கிங்டம் – திரைப்பட விமர்சனம்

காவல்துறையில் அடுக்கில் கடைநிலை  காவலராக பணியாற்றும் ஒருவர்சின்ன வயதில் வீட்டைவிட்டுப் போன தன் அண்ணனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.அது ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்கிறது.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் கிங்டம் படம்.

காதல்நாயகனாக அறியப்பட்ட விஜய்தேவரகொண்டா,இப்படத்தில் காவலர் வேடத்திற்கு பொருந்தியிருக்கிறார்.

மிகக்குறைந்த தலைமுடி,நிமிர்ந்த நடை என அந்த வேடத்துக்காக மிகவும் மெனக்கெட்டு தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் போடும் சண்டைகள் மற்றும் காட்சிகளீன் வீரியத்துக்கு நம்பகத்தன்மை கிடைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீபோஸ் அழகாக இருக்கிறார்.நடிக்கவும் செய்திருக்கிறார்.அவருக்குப் படத்தில் குறைந்த அளவே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் முக்கிய கதாபாத்திரமான நாயகனின் அண்ணன் வேடத்தில் சத்யதேவ்நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தின் அடிப்படையில்தான் மொத்தக் கதையும் எழுதப்பட்டிருக்கிறது

என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ்,கவனிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோர் உழைப்பு படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டப் பயன்பட்டிருக்கிறது.காடுகளுக்குள் நடக்கும் காட்சிகள் வியக்க வைக்கின்றன.

அனிருத்தின் இசையும் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.நாயகன் வரும் காட்சிகளில் அவருடைய பிம்பம் மென்மேலும் உயரும்படி இசைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் கவுதம் தின்னனூர்.ஒரு கடைநிலைக் காவலரை கதாநாயகனாக வைத்துக் கொண்டு தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள், அந்த மக்களை வைத்து நடக்கும் கடத்தல் தொழில் அதைச்செய்யும் கூட்டம் என மிக விசாலமாகப் போயிருக்கிறார்.கதை பயணிப்பதற்கேற்ற களங்களும் விரிந்து கொண்டே செல்கிறது.

எல்லாம் சேர்ந்து ரசிகர்களுக்கு அளவற்ற முழு சாப்பாடாகக் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார்கள்.அந்த நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது எனலாம். முதல்பாதியைப் போல் இரண்டாம்பாதியும் அமைந்திருந்தால் அந்த வெற்றி பெருவெற்றியாகி இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

 

Comments (0)
Add Comment