மாமன் இசை வெளியீட்டு விழா

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.
 இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 6.05.2025 மாலைநடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில்,
 ” மிகவும் சந்தோஷமான மேடை. கடைக்குட்டி சிங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, ‘இப்படம் ஹிட்’ என சொன்