பெண்களின் தன்னம்பிக்கையை பேசும் வஞ்சி இசை வெளியீடு

வி.ஆர் கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சி.ஆர்.ராஜேஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வஞ்சி’. இதில், நாயகியாக நைரா நிகார் நடித்திருக்கிறார்.
 வில்லனாக டேன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜிபில்ராஜன் பிதேவ், தினேஷ், பண்னை பாலு, காரை நட்ராஜ், பிரியங்கா அழகன், ஷிவானி, மாடசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சஜித்  சங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயகிருஷ்ணன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலைகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கணேஷ் பாபு, ஸ்டன்லி, நந்தினி பாடல்கள் எழுதியுள்ளனர். தம்பி சிவா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
‘வஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி, மாலை சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற
இயக்குநர் பேரரசு பேசுகையில்,
 “’மக்கள் தலைவன்’ இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் சார் கலந்து கொண்டார். அது தான் அவர் பங்கேற்ற கடைசி திரை நிகழ்ச்சி அதில் நானும் கலந்து கொண்டேன். அதன் பிறகு நடக்கும் இசை வெளியீட்டு விழா ‘வஞ்சி’, அவரை நினைவுப்படுத்துகிறது.
கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பெரும் கலைஞர்கள் இழப்பு பாரமாகவே ஓடிக்கிட்டு இருக்கு. பாராதிராஜா என்ற ஒரு இயக்குநர் வெற்றியடைவில்லை என்றால், கிராமத்தில் இருந்து வந்தவர்களால் இங்கு வெற்றி பெற்றிருக்க முடியாது. நிறைய இயக்குநர்கள் அவரைப் பார்த்து தான் இங்கு வந்து வெற்றி பெற்றார்கள். பாக்யராஜ் சார் படங்களை பார்க்கும் போது தான், நம்மாளும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
நம்முடைய முதல்வர் விஜய், அவர்களுக்கு ஒரு கோரிக்கை, சிறந்த இயக்குநர் விருது வழங்கும் போது அதை பாரதிராஜா சார் பெயரிலும், சிறந்த கதையாசிரியர் விருது கே.பாக்யராஜ் சார் பெயரில் வழங்க வேண்டும். இது தான் அவர்களுக்கு நாங்கள் காட்டும் நன்றி கடனாக இருக்கும்.
நம்ம இசக்கி ராஜா, அவரது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டார். எந்த தொழிலாக இருந்தாலும், வியாபாரத்தையும், லாபத்தை நோக்கி தான் பயணிக்கும். சினிமாவும் ஒரு தொழில் தான், ஆனால் இங்க மட்டும் வியாபாரத்தை நோக்கி இல்லை, லாபத்தை நோக்கி இல்லை. அதனுடைய வெளிப்பாடாக தான் அவர் பேசினார்.
இங்கு தீர்வு வர வேண்டும். சிறு சிறு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள், சாப்பாடு போடுகிறார்கள், பிறகு அவர்கள் சென்று விடுகிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இருந்தால் குறைந்தது 5 படங்கள் பண்ண வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இங்கு வர வேண்டும்.
சிறு சிறு தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தான் சிறு சிறு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறார்கள். அந்த வகையில், தயாரிப்பாளர் விமலா மேடமுக்கு நன்றி. ராஜநாயகம் சார், இசையமைப்பாளர், பாடலாசிரியரை கேரளாவில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். தமிழ் சினிமா மட்டும் வேறு மாநிலத்தவர் என்று பார்ப்பதில்லை, அனைவரையும் கலைஞர்களாகத்தான் பார்ப்பார்கள்.  அதனால் தான் ராஜநாயகம் சார் மொழியை பார்க்காமல் கதையை பார்த்திருக்கிறார்.
இயக்குநர் ராஜேஷின் துணிச்சலை பாராட்ட வேண்டும். எனக்கும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், எனக்கு பயம். நல்லா போயிட்டு இருக்கு, இயக்குநர் தான் நம்ம வேலை, அதை விட்டுவிட்டு எப்படி, என்று யோசித்து பயந்தேன். அதனால் வேண்டாம் என்று விட்டுட்டேன். ஆனால், ராஜேஷ் அந்த பயம் இல்லாமல் துணிச்சலாக ஹீரோவாக நடித்திருக்கிறார். அதற்கு காரணம் கதை. தன் கதையின் மீது இருக்கும் நம்பிக்கை. இந்த கதையில் யார் நடித்தாலும் ஹிட்டாகும் போது, ஏன் நாம் நடிக்க கூடாது. என்ற தைரியம், அந்த தைரியத்தை பாராட்டுகிறேன்.
பெண் பிள்ளையை பெற்றவர்கள் பெருமைப்பட வேண்டும். பெண்கள் தைரியம் மிக்கவர்கள் என்பதை சொல்வது தான் வஞ்சி. பெற்றவர்கள் தான் அப்பா இல்லை. யார் பெண் மீது அக்கறை காட்டுகிறார்களோ அவர்கள் தான் அப்பா, என்ற கருத்தை சொல்வது தான் வஞ்சி கதை. பாடலாசிரியர் தமிழ் பிடித்ததால் தமிழ் பாடல் எழுதியிருக்கிறேன், என்று சொன்னார். தமிழ் யாருக்கெல்லாம் பிடிக்கிறதோ, அவர்களை எங்களுக்கு பிடிக்கும். படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள். விமலா ராஜநாயகம் அவர்கள் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.
Comments (0)
Add Comment