வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு சிறிய திருட்டை செய்பவர்கள் எப்படி போலீசாரால் கொலை குற்றவாளியாக மாற்றப்படுகிறார் என்கிற மையக்கருவை அடிப்படையாக வைத்து அதில் காதலையும் எமோஷனையும் கலந்து எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கொடுத்திருக்கிறார் . ஜெயமோகனின் கதையை தனது பாணியில் இயக்கி இருக்கிறார் ஏபிஜி. ஏழுமலை. ஒரு கிராமத்து பின்னணியில் நடக்கும் ஒரு கொலை மற்றும் ஒரு திருட்டு சம்பவத்தை தண்டவாளத்தில் இரண்டு ட்ராக்குகளை போல் நகர்த்திச் சென்று இறுதியில் மையலாக (புயலாக) கதையை மாற்றி இருக்கிறார் இயக்குனர்.
கதையின் நாயகனாக நடித்துள்ள சேது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மைனா படத்தில் போலீஸ் ஆக மிரட்டலான நடிப்பை கொடுத்த சேது, இதில் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள சம்ரிதி தாரா அழகிலும் நடிப்பிலும் கவனம் பெறுகிறார். வில்லனாக நடித்துள்ள பி.எல்.தேனப்பன் வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் ஆர் பி பாலா, போலீஸ் ஏட்டாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, மந்திர கிழவியாக வரும் ரத்ன கலா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
90களில் தமிழ் சினிமாவை கலக்கிய இசை அமைப்பாளர் சவுந்தர்யனின் மகன் அமர் கீத் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.