சல்லியர்கள் படக்குழுவினருக்கு சகாயம் நடத்திய பாராட்டு விழா

மக்கள் பாதை பேரியக்கத்தின் சார்பில் அந்த அமைப்பின்தலைவரும் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான
சகாயம் அவர்களின் முன்னிலையில் ‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்கு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் 7.03.2026 ஆம் தேதி காலைபாராட்டு விழா நடைபெற்றது
நடிகர் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்த ‘சல்லியர்கள்’ படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தேவையான திரையரங்குகள் ஒதுக்கப்படாத நிலையில்  நேரடியாக ஒடிடி பிளஸ் தளத்தில் சல்லியர்கள் படம் வெளியிடப்பட்டது.
மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு இயக்கியஇப்படத்தில் சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  அவரது தந்தையாக கருணாஸும்,  வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
ஈழத்தில்தமிழ் ராணுவத்தினர். குறிப்பாக மருத்துவர் அணி, போர் தக்குதலுக்கு ஆளான எதிரி வீரர்கள் மீது கூட எந்த அளவுக்கு கருணை காட்டி அவர்களது உயிரை காக்கவும் போராடினார்கள் என்கிற போர் அறத்தை சொல்லும் விதமாக உருவாகியிருந்த இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மூலமாக வெளியிட்டார்.
இந்தநிலையில் மக்கள் பாதை பேரியக்க தலைவரும் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சகாயம் முன்னிலையில் ‘சல்லியர்கள்’ படக்குழுவினருக்குபாராட்டு விழா நடைபெற்றது
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வ.கௌதமன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, எழுத்தாளர் புகழேந்தி தங்கராஜ், கார்ட்டூனிஸ்ட் பாலா, மக்கள் பாதை பேரியக்கத்தை சேர்ந்த ராவணக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்
சுரேஷ் காமாட்சி பேசும்போது,
“இந்த நிகழ்வை ஐயா சகாயம் ஐஏஎஸ் முன்னிலையில் நடத்துவதில் பெருமையாக உணர்கிறேன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தமிழ்செல்வன் படத்தில் விஜயகாந்த் கலெக்டராக நடித்திருப்பார். அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் இந்த மாதிரி ஒரு மாவட்ட ஆட்சியரை பார்ப்போமா என்கிற ஏக்கம் விழுந்தது. ஆனால் நாம் வாழும் காலத்தில், நம் இனத்திலேயே அப்படி ஒரு பெருமை மிகு அடையாளமாக இருக்கின்ற சகாயம் ஐயா இந்த விழாவை நடத்துவதை ஆஸ்கர் விருது வாங்கியதற்கு சமமாக கருதுகிறேன்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது படத்தை திரையிட சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் தெரியவந்தது. அப்போதே அந்த காட்சியை ரத்து செய்யலாமா என நினைத்தேன். ஆனால் மக்கள் பார்த்துவிட்டு முடிவு செய்யட்டும் என முடிவெடுத்தேன். அந்த சமயத்தில் தான் அண்ணன் கௌதமனுக்கு இந்த விஷயத்தை சொல்லி அழைத்தேன். அவர் அடுத்த பத்து நிமிடத்தில் அங்கே வந்து நின்றார்.
கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் ஏகலைவன் இருவரும் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர முனைப்பு காட்டினார்கள். அமேசான் போன்ற நிறுவனங்கள் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களைத் தான், தங்களது தளத்தில் வெளியிடுவார்கள் சல்லியர்கள் படம் திரையரங்கில் ஒரு காட்சியில் மட்டும் வெளியானால் அது எப்படி வெற்றி படமாக மாறும் ? அதனால் அந்த சமயத்தில் எங்களுக்கு கிடைத்தது ஓடிடி பிளஸ் தளம் தான்.
இந்த படம் வெளியான பிறகு அண்ணன் சீமான், இயக்குநர் மு.களஞ்சியம், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தோழர் தியாகு, தமிழரசன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் இந்த படத்திற்கு ஆதரவாகவும் திரையரங்குகள் கிடைக்காததை எதிர்த்து கண்டனம் தெரிவித்தும் ஆதரவுக்கரம் நீட்டினார்கள்.
