கலைத்துறையில் கால்பதிக்கும் யுவர் பேக்கர்ஸ் தொண்டு நிறுவனம்

சமூக சேவையையும் பொழுதுபோக்கையும் ஒருங்கிணைக்கும் வகையில், யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ என்ற புதிய OTT தளம் தொடங்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் லாப நோக்கற்ற OTT தளமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது, பார்வையாளர்களுக்கு திரைப்படங்களை இலவசமாக வழங்குவதுடன், அவர்களின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் பங்களிப்புகளை சமூக நலப் பணிகளுக்காக பயன்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் கடந்த ஆறு ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், கடல் தூய்மைப் பணிகள் மற்றும் பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்த அமைப்பு, தற்போது சினிமா துறையிலும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ OTT தளத்தின் தொடக்க விழா சென்னையில் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் ‘மனிதம்’, ‘வி3’, ‘கோட்டா’, ‘மெல்லிசை’, ‘தாவுத்’, ‘ஓ பட்டர்ஃபிளை’ உள்ளிட்ட திரைப்படங்களின் டிரெய்லர்கள் திரையிடப்பட்டன.

இந்த நிகழ்வில் யுவர்பேக்கர்ஸ் ஓடிடி நிறுவனர் கிஷோர் ஆதித்யா பேசும்போது,

“ இந்த யுவர்பேக்கர்ஸ் பவுண்டேஷன் துவக்கி 6 ஆண்டுகள் ஆகிறது. பாண்டிச்சேரியில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டோம். கடலுக்குள் சென்று கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கை கிளீன் செய்து கின்னஸ் சாதனை படைத்தோம்.  இந்திய பிரதமர் மோடி அவர்கள் கூட எங்கள் சேவையை குறித்து பாராட்டினார். பெண்கள் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

சினிமாவை பொறுத்தவரை விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை நாங்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவில் வினியோகம் செய்தோம். தொடர்ந்து இன்ஃபினிட்டி, கழுமரம் போன்ற படங்களையும், அதனைத் தொடர்ந்து மனிதம் படத்தையும் தயாரித்தோம்.

ஓடிடியிலும் மக்கள் பெரிய படங்களையே பார்க்க விரும்புகிறார்கள், முன் வருகிறார்கள். இந்த நிலையில் எங்கள் ஓடிடியின் மூலம் சின்ன படங்களை பார்க்க வைக்க ஒரு முயற்சி எடுத்திருக்கிறோம். இதில் சப்ஸ்க்ரிப்ஷன் கட்டணம் கிடையாது. இலவசமாக படத்தை பார்க்கலாம். இம்பாக்ட் டிக்கெட் என்ற ஆப்ஷன் உண்டு, அதில் பயனர்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். அந்த தொகையிலும் பெரும்பகுதி சமூக சேவைக்கு தான் செல்கிறது. மீதம் உள்ள ஒரு பங்கு திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். இந்த ஓடிடியில் இன்னொரு SOS சிறப்பு அம்சமும் உண்டு. இது பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களையும் தடுக்கும் ஒரு முயற்சி. மேலும் AI மூலம் திரைப்படங்களையும் உருவாக்க இருக்கிறோம். இது அடுத்த கட்டமாக செயல்பாட்டுக்கு வரும்.

அவுட் ரைட் முறையிலும், ஷேர் முறையிலும் படத்தை வாங்கி இந்த ஓடிடியில் வெளியிட இருக்கிறோம். இந்த ஓடிடியின் வளர்ச்சி பல சிறிய படங்களுக்கு நிரந்தர வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நாம் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. எதையும் எதிர்பாராமல் நம் கடமையை செய்து வந்தால் நாம் எதிர்பாராத நல்லது நமக்கு நடக்கும். ஆதரவு கொடுங்கள். நன்றி” என்றார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
யுவர்பேக்கர்ஸ் CEO ஜான் ஜூலியஸ், இயக்குநர் புருனோ, தயாரிப்பாளர் ஜேகே சரவணன், ஜேகே சதிஷ், ஸ்டார் ஹோம்ஸ் செல்வக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

சிறிய படைப்புகளுக்கு புதிய வெளியீட்டு வாய்ப்பு, பார்வையாளர்களுக்கு இலவச திரைப்பட அனுபவம், சமூக சேவைக்கு நேரடி பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் தொடங்கப்பட்டுள்ள ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’, தமிழ் OTT துறையில் புதிய பாதையை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Comments (0)
Add Comment