவில் வெளியிடும் திருமலைக்கு வாழ்த்துகள், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். படம் நன்றாக வந்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் சப்போர்ட் பண்ண வேண்டும், நன்றி.” என்றார்.

இயக்குநர் நடிகர் வேலு பிரபாகரன் பேசுகையில், “இந்த படத்தில் சிறு வேடம் ஒன்றில் நான் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் இயக்குநர் சாம் என்னுடைய 20 ஆண்டுகால நண்பர். சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும், சினிமாவை நேசிக்கின்ற ஒரு மனிதர். திரைப்படத்தை பொறுத்தவரை உலக சினிமா மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்திருக்கிறது. கேமரா உள்ளிட்ட அனைத்து விசயங்களிலும் பல முன்னேற்றங்களை உலக நாடுகள் சினிமாத்துறையில் அடைந்திருக்கிறது. இவ்வளவு வளர்ச்சிகள் சினிமாவில் வந்திருந்தாலும், அதில் நம் பங்கு இல்லை என்பது வெட்கமான விசயம். பிற நாடுகளில் கண்டுபிடிப்பதை காப்பியடித்து தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அதில் நாம் எதையும் செய்யவில்லை. பெரிய பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்திருக்கும் நாம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமல் இருக்கிறோம். இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் இதுபோன்ற விசயங்களில் தலையிட வேண்டும். ஆனால், அவர்களது வேலை பஞ்சாயத்து செய்வதாக மட்டுமே இருக்கிறது. அப்படி இல்லாமல், தயாரிப்பாளர்கள் எவ்வளவு நஷ்ட்டம் அடைந்திருக்கிறார்கள், படங்கள் ஏன் தோல்வி அடைகிறது, உள்ளிட்ட விசயங்கள் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசிக்க வேண்டும், ஆனால் அதற்கான நபர்கள் இங்கு இல்லை. கட்ட பஞ்சாயத்து பண்றதும், யார் தலைவராக வர வேண்டும் என்பதும் தான் இருக்கிறது. நம்ம ஊரில் இருக்கும் நடிகர்களுக்கு நடிக்கவே தெரியாது. கதாநாயகர்களுக்கே நடிக்க தெரியவில்லை. சிவாஜி, எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் இருந்த கட்டமைப்பு கூட இன்று இல்லை.

எனக்கு ஃபேண்டஸி படங்கள் மிகவும் பிடிக்கும். நான் பல படங்கள் பார்த்திருக்கிறேன், ஆனால் நான் பார்க்காத பல விசயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. நாம் இதுவரை கற்பனையில் மட்டுமே பார்த்த விலங்குகளை இந்த படத்தின் மூலம் நம் கண்முன் நிறுத்த சாம் முயற்சித்திருக்கிறார். படம் மிக பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும், சாம் அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட படங்களை எடுப்பார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகை சாந்தினி பேசுகையில்,

“இந்த வருடம் நிறைய படங்களில் நடித்து வருகிறேன். கஜானா படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து இப்போது சொல்ல முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. பிரமாண்டமான ஃபேண்டஸி படமாக இருக்கும். இந்த படத்தில் நிறைய சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறேன். இசையமைப்பாளர் அச்சு சிறப்பான இசையமை கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அவர் தமிழில் நிறைய படங்கள் பண்ணுவார். வேதிகாவின் நடனத்திற்கு நான் ரசிகை. இந்த வருடம் குழந்தைகளுக்கான படங்கள் எதுவும் வரவில்லை. அந்த குறையை இந்த படம் போக்கும். பெரியவர்களுக்கும் படம் பிடிக்கும். தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.” என்றார்.