 தமிழனாக பிறந்ததற்கு இந்த இடத்தில் தான் நான் பெருமைப்படுகிறேன். இந்தப் படம் வியாபார ரீதியாக எவ்வளவு சிக்கலை சந்திக்கும் என்று தெரிந்தே இந்த படத்தை தயாரிக்க நடிகர் கருணாஸ் முன் வந்தார். சினிமா பற்றி பெரிய அளவில் அறிந்திராத மக்கள் பாதை பேரியக்கத்தை சேர்ந்த ராவணக்குமார் 10 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த படத்தை துவங்கி வைத்தார்.
இதுநாள் வரைஈழத்தமிழர்களுக்கான வரலாற்றை சொல்லும் படங்கள் எதுவும் எந்த ஒரு தளத்திலும் பார்வைக்கு கிடைக்காது. ஆனால் முதன் முறையாக நம்முடைய ‘சல்லியர்கள்’ படம் தான் எல்லா தளத்திலும் பார்க்க கிடைக்கிறது’. அதுவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிஇதைத்தொடர்ந்து நம்முடைய தமிழர் வரலாறு குறித்த படங்கள் அனைத்து ஓடிடி தளங்களிலும் வர ஆரம்பித்து விடும் என நம்புகிறேன். அந்த வகையில் சல்லியர்கள் படம் உலகத் தமிழர்கள் மத்தியில் சென்றடைந்ததில் எனக்கு மிகப்பெரிய பெருமை. சகாயம் ஐயா தலைமையில் இந்த பாராட்டுக்களை பெறுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்” என்று பேசினார்.
மக்கள் பாதை பேரியக்கத்தின் தலைவர் திரு சகாயம் ஐஏஎஸ் பேசும்போது,
“வெளிப்பட்ட ஆழமான அறத்தை துல்லியமாக வெளிப்படுத்திய சல்லியர்கள் படக்குழுவினருக்கு பாராட்டு விழா என்கிற அடிப்படையில் உணர்வுப்பூர்வமாக நடக்கின்ற மிக நல்ல நிகழ்வு இது. சல்லியர்கள் படக்குழுவினருக்கு மக்கள் பாதை பேரியக்கம்எதற்காக விழா நடத்த வேண்டும் என கேள்வி கேட்கலாம். ஐஏஎஸ் அலுவலருக்கு இது தேவையா என்று என்னிடம் பல பேர்  கேட்டார்கள்.
ஒரு ஐஏஎஸ் அலுவலர் இதுபோன்ற இன விடுதலைப் போராட்ட வரலாற்றை பற்றி எல்லாம் பேச வேண்டுமா என்றெல்லாம் கேட்பார்கள். அடிப்படையில் நானும் ஒரு தமிழன்.. நானும் ஒரு மனிதன்.. எங்கெல்லாம் மானுடம் அவலத்திற்கு உள்ளாகிறதோ அங்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டும் என எண்ணுகின்ற ஒரு மனிதன். அது தமிழன் தான் உயர்ந்த மனிதனாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
மிக ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஊற்றுக்கண்ணாக கடந்த எண்பதாவது ஆண்டு கால நிகழ்வுகளை எல்லாம் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. 1988ல் சென்னை லயோலா கல்லூரியில் என்னுடைய முதுகலையை முடித்துவிட்டு, சென்னை சட்டக்கல்லூரியின் மாணவனாக இருக்கிறேன்.. இந்த காலகட்டம் ஈழ இன விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்குதலுக்கு உள்ளான ஒரு காலகட்டம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
அன்றைக்கு இந்திய அமைதிப்படை ஈழத்தில் நமது மக்களுக்கு எதிராக களம் அமைத்து காயப்படுத்திக் கொண்டிருந்த அந்த சமயத்தில் மாணவர்களாகிய நாங்கள் கொதித்துப் போய் போராட்டக் களத்திற்கு வந்தோம். ஆனால் நான் எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் அல்லது சமூக இயக்கத்திலும் உறுப்பினராக இருந்தது கூட இல்லை.
ஒரு தமிழ் சங்கத்தில் கூட உறுப்பினராக நான் இல்லை. அன்றைக்கு சட்டம் படிக்க வேண்டும், ஒரு வழக்கறிஞராக வேண்டும், இல்லை என்றால் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் படித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் பிறந்த ஒரு எளிய விவசாயின் மகனாகப் பிறந்து தட்டுத்தடுமாறி தலைநகர் சென்னைக்கு கனவுகளோடு கிளம்பி வந்த ஒரு மாணவன் நான்.
ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பது என் முதற்கனவு அது கிடைக்கவில்லை என்றால் வழக்கறிஞராக வேண்டும் என நினைத்தேன். தமிழக அரசால் நடத்தப்பட்ட ஐஏஎஸ் பயிற்சி மையம் அண்ணா நகரில் இருந்தது. இந்த சமயத்தில் நான் ஒரு தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றிக் கொண்டு, சட்டக்கல்லூரியிலும் மாணவனாக இருந்து கொண்டே இந்த ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டேன்.
அதேசமயம் அப்போது எனக்கு நேரமின்மை காரணமாக பயிற்சி மையத்திற்கு பெரும்பாலும் போக மாட்டேன். அதனால் பத்து நாளைக்கு ஒரு முறை அந்த பயிற்சி கல்லூரிக்கு சென்று அங்கே அவர்கள் கொடுக்கும் குறிப்புகளை பெற்றுக்கொண்டு செல்வேன். அதனால் அந்த கல்லூரி முதல்வருக்கு என் பெயரை மனதில் நிற்கவில்லை அதனால் அவர் எனக்கு சமரசம் என்றே பெயர் வைத்து விட்டார். ஆனாலும் என்னுடைய சமூகப்பணிகளை தொடர வேண்டும் என்பதற்காக அப்போது அவரிடம் சின்னச்சின்ன பொய்களை சொல்லிவிட்டு சென்று விடுவேன். இந்த சமயத்தில் அங்கே படித்த 50 மாணவர்களில் மூன்று பேர் ஐஏஎஸ் முதல் நிலை தேர்வில் தேர்வானார்கள். அதில் நானும் ஒருவன். பிறகு நடந்த மெயின் தேர்வில் இரண்டு பேர் தேர்வானார்கள்.. அதில் நானும் ஒருவன்.. பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமலேயே இதெல்லாம் சாத்தியப்படுகின்ற குறுக்கு வழி இருக்கிறதா சார் என்று கேட்டு விடாதீர்கள்..
அடுத்ததாக இறுதியான நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டிய காலகட்டம்.. அந்த சமயத்தில் தான் இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய அநியாயங்களுக்கு எதிராக எங்களது சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒரு போராட்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். கூட்டத்தில் என்னையும் கலந்து கொண்டு பேச அழைத்தார்கள்.. அதே கூட்டத்தில் தான் இன்னொரு கல்லூரி மாணவராக இருக்கக்கூடிய தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகிறார்.
முதல் நாள் இரவு முழுவதும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமா, இல்லை ஐஏஎஸ் பணி முக்கியமா என்று யோசித்து, விடியற்காலையில் எனக்கு என்
தமிழ் மண் தான் முக்கியம் என முடிவெடுத்தேன். அதன்பிறகு அன்று நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். அதற்குப் பிறகு அந்த நேர்முகத் தேர்விற்கும் சென்றேன். அந்த தேர்வில் நான் ஐஏஎஸ் ஆக தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் கூட மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பணிக்காக தேர்வு செய்யப்பட்டேன்.
இப்போது 12 லட்சம் பேர் ஐஏஎஸ் ஆரம்பநிலை தேர்வுக்காக விண்ணப்பித்திருக்கும் நிலையில், அன்றைய காலகட்டத்தில் எனக்கு ஐஏஎஸ் பணியா, தமிழர் விடுதலையா என்கிற நிலை வந்த போது தமிழர் விடுதலை தான் என முடிவு எடுத்தவன் நான். ஒரு ஐஏஎஸ் அதிகாரி தமிழ் விடுதலை உணர்வு பற்றி பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை.
எனக்கு ஒரு மகன் பிறந்த போது கூட என் மாமனார் ஸ்டீபன் என பெயர் வைக்கும்படி கூறினார். ஆனால் என் இனத்தை பறைசாற்றும் விதமாக இருக்க வேண்டும் என நான் திலீபன் என பெயர் வைத்தேன். இந்த மொழி, அது எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்தது. அதனுடைய வெளிப்பாடாகத்தான் என் இனத்துடைய விடுதலைக் களத்தில் வெளிப்பட்ட மகத்தான அந்த அறத்தை, மிக துல்லியமாக தம்பி கிட்டு இங்கே வெளிப்படுத்தி இருக்கிறார்.
