கும்கி – 2 திரைப்பட விமர்சனம்
மலைகிரமத்தில் இருக்கும் ஒரு சிறுவனுக்கும் யானைக்குட்டிக்கும் நட்பு.இடையில் சில வருடங்கள் பிரிவு.அதன்பின், அந்த யானைக்கு ஆபத்து. நாயகன் அப்போது என்ன செய்கிறார்? என்னென்ன நடக்கின்றன? என்பதுதான் படம்.
நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் மதி. திரைப்பட கதாநாயகனுக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார்.அன்பு, பாசம், கோபம், வலி ஆகிய உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தாவிட்டால் எல்லாமே கேலிக்குள்ளாகும் என்கிற ஆபத்து நிறைந்த வேடத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.
சில காட்சிகளில் மட்டுமே வருகிறார் நாயகி ஷ்ரிதா ராவ்.நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி ஆகியோர் நிறைவு.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்டு ரசிக்கலாம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்தான் படத்தின் நாயகன் எனலாம். அவருடைய உழைப்பில் விரியும் மலை காட்சிகள் பரவச அனுபவம்.
படத்தொகுப்பாளர் புவன் படம் சலிப்பின்றி நகர வேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பிரபு சாலமன், குறைவற்ற அன்பே அளவற்ற இன்பம் எனும் கருத்தைச் சொன்னதோடு தமிழ்த் திரையுலகுக்கு ஒரு கதாநாயகனையும் கொடுத்திருக்கிறார்.