எனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு – உதயா நெகிழ்ச்சி

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது. வெற்றிக்கு வித்திட்ட  ரசிகர்களுக்கு ‘அக்யூஸ்ட்’  படக்குழுவினர்  நன்றி தெரிவிக்கும்விழா ஒன்றினை சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் ஏ. எல். உதயா, ” பகிர்ந்துகொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா என தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன். என் நண்பர்களின் ஆதரவினால் படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றிபெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்டபாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்துகொள்ள முடியாது.
 கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலிமிகுந்த விஷயங்கள்.
சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம்.  ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்துவருகிறோம்.
இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு. எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என  பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது எனத் தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும்தான் காரணம்.
இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றிதான். அதனால்தான் இதற்கு காரணமான ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம்” என்றார்.