ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர்,எம்.எஸ்.பாஸ்கர்,தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர்,ரக்சன்,பவானி ஸ்ரீ,பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி,’ஆதித்யா’கதிர்,விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார்.
கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி படக்குழுவினர்
சென்னையில் ஜனவரி 28ஆம் தேதி அன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
பவானி ஸ்ரீ யுடன் பணியாற்றும்போது ஒருமுறை கூட எனது பெயரை முழுவதுமாகவும்,சரியாகவும் உச்சரித்ததில்லை.
பிரிகிடா இந்தப்படத்திற்காக நடித்த நாட்களை விட , இப்படத்தின் விளம்பர நிகழ்வுக்காக நிறைய நாட்கள் எங்களுடன் இணைந்து பயணித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் பாலாமணி மார்பன் நான் குறும்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே என்னை ஒளிப்பதிவாளராக பணியாற்ற செய்யவேண்டும் என நினைத்தவர்.இறுதியாக இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.
நாங்கள் பாதிதூரம் சென்ற பிறகு எங்களை கை தூக்கி ஆதரவளித்தவர் தயாரிப்பாளர் அனில்.
‘மங்காத்தா’வில் குறிப்பிடுவதுபோல் செந்தில் சார் இறுதியாகத்தான் வந்தார்.வந்தவுடன் இப்படம் ஜனவரி 23 வெளியாகும் என்று சொன்னார்.படம் வெளியானது. இப்படத்திற்கு வெற்றிவிழா நடைபெறும் என்றார். அது தற்போது நடைபெறுகிறது.
கடைசியாக வந்த ஸ்டுடென்ட் போன்றவர் ராபின். அவுட் ஆஃப் சிலபஸில் இருந்து வந்து,அனைவரையும் வென்றுவிட்டார்.
விஜய் டிவி அமருக்கு நான் மிகப்பெரிய இரசிகன். படப்பிடிப்புத்தளத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் சிரித்துக்கொண்டே இருப்போம்.
இப்படி படக்குழுவினர் அனைவரும் மறக்க இயலாத அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் அஸ்வின் குமார் பேசுகையில்,
இறைவனுக்கு நன்றி.கடவுள் பல ரூபங்களில் வந்து என்னை பல தருணங்களில் காப்பாற்றி இருக்கிறார். நிறைய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறார். நான் இந்த பிரபஞ்சத்தை முழுமையாக நம்புகிறேன். அவர்களில் ஒருவராக எனது நண்பராக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கை நான் பார்க்கிறேன்.
அவர் என்னை சந்தித்து இந்தப்படத்தில் இந்த கதையை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்னார்.அவரிடம் நான் ஏராளமான சந்தேகங்களை கேட்டுக்கொண்டே இருப்பேன்.அவர் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் பொறுமையாக எனக்கு புரியும்படி விளக்கம் அளிப்பார்.இந்தப்படத்தில் என்னுடைய அறிமுகக் காட்சியும் அவருடைய ஐடியா தான்.நான் இயக்குநரை முழுமையாக நம்பி ஒப்படைத்து விட்டேன்.இதற்காக அவருக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் மிகச்சிறந்த திறமைசாலி.
இந்தப்படத்தின் வெற்றி என்னுடைய இரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.இதற்காக நான் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படக்குழுவில் பணியாற்றிய அனைவரும் பாசிட்டிவ் எனர்ஜி கொண்டவர்கள்.அவர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாகி,இன்று நாங்கள் வெற்றிவிழாவில் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்திருக்கிறோம்.இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்திற்காக தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தை முழுமையாக வழங்கிவிட்டார்.நடிகராக தயாரிப்பாளர் வழங்கும் ஊதியம் என்பது எங்களுக்கு முக்கியமானது. அதற்காக தயாரிப்பாளருக்கும் என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
தயாரிப்பாளர் – நடிகர் கே.ஜே. பாலாமணி மார்பன் பேசுகையில்,
படம் வெளியாகி ஆறாவது நாளில் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு இப்படத்தை மக்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடுகிறார்கள். வரவேற்றிருக்கிறார்கள்.இதற்கு ஊடகங்களும், விமர்சனங்களும் எங்களுக்கு பேராதரவை அளித்ததுடன் இரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்தது. இதனால் படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் இப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.படம் வெளியான நான்கு நாட்களில் சென்னை,கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்திருந்தனர்.தமிழகத்தின் தென்பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன் நாங்கள் இப்படத்திற்கான வரவேற்பு மெதுவாக நடைபெற்று அதன்பிறகு விரிவடையும் என எதிர்பார்த்தோம்.ஆனால் படம் வெளியான இரண்டாவதுநாளே அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் நிரம்பிவழிந்தனர்.