நான் 2009ல் கலெக்டர் ஆனேன்.. தமிழ்ச்செல்வன் படத்தில் வரும் கலெக்டர் போலவே இருக்கிறீர்கள் என தம்பி சுரேஷ் காமாட்சி போல பலபேர் என்னிடம் சொன்னார்கள். நான் என்னைப் பொருத்தவரை இயல்பாகவே இருக்கிறேன். ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவன்.. விவசாயிகள் நிறைந்த அந்த கிராமத்தில் நான் படித்து வளர்ந்தபோது அனைத்து சாதி மக்களும் மிக அன்புக்குரியவர்களாக இருந்தார்கள்..
தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நாம் வகைப்படுத்துகிறோமே அவர்கள் தான் களங்கம் இல்லாத ஒரு அன்புக்குரியவர்களாக இருந்தார்கள். நான் துணை  கலெக்டராக பொறுப்பு ஏற்றதும், “நீ அதிகாரத்திற்கு வந்தால் ஏழை மக்களுக்காக உன் அதிகாரத்தை பயன்படுத்து” என எழுதி வைத்தேன். அது என்னுடைய கிராமத்தில் நான் பார்த்து வளர்ந்த அத்தனை மக்களையும் மனதில் கொண்டு தான்.. அன்று நான் பொறுப்பேற்ற அந்த மாவட்டத்தில் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்று என் மீது நடவடிக்கை எடுத்தார் அப்போதைய கலெக்டர். அந்த அறத்தை நான் என் தாய் தந்தையிடம் இருந்தும் இந்த மொழியிடம் இருந்தும் தான் கற்றுக் கொண்டேன். 2009 ஆம் ஆண்டில் நான் கலெக்டராக பதவி ஏற்றபோது எனக்கு மகிழ்ச்சி இல்லை. காரணம் அங்கே ஈழத்தில் எம் மக்கள் கடுமையான போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தார்கள். இங்கே அந்த சமயத்தில் நான் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பில் இருந்தேன்.
அந்த தேர்தல் சமயத்தில் ஒரு நிர்வாகிகள் கூட்டம் நடத்திய போது, திருச்சி சாலையில் உள்ள ஒரு கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்த தகவல் கிடைத்தது கூட்டத்தில் கலந்துகொண்ட தாசில்தாரையும் அதன் பிறகு ஆர்டிஓவையும் அடுத்தடுத்து அனுப்பி வைத்தேன் பின் தீவிரம் அதிகமானதால் நானே நேரில் களத்திற்கு சென்றேன். அங்கே உள்ளே சிக்கிக்கொண்டவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்கிற செய்தி கிடைத்தது.அந்த நேரத்தில் என்னை அறியாமலேயே தீயணைப்பு வீரர்களுடன் நானும் அந்த கிடங்கிற்குள் புகுந்து என்னால் முடிந்த அளவு ஒன்று இரண்டு நபர்களை என் கையால் தூக்கி வந்தேன். வெளியே இருந்த அதிகாரிகள் கூட நீங்கள் ஏன் சென்றீர்கள் என என்னை கடிந்து கொண்டார்கள். அவர்கள் எல்லாம் வெளி மாநிலத்திலிருந்து நம்மை நம்பி வந்தவர்கள்.. அவர்களை காக்க வேண்டியது நம் கடமை என்று தான் அப்போது செயல்பட்டேன்.. அதன் பிறகு அதில் 16 பேர் இறந்தபோது, பீகாரிலிருந்து அவர்கள் உறவினர்களை வரவழைத்து இங்கேயே 5000 பொதுமக்கள் பேரணி நடத்தி அவர்களை மிக மரியாதையுடன் தகனம் செய்தோம். மக்களிடமிருந்து  பணம் வசூலித்து அவர்களுக்கு கொடுத்து அனுப்பினோம்.
