கதைப்படிசினிமா கலை இயக்குநரான ஜீவா ஒரு படத்துக்காக, தனது சொந்தக் காசை போட்டு புதுச்சேரியில் உள்ள ஆங்கிலேய அதிகாரி வாழ்ந்த பங்களாவைபேய் வீடாக மாற்றுகிறார்.
படம் திடீரென நின்று போக, போட்ட காசை எப்படி திரும்ப எடுப்பது என்று குழப்பத்தில் இருக்கும் ஜீவாவுக்கு கதைப்படி அவரது தோழி ராஷி கன்னாஒரு ஐடியா கொடுக்கிறார்.
வெளிநாட்டில் இருக்கும் ‘ஸ்கேரி ஹவுஸ்’ போன்று இங்கு நாம் ஏன் உருவாக்கக் கூடாது? அதன் மூலம் கட்டணம் வசூலித்துப் போட்ட காசை எடுக்கலாம் என்கிறார். அதன்படி செய்கிறார்கள். கூட்டம் குவிகிறது. ஆனால், அந்த வீட்டில் உண்மையிலேயே சில ரகசியங்களும் பேயும் இருப்பது தெரிய வருகிறது. இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் அகத்தியா படத்தின் திரைக் கதை.
பழங்கால பியானோவை வீணா வாசிக்கும்போது, அங்கு ஏற்படும் மாற்றங்களும் அதன்பிறகு என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் பயம் கலந்த ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
கை, கால்களை அசைக்க முடியாத டூப்ளெக்ஸின் சகோதரி ஜாக்குலினை (மெடில்டா), சித்தார்த்தன் குணமாக்குவது, ஒரு வேரைக் காட்டியதும் மோத வரும் யானை வணங்கி நிற்பது, சுதந்திரத்துக்கு முந்தைய விடுதலை போராட்டம் என கதையோடு பயணிக்கும் பல காட்சிகள் ரசனையாக இருக்கின்றன.
வில்லத்தனத்தை முகத்தில் காட்டும் எட்வர்ட் சோனன்பிளிக், காதல் காட்சிகளில் கவரும் மெடில்டா, சில டைமிங் காமெடியில் சிரிக்க வைக்கும் ஷா ரா, ராதாரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், சென்டிமென்ட் காட்சியில் ரோகிணி, சார்லி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசை என்றாலும் படத்தில் வரும் இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ ரசிக்க வைக்கிறது. தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு, படத்தை ரிச்சாக காண்பிக்கிறது. கலை இயக்குநர் சண்முகத்தின் கடின உழைப்பு தெரிகிறது. படம் போரடிக்காமல் போவதற்கு சான் லோகேஷின் எடிட்டிங்கும் காரணம்.
சில குறைகள் இருந்தாலும் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்த ‘அகத்தியா’.