பிருத்விராஜ் தோற்றத்தை வெளியிட்ட ராஜமவுலி

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

இப்படத்திற்கு ஜென்63 மற்றும் வாரணாசி ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒடிஷாவில் முதல்கட்ட படிப்பிடிப்பும் அடுத்ததாக, ஹைதராபாத்திலும் நிறைவடைந்த படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் ராஜமவுலி பிருத்விராஜின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளார். தனது பதிவில் “பிருத்வியுடனான முதல் ஷாட்டினை எடுத்த பிறகு அவரிடம் சென்று, நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நடிகர் நீங்கள்தான் எனக் கூறினேன். கும்பா எனப்படும் அதிகாரமிக்க, கருணையற்ற, கொடூரமான வில்லன் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்துள்ளார். மிகவும் திருப்தியான உணர்வு. இந்தப் படத்தில் இணைந்ததுக்கு நன்றி பிருத்விராஜ்” என கூறியுள்ளார்.