ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் “நோவா”
பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது,
தமிழ் சினிமாவில் திகில் என்றாலே பேய், பங்களா, பழிவாங்கல் என்ற வழக்கமான பாதையைத் தாண்டி, காலம், மனிதர்களின் நினைவுகள், அறிவியல் மற்றும் பயம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சி செய்திருப்பதாகக் கூறுகிறார்.
பார்வையாளர்களுக்கு பதில்களை உடனடியாக வழங்காமல், படம் முழுவதும் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
“இந்தப் படத்தை ஒரு திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக்கூடாது. பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில கேள்விகளுடன் வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்,” என்கிறார் இயக்குநர் மைலோ.
முழுப் படப்பிடிப்பும் கேரளாவில் உள்ள மலைப்பகுதி கிராமம் ஒன்றில் நடைபெற்றது, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதே ஒரு சவாலாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்.
“அந்த இடத்திற்குச் செல்வதே மிகவும் கடினம். தினமும் யாருக்காவது அடிபடும் அளவுக்கு பாதை மிகவும் சிரமமானதாக இருந்தது. ஆனால் அந்த இடம்தான் கதைக்குத் தேவைப்பட்டது. அதனால் நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டுப் பணியாற்றினார்கள்,” என்கிறார் மைலோ.
“படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். பார்வையாளர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால், எதையும் பெரிதாக விளக்கிச் சொல்லவில்லை,” என்கிறார் மைலோ.
அதனால் படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய காட்சிக்கும், வசனத்திற்கும், கதாபாத்திரத்தின் பார்வைக்கும் கூட ஒரு காரணம் இருக்கலாம்.
ஏனென்றால் நோவாவில் சில உண்மைகள் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுவதற்காக அல்ல… அவர்கள் கண்டுபிடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
நோவா ஒரு குறிப்பிட்ட வகைத் திரைப்படத்திற்குள் மட்டும் அடங்கும் படமல்ல.
பேய், பிசாசு, அறிவியல் புனைவு, அமானுஷ்யம், விண்வெளி, வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்கள் என பல வித்தியாசமான உலகங்கள் ஒன்றோடொன்று இணையும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
“ரைசாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறு விதமாகப் பார்ப்பீர்கள். அவருக்கு வசனமே கிடையாது. ஆனால் அவருடைய பார்வையே நிறைய விஷயங்களைச் சொல்லும்,” என்கிறார் மைலோ.