சங்கீத உலகத்திலும், வெளியிடங்களிலும் சமூகத்திலும் மிகப் பெரிய கலைஞனாக இருக்கும் சாருகேசியை அவருடைய மகன் ராஜ் ஐயப்பன் மதிக்க மறுக்கிறான். அவரிடத்தில் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறான். அவனுக்கு என்ன பிரச்சனை என்று அவனுக்கே தெரியவில்லை. இதில் குடிகாரன் என்ற பெயரையும் எடுத்திருக்கிறான். அவனுடைய குடிப் பழக்கத்தினால் வருகின்ற பல பிரச்சனைகளினால் சாருகேசி மிகப் பெரிய அவமானத்தையெல்லாம் சந்திக்கிறார். ஆனால், மகனை திருத்த அவரால் முடியவில்லை.
இந்த நேரத்தில் மகன் தன்னுடைய இசை நிகழ்ச்சியில் பாட வந்த ரம்யா பாண்டியனை திடீரென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான்.
ஒய்.ஜி.மகேந்திரன் தன்னுடைய நடிப்பில் முழு அளவிலான அர்ப்பணிப்பு தன்மையை இந்தப் படத்தில் காட்டி இருக்கிறார்.
வீட்டில் தன் மகன் தன்னை எதிர்த்துப் பேசும்போதும், அலட்சியப்படுத்தும்போதும், மரியாதை இல்லாமல் திட்டும்போதும். என்ன பேசுவது.. என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தவிக்கும் ஒரு தகப்பனின் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தலைவாசல் விஜய்யை ராஜ ஐயப்பன் அவதூறாக பேசும்பொழுது மகனை கண்டித்து “அவரிடம் மன்னிப்பு கேள்” என்று சீறுகின்ற இடத்தில் சபாஷ் போட வைக்கிறார்.
புரிந்து கொள்ளாத மகன், பாவமாகி போன கணவன் என்று இருவருக்கும் இடையில் அல்லாடும் ஒரு சாதாரண எளிய குடும்ப தலைவியாக சுஹாசினியதார்த்தமாக நடித்திருக்கின்றார்.
வீட்டில் ஒரு உறுப்பினராகவும் சாருகேசிக்கு உடன் பிறந்த தம்பி போலவும் இருக்கும் தலைவாசல் விஜயின் கேரக்டர் அழகு. அவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ராஜ் ஐயப்பன் தன்னை தரக்குறைவாக பேசினாலும் அவனும் தான் தூக்கி வளர்த்த மகன்தான் என்பதை உணர்த்தும் வகையில் அதை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ளும் அவருடைய நடிப்பு சிறப்புதான். படத்தின் பல காட்சிகளை இணைக்கும்விதமாகவும் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் இருப்பது பாராட்டுக்குரியது.
கால தேவனாக நடித்திருக்கும் சத்யராஜின் கதாபாத்திரம் முற்றிலும் புதுமையானது. மகேந்திரனை பீச்சில் சந்திக்கும் காலதேவன் என்ற சத்யராஜ் பேசுகின்ற பல வசனங்களும், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கும்விதமாக அவர் சொல்லுகின்ற தத்துவ விசாரங்களும் அழகோ அழகு. இடையிடையே அவ்வப்பொழுது தன் வருகைக்கான காரணத்தை நீயே கண்டறிந்து கொள் என்று சொல்லி சாருகேசிக்கு வழிகாட்டும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
பா.விஜய்யின் பாடல்களும் வசனமும் இந்தப் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம்.
இப்போதைய இசையமைப்பாளர்கள் காதை கிழிக்கும்விதமாக பாடல்கள் ஒலிக்கிறதா இல்லையா என்பதே நமக்கு தெரியாத அளவுக்கான இசையை போட்டு காட்டடி அடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தேவாவின் இசையை அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சமீப காலமாக திரைப்படங்களை இயக்காத சூழ்நிலையில் இந்த படத்தை ஒரு அருமையான படமாக கொடுத்து தனது இயக்கத்தையும் அழகாக செய்து இப்பவும் நான் மிகச் சிறந்த இயக்குநர்தான் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.