தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 1977 ஆம் ஆண்டு வெளியானஆட்டுக்கார அலமேலுவை திரைப்படத்தை
யாராலும் மறக்கமுடியாது. சிவகுமார், ஸ்ரீப்ரியா நடிப்பில் தியாகராஜன் இயக்கிய அந்த படம் அப்படியொரு கிளாசிக் சினிமா அது.
பிரகாபல் இயக்கியுள்ள ஜாக்கி படத்திற்கும் அதற்கு ஓர் ஒற்றுமை இருக்கிறது. ஆட்டுக்கிடா. இந்தப் படத்தில் ஆட்டுக்கிடா சண்டையை மையமாக வைத்து முழு படத்தையும் உருவாக்கியுள்ளார்கள்.
சேவல்,ஆடுசண்டை என்றாலே மதுரைக்குச் சென்றுவிடுகிறார்கள். கதைக்களம் மதுரை. அங்கே ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் யுவன் கிருஷ்ணா. கிடா சண்டை என்றால் உயிர். அதற்காக வேலை வெட்டியெல்லாம் விட்டு சுற்றிவருகிறார். எதிர்நாயகன் ரிதன் கிருஷ்ணா. அவருக்கும் கிடா சண்டை மீது ஈடுபாடு.
நாங்கதான் கெத்து என்று அலையும் ரிதன் கிருஷ்ணாவின் கிடாவை யுவன்கிருஷ்ணாவின் கிடா வெல்ல திரையில் ரத்தம் தெறிக்கத் தொடங்குகிறது. இருதரப்புக்கும் பகை தீயெனப் பரவுகிறது. கிடா சண்டை மூலம பெரிதாகும் பகையை, அதே கிடா சண்டை போட்டி மூலம் தீர்க்க ஊர்ப்பெரியவர்கள் முன்வருகிறார்கள். கடைசியில் என்ன தீர்வு என்பதுதான் ஜாக்கி படத்தின் கதை.
மூன்று ஆண்டுகளாக மதுரையிலேயே தங்கி நடிகர்களை ஆட்டுக்கிடா வளர்க்க வைத்து, அவற்றுடன் பழகவைத்து படமெடுத்ததாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது.
திரையில் கிடா சண்டையை பார்க்கும்போது நேரில் பார்ப்பதுபோன்ற பரவசம் ஏற்படுகிறது. இரு கிடாவும் மூர்ககமாக தலையைக் கொண்டு மோதும் போது நமக்கு பகீர் என்கிறது.
முதல் காட்சியில் இருந்து கிடா சண்டை என திரையை பரபரக்கவைத்திருக்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவாளர் என். எஸ். உதயகுமார், மதுரை மண்ணின் அசல் தன்மையை காட்சிகளில் அழகாக கொண்டுவந்திருக்கிறார். ஹீரோ, வில்லனின் தோற்றமும் நிறமும் கதைக்களத்திற்கு பொருந்தவில்லை
மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா என அவரவர்கள் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்துள்ளார்கள்.
சக்தி பாலாஜியின் பின்னணி இசை கிடா சண்டைப் போட்டிகளின் அசல் தன்மைக்கு உதவியாக இருக்கிறது.
திரைக்கதையை உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதி இயக்கியுள்ள பிரகாபல், காட்சிகள் முழுவதும் வெறுப்பும் சண்டையுமாக வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் கிடா சண்டையைப் பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும்.