பேய் படங்களுக்கு தமிழ் சினிமா பார்வையாளர்களிடம் ஆதரவு அதிகமாகவே இருக்கும். க்ராணி படம் அறிவிக்கப்பட்ட போது அதன் முதல் பார்வை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனை பூர்த்தி செய்திருக்கிறதா படம்.
குடும்பத்தலைவராக அனந்து நாக்,அவரது மனைவியாக அபர்ணா, ஆண் குழந்தையாக மாஸ்டர் கன்ஷ்யாம், பெண் குழந்தையாக பேபி இந்திரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.வீட்டைப் புனரமைக்கும் நேரத்தில், மனித நேயத்தோடு அவர்கள் செய்யும் செயல் எப்படியெல்லாம் அவர்களைப் பாதிக்கிறது? என்பதைக் காட்டி பதற வைத்திருக்கிறார்கள்.
பாட்டியாக வடிவுக்கரசி நடித்திருக்கிறார்.எதிர்மறைக் கதாபாத்திரம் ஒச்சாயி என்கிற பெயருடன் மாறுபட்ட தோற்றத்துடன் சிறப்பாக நடித்து அனைவரையும் பயமுறுத்துகிறார். காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் திலீபன், சிங்கம்புலி ஆகியோர் நடிப்பு நன்று.ஊர்த்தலைவராக வரும் கஜராஜ் பொருத்தம்.
ஒளிப்பதிவாளர்களுக்குச் சவால்விடும் திரைக்கதை.அதை தெம்பாக ஏற்றுக் கொண்டு மணிகண்டன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
டாக்டர் செல்லைய்யா பாண்டியன் இசையில் கு.கார்த்திக்கின் எழுத்தில் பாடல்கள் ரசிக்கும் ரகம். பின்னணி இசை கூடுதல் பலம்.
படத்தை வேகமாகக் கொண்டு செல்லவேண்டும் என செயல்பட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் எம்.எஸ்.கோபி
எழுதி இயக்கியிருக்கும் விஜயகுமரன், பழங்காலக் கதைகளை நினைவுபடுத்துவது போன்ற கதைக்களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அதில்,என்றும் இளமையாக இருக்க இதைச் செய்யவேண்டும் என்றொரு விசயத்தைச் சொல்லி அதை மையமாக வைத்து திகிலூட்டும் திரைக்கதை அமைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார்.கதைக்குப் பொருத்தமாக நடிகர்களையும் தேர்வு செய்திருப்பது அவருடைய பலம்.