படம் வெளியான பிறகு நாங்கள் 15 திரையரங்குகளுக்கு இரசிகர்களின் வரவேற்பைக்காணச் சென்று இருந்தோம். அனைத்து திரையரங்குகளிலும் இரசிகர்களின் ரசனையும், வரவேற்பும் ஒரேமாதிரியானதாக இருந்தது.இதன்மூலம் இப்படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
இப்படத்தின் வெற்றிக்காக வழிவிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் திரைப்படம் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய விநியோகஸ்தர் ‘பைவ் ஸ்டார்’ செந்தில் மற்றும் அவரது குழுவினருக்கு எங்கள் நிறுவனத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அந்தப்படம் மட்டும் காரணம் அல்ல அந்தப்படம் வெளியாகும் சூழலும் ஒரு முக்கிய காரணம்.இருப்பினும் இந்தப்படத்தின் வசூலைக் கடந்து படம் வெற்றி பெற்றதற்காக இரசிகர்களின் வரவேற்பினை பெற்றதற்காக குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் அனைவரும் இணைந்து திரையரங்கத்திற்கு இந்தப்படத்தை பார்க்க வருகிறார்கள் என்றால்..அதற்கு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய பங்களிப்பை 100 சதவீதம் வழங்கியிருக்கிறார் என்பதை நான் பெருமிதத்துடன் சொல்கிறேன்.இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் விரைவில் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து இரசித்து எங்களுக்கு தொடர் ஆதரவை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில்,
ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது.அதற்குள் ஏன் சக்சஸ் மீட்? என கேட்டார்கள்.ஹாட்ஸ்பாட் படத்தின் முதல்பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி,ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது.பெரும் வரவேற்பும் இருந்தது.ஹாட்ஸ்பாட் படத்தின் முதல்பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ..அதைவிட இரண்டு மடங்கு இப்படம் வெளியான நான்கு நாளில் வசூலித்திருக்கிறது.அந்தவகையில் இந்தப்படம் எங்களுக்கு வெற்றிதான்.அதனால்தான் இந்தப்படத்திற்கு ஆறாவது நாளில் நம்பிக்கையுடன் வெற்றி விழாவை ஒருங்கிணைத்திருக்கிறோம்.இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள்-ஊடகங்கள்- விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள்- உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய படத்தொகுப்பாளர் – ஒளிப்பதிவாளர்கள்- கலை இயக்குநர் – இசையமைப்பாளர் – தயாரிப்பு நிர்வாகி – நடிகர்கள் ராபின்,அஸ்வின் குமார்,ஆதித்யா பாஸ்கர்,ரக்சன், பிரியா பவானி சங்கர்,ஆதித்யா கதிர்,பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா,சஞ்சனா திவாரி மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் முதல் நன்றி ‘குறிஞ்சி’ என்பவருக்கு இருக்கும்.இவர்தான் 2013 ஆம் ஆண்டில் எனக்கு இரண்டு இலட்ச ரூபாயை கொடுத்து ‘முதல் கனவே’ எனும் என்னுடைய முதல் குறும்படத்தை தயாரித்தவர்.அவர் கொடுத்த ஊக்கம்தான் இன்று ஹாட்ஸ்பாட் டூ மச் வரை தொடர்கிறது.அவருக்கு நன்றி தெரிவிப்பது என்னுடைய அனைத்துப்படங்களிலும் தொடரும்.
இப்படத்தின் விமர்சனங்களில் நாங்கள் இரண்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களின் இரசிகர்களைத்தான் சுட்டிக் காட்டி இருக்கிறோம் என்று இடம்பெற்று இருந்தது. இது தவறு.பொதுவாகவே இரசிகர்களைப் பற்றிய பார்வைதான் இது.அதனை இரண்டு நட்சத்திரங்களின் வழியாக சொன்னால் நன்றாக இருக்கும்,எளிதாக புரியும் என்பதாகத்தான் விவரித்து இருக்கிறோம்.
டோனி இரசிகர்கள் கோலியை வசைபாடுவதும்,கோலியின் இரசிகர்கள் தோனியை வசைபாடுவதும் இணையத்தில் தொடர்கிறது.ஒரு இசை அமைப்பாளரின் இரசிகர்கள் மற்றொரு இசையமைப்பாளரை விமர்சிக்கிறார்கள்.இவை அனைத்தையும் ஒன்றிணைத்துதான் நாங்கள் இரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாக பேசி இருக்கிறோமே தவிர..குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் இரசிகர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை.
அதேசமயத்தில் தம்பிராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் இடம் பிடித்திருக்கிறது. ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும் ஒரு படம் பிடிக்கவில்லை என்பதும் படத்தை பார்த்த ஒவ்வொரு இரசிகர்களின் தனிப்பட்ட கருத்து.இதை நாங்கள் மதிக்கிறோம்.வரவேற்கிறோம்.ஆனால் பெண்ணியவாதிகள் சிலர் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள்.ஆனால் இவர்கள் இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல்..இணையத்தில் வெளியான துண்டு காணொளிகளை மட்டும் பார்வையிட்டு சில சூடோ ஃபெமினிஸ்ட்டுகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.இது தவறு.அவர்கள் இந்தப் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு படைப்பை பற்றிய விமர்சனங்களை முன் வைப்பதற்கு எப்படி பார்வையாளர்களுக்கு முழு உரிமை இருக்கிறதோ…அதேபோல் ஒரு படைப்பை எப்படி வழங்கிட வேண்டும் என்பதில் படைப்பாளனாகிய எனக்கும் முழுஉரிமை உள்ளது.
நான் என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டு எனக்குத் தெரிந்த வகையில் நிறைய மக்களுடன் விவாதித்து அதனை எப்படி குழப்பம் இல்லாமல் தெளிவாக மக்களுக்கு வழங்கிட இயலும் என்பதையும் எப்படி சமூக பொறுப்புடன் இதனை சொல்லவேண்டும் என்பதையும் மனதில் வைத்துதான் இந்தபபடைப்பை உருவாக்கி இருக்கிறேன்.ஒரு படைப்பாளனாக ஒரு படைப்பை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேனஇவ்வாறு அவர் பேசினார்.