அரசுக்கும் அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கச் சொல்லி பரிந்துரை செய்து எழுதினேன். ஆனால் அரசாங்கம் அவர்கள் நம்மூர்காரர்கள் இல்லை எனத் தர மறுத்துவிட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் எழுதி போராடி அதை அவர்களுக்கு பெற்றுத் தந்தேன். இதுதான் தமிழர் அறம். ஆனால் அதே 2009 ல் கடலுக்கு அப்பால் என்னுடைய மக்கள் ஆபத்தையும் பேரழிவையும் சந்தித்துக் கொண்டிருப்பதிலிருந்து அவர்களை காப்பாற்ற யாரும் இல்லையே என்று நான் நெஞ்சுருகி வருந்திய காலகட்டம் தான் நான் கலெக்டராக பொறுப்பேற்ற அந்த காலகட்டம். அது எனது மகிழ்ச்சியான காலம் அல்ல.
இப்படிப்பட்ட களத்தை, அந்தக் களத்தில் காட்டப்பட்ட அறத்தை, ஒரு மகத்தான படைப்பாக அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் மிகப்பெரிய ஆளுமையாக கலைஞராக வர இருக்கின்ற தம்பி கிட்டு. அற்புதமான அந்த கதை தேர்வும், கள தேர்வும் மிக அற்புதமாக இருக்கிறது. அன்புத்தம்பி கிட்டுவை நான் உள்ளார்ந்து வாழ்த்துகிறேன். தம்பி நீ ஒரு மகத்தான கலைஞராக, மகத்தான இயக்குநராக நீ வருவாய் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதீத நேர்மையும் கொஞ்சம் ஆபத்தானது என்பதை உணர்ந்தவன் என்கிற முறையில் சொல்கின்றேன், அதற்காக கொள்கையை விட வேண்டாம்..
இன்றைய நிகழ்வில் கூட மின் தடை ஏற்பட்டது.. ஒலிபெருக்கி தடை ஏற்பட்டது.. எங்கோ நடந்த அந்த ஒரு நிகழ்வுக்கு என் தம்பிகள் பொறுப்பல்ல.. நான்தான் பொறுப்பு.. அப்படிப்பட்ட ஒரு சிரமத்தோடு இதை நடத்துகிறோம்.. சிரமத்தோடு வாழ்வதுதான் தமிழர் வாழ்வாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று ஏற்பட்ட தடையின் போது தான், இந்த படத்தை தம்பி சுரேஷ் காமாட்சி வெளியிடும்போது ஏற்பட்ட தடையை என்னால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது. அன்றைய சமயம் அவர் கொடுத்த அந்த பேட்டி என் மனதை தொட்டது.
அன்பிற்குரிய அந்த மகத்தான கலைஞர்களை பாராட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கு புள்ளியாக இருந்தது நமது தம்பி இராவணக்குமார். 10 லட்சம் என்பது அவருக்கு அதிகமான தொகை. தனது மனைவியின் நகைகளை எல்லாம் அடகு வைத்து இந்த படம் துவங்க முதல் புள்ளியாக இருந்திருக்கிறார் .அவருக்கும் இந்த படத்தை தயாரித்த கருணாஸ் ஆகியோருக்கும் நமது உள்ளார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் உள்ளார்ந்து பாராட்ட வேண்டும்.
இந்த தமிழ் மீது நிகரற்ற பற்றுக்கொண்ட தம்பிகள் அனைவரும் சொல்வார்கள் நாம் தேர்தல் அரசியலுக்கு முன்னெடுக்க வேண்டும் என்று.. தேர்தல் அரசியல் முடிவு எடுத்தால், நிச்சயமாக நான் சொல்கிறேன், மிக எளிதாக 5000 பேரை இங்கே வரவழைக்க முடியும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் தேர்தலை தாண்டி தமிழர் அரசியலை, மக்கள் அரசியலை, கோட்பாடு அரசியலை முதலில் தொடங்குவோம் என்று சொன்னேன்.
தமிழர் தலைகுனியக் கூடாது என்ற அறத்தை சொன்ன இந்த படைப்பாளிகளை பாராட்டுவதற்காகத் தான் இங்கே நாம் அனைவரும் கூடியிருக்கிறோம். உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரும் நெருக்கடியான நேரத்தில் நாம் நிற்கிறோம்.. ஒரு பாராட்டிற்கு கூட மின் தடையை ஏற்படுத்தக் கூடியவர்கள், எவ்வளவு தகுதி குறைவாளர்களாக இருக்கிறார்கள் என நாம் பார்க்க வேண்டும்.. திருடுபவர்கள் ஆற்றல் உள்ளவர்களாக இருந்தால் அதை தடுக்கிற நாம் பேராற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.

 

Comments (0)
Add Comment