காளிதாஸ் -2 திரைப்பட விமர்சனம்

சென்னையின் புறநாகரில் ஒரு  அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கு வசிக்கும் அபர்ணதி – அனந்த் நாக் தம்பதியின் பெண் குழந்தை காணாமல்போகிறது. அந்த குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் தீவீரமாக ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பரத், பவானி ஸ்ரீ இருவருக்கும் ஒரு சந்தேகம்.
அதே குடியிருப்பில் வசிக்கும் இளம் வழக்கறிஞர் அஜய் கார்த்திமீது எழுகிறது. விசாரணை தீவிரமாகும் நிலையில், குழந்தையின் சடலம் கிடைக்கிறது. குழந்தையைத் தொடர்ந்து சில தொடர் கொலைகள் நடக்கின்றன. அதன் உண்மையான குற்றவாளி யார் என்பதுதான்  காளிதாஸ் 2 படத்தின் கதை.
சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையை எழுதி பார்வையாளர்களை அடுத்து என்ன என்று பரபரப்புடன் கேட்கவைத்து திரையில் சாகசம் செய்திருக்கிறார் இயக்குநர்  ஸ்ரீ செந்தில்.
காளிதாஸாக வரும் பரத் நடிப்பில் அனுபவ முதிர்ச்சி.காவல்துறைக்கான துணிச்சலும் வேகமும் சில நேரங்களில் நிதானமும் காட்டி நடிப்பில் சிறப்பு செய்திருக்கிறார்.
புதுமுக நடிகர் அஜய் கார்த்தி  கண்களில் அதிகம் பேசுகிறார். வசனங்கள் அதிகம் பேசுவது மாதிரி காட்சிகளை அமைக்கவில்லை. எப்போதும் அவர் முறைப்பது மாதிரியும் சந்தேகப்படுவதுமாதிரியும் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இயல்பாகவே நடிக்க விட்டிருக்கலாம்
எப்படியிருந்தாலும் அவர்மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கும். அவரது அறிமுகத்திற்கு இது சிறந்த படமாக இருக்கிறது.
இளம் ஐபிஎஸ் அதிகாரியாக பவானி ஸ்ரீ கவனம் ஈர்க்கிறார். களப்பணி தெரியாமல் உயர் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறார். அதேபோல நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்துள்ள பூவே உனக்காக சங்கீதா கதாபாத்திரம் படத்தின் திருப்பமுனை.
அபர்ணதி, அனந்த் நாக், பிரகாஷ்ராஜ், கிஷோர் இவர்களின் கதாபாத்திரங்கள் பரபரப்பான திரைக்கதையின் நம்பிக்கையா இருக்கின்றன.  சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படங்களுக்கான ஒளிப்பதிவில் சில இடங்களை அடிக்கடி காட்டவேண்டியிருக்கும். அதை சலிப்புத் தோன்றாமல் நிறைவாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா.
அஜய் கார்த்தி தோன்றும் இடங்களில் எல்லாம் ஒரே மாதிரியான  சிம்பாலிக் இசையை தந்து கிலி ஏற்படுத்துகிறார் சாம் சி.எஸ்.
அடுத்து என்ன நடக்கும் என யூகிக்கமுடியாத சம்பவங்களை கோர்த்து என ஒரு க்ரிப்பான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில்.