70கள் முதல் 90கள் வரையிலான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளமேலப்பாளையம், கடையநல்லூர் கிராமத்து மக்களின் வாழ்வியலை 1970 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்ட பின்ணனியில் அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறது ஹபீபி.
கமர்ஷியல் சினிமாவுக்காக மொழியையும், கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் சமரசம் செய்யாமல், இந்த மண்ணின் மண்வாசனையை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.
அதிகாலையில் ஓதப்பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்கள், தெருவின் நடுவே கிடக்கும் தறிகளைத் தாண்டிச் செல்வார்கள். ஒரு சின்ன காட்சிதான் , ஆனால் அந்த ஒரு காட்சிக்குள் ஒரு தலைமுறையின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.
ஒருகாலத்தில் மேலப்பாளையம், கடையநல்லூர் பகுதிகளில் தறிச்சத்தம் இல்லாத வீடுகள் அரிது.
தெருக்களை அடைத்து “பாவு” போடப்பட்ட நாட்கள். இலங்கை, பர்மா வரை சென்றன இங்கு நெய்த துணிகள்.
நெசவாளர்களின் உழைப்பால் உலகம் முழுவதும் இடம்பிடித்த ஒரு சிறிய மண். ஆனால் வரலாறு எல்லோருக்கும் கருணை காட்டுவதில்லை.
பர்மா போர், இலங்கை அரசியல் மாற்றங்கள், விசைத்தறியின் வருகை என்று மெல்ல மெல்ல தறிச்சத்தம் செத்துப்போனது இங்கு.
ஒருகாலத்தில் துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த மக்கள், பின்னாளில் தாங்களே வெளிநாடுகளுக்கு “ஏற்றுமதி” செய்யப்பட்டார்கள்.
மலேசியா… சிங்கப்பூர்… சவுதி… துபாய்…என்று.
வாழ்வாதாரத்தைத் தேடி பறந்த அந்த விமானங்களில் கனவுகள் மட்டுமல்ல, பிரிவின் கண்ணீரும் பறந்தது. ஆம் இது தூக்கம் விற்ற காசுகளின் திரைப்பட வடிவம்.
அபுதாஹிரின் சின்னாப்பா வெளிநாடு செல்லும் காட்சியில், அவரது பாட்டி சின்னாப்பாவின் தலை கோதி அழுதபடி வழியனுப்புவாள். வெளிநாடு செல்லுபோது ஏன் அழுக வேண்டும்?
அந்த அழுகை வெறும் பிரிவுக்காக அல்ல.
“அவன் திரும்பி வரும்போது நான் உயிரோடு இருப்பேனா?” என்ற கேள்விக்கான அழுகை அது.
இன்றைய தலைமுறைக்கு புரியாமல் போகலாம். அது நெருப்பில் தகிக்கும் தருணம் போல. போகவும் மனதில்லை போகாமலும் இருக்க முடியாது.
அப்போதெல்லாம் வெளிநாடு செல்வது என்பது ஒரு பயணம் அல்ல. ஐந்து வருடம், ஆறு வருடம் குடும்பத்தைப் பார்க்க முடியாத ஒரு தண்டனை.
காதலும் இப்படத்தில் அமைதியாகவே காயப்படுத்துகிறது. ஒரு மௌனமான வலி.
நிலோபரிடம் பேசுவதற்கே முடியாமல், காதலை மனதுக்குள் சுமந்துகொண்டு வாழும் அபுதாஹிர்…
சிறுவயதில் இருந்து பார்த்த முகம். ஆனால் அவளது குரலைக் கேட்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய வாழ்க்கை.
கட்டுப்பாடுகள், மரியாதைகள், குடும்ப சூழ்நிலைகள். பல காதல்கள் அப்போது தோல்வியடையவில்லை.
பேசாமலேயே முடிந்துபோயின.
அபுதாஹிர் கசையடி வாங்கும் காட்சி வலி
“1000 தாங்குமா… 900 தாங்குமா… 800 தாங்குமா…”
என்று ஒவ்வொரு அடியும் விழும்போது நம் முதுகிலேயே விழுவது போல வலிக்கும்.
“என் பையனால் தாங்க முடியாது…” என்று தந்தை கதறும்போது, அந்த திரை அரங்கில் இருந்த பல தந்தைகளின் இதயமும் உடைந்திருக்கும்.
வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் பெட்டியை திறந்து பார்க்கும் ஆர்வம்… பூப்போட்ட கைலி…
அரபு வாசனை சோப்பு… சைக்கிளில் தாமிரபரணிக்குச் சென்று குளித்த நாட்கள்…
அவை வெறும் காட்சிகள் அல்ல. ஒரு தலைமுறையின் நினைவுகள்.
இந்தப் படத்தின் இன்னொரு அழகான பகுதி இந்து–முஸ்லிம் உறவு. அப்போது மேலப்பாளையம், கடையநல்லூர் பகுதிகளில் மதம் என்பது மனிதர்களைப் பிரிக்கவில்லை.
மாமன், மச்சான் என்று அழைத்து,
ஒருவர் வீட்டுப் பிரியாணியை மற்றொருவர் சாப்பிட்டு,
ஒருவர் துக்கத்தில் மற்றொருவர் கண்ணீர் வடித்து வாழ்ந்த காலம் அது.
என்னுடைய வாப்பா கௌபத்துல்லா பாய் தனது கடைசி பெருநாள் வரையிலும் தனது இந்து நண்பர்களுக்கு பிரியாணி கொடுத்தால்தான் அவரது பெருநாள் முழுமை பெறும்.
அதை இந்த படத்தில் யூசுப் மற்றும் அவரது இந்து நண்பர்களின் நட்பில் அழகாக காட்டியிருக்கிறார்கள்.
குறிப்பாக மரணக் காட்சி… அதுதான் திரைப்படத்தின் உயிர்.
தறிச்சத்தம் கேட்காத வீட்டில் எப்படி வாழ்வது என்று , இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருந்த மனிதர், சில நொடிகளில் ஜனாசாவாக மாறிவிடுகிறார்.
உடலை குளிப்பாட்டும் காட்சி… ஒவ்வொருவராக வந்து தண்ணீர் ஊற்றும் தருணம்… தொழுகைக்காக வரிசையாக நிற்கும் மக்கள்…
பிறகு அபுதாஹிர், தான் பிறரால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக நிற்கும்போதும்,
“எங்க வாப்பாவின் கடனை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரை மன்னித்துவிடுங்கள்”
என்று சொல்லும் அந்த நொடி, கண்கள் குளமாகிவிடுகின்றன. நானும் சொல்லியிருக்கிறேன்.
அதைவிட நெகிழ்ச்சியானது, யூசுப்பின் இந்து நண்பர் கபர்ஸ்தானில் வந்து மண் போட்டு அழும் காட்சி. அந்த ஒரு கைப்பிடி மண், மதங்களை விட மனிதநேயம் பெரியது என்பதைச் சொல்லிவிடுகிறது.
இஸ்லாமியர்களின் இறுதி சடங்குகளைப் பற்றி அறியாத பலருக்கும், அந்த காட்சிகள் மரியாதையுடனும் மனிதநேயத்துடனும் விளக்கமாக அமைந்துள்ளன.
இந்தப் படம் முஸ்லிம்களை வழக்கமான தமிழ் சினிமா கிளிஷே போல காட்டவில்லை.
உருது பேசிக்கொண்டு, சாம்பிராணி புகை நடுவே கறி வெட்டும் காட்சிகளைத் தாண்டி, உண்மையான மனிதர்களாக காட்டியிருக்கிறது.
இது ஒரு முஸ்லிம் படம் அல்ல. இது ஒரு மனிதர்களின் படம்.
நம்மைச் சுற்றியே, நம்மோடு வாழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு வாழ்வியல் உலகம் நமக்குத் தெரியாமலேயே எத்தனை ஆண்டுகள் கடந்து போயிருக்கிறது என்பதை இந்த திரைப்படம் உணர்த்துகிறது.
குறிப்பாக இந்து சகோதரர்கள், முஸ்லிம் சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, பாசம், துயரம், நட்பு, குடும்ப பிணைப்பு ஆகியவற்றை மிக நெருக்கமாக உணர்வார்கள்.
மேலப்பாளையம், கடையநல்லூர் மக்களுக்கு இந்த படம் ஒரு திரைப்படமாக இருக்காது. அது அவர்களின் வீட்டின் பழைய தறிச்சத்தமாக இருக்கும்.
வெளிநாடு சென்ற சித்தப்பாவின் நினைவாக இருக்கும். சொல்ல முடியாமல் போன ஒரு காதலாக இருக்கும். தோளில் கைபோட்டு நடந்த இந்து நண்பனின் நட்பாக இருக்கும். ஜனாசாவில் சிந்திய ஒரு கண்ணீர்த்துளியாக இருக்கும்.
திரைப்படம் முடிந்து விளக்குகள் எரிந்த பிறகும், பலரின் கண்களில் கண்ணீர் வற்றியிருக்காது. ஏனெனில் அவர்கள் ஒரு படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள்; தங்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை மீண்டும் வாழ்ந்திருப்பார்கள்.
இறுதி காட்சியில், நீண்ட காலம் வறண்டிருந்த காட்டுப்பாதையில் ஒரு பூ மலர்வது போல வாழ்க்கையும் தன் நேரத்தில் பதில்களைத் தருகிறது.
அபுதாஹிரின் திருமணம் ஏன் இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது, ஏன் அவன் இத்தனை இழப்புகளையும் காத்திருப்புகளையும் கடந்து வந்தான் என்பதற்கான அர்த்தம் அப்போது புரியும்.
சில நேரங்களில் இறைவன் நமக்காக எழுதி வைத்திருக்கும் கதையின் முடிவை நாம் அவசரமாக புரிந்துகொள்ள முயல்கிறோம்.
ஆனால் அவன் ஒவ்வொரு மனிதரையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு சந்திப்பையும் நமக்குத் தெரியாம்ல் இணைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அந்த தருணம் உணர்த்துகிறது.
ஹபீபி முடிந்த பிறகும் திரை இருட்டாகிவிடலாம்.
ஆனால் அதன் கதாபாத்திரங்கள் நீண்ட நேரம் நம் மனதில் இருந்து வெளியேறாது.
ஹபீபி… நம்மை நம்முடைய கடந்த காலத்துக்கே அழைத்துச் சென்று அழ வைக்கிறது.
என் நேசத்துக்குரிய திரைப்படம் – ஹபீபி. பாராட்டுகள் இயக்குனர் மீரா கதிரவனுக்கு.
– ரசிகவ் ஞானியார்
13-06-2026
#habibi #movie #review #melapalayam #Tirunelveli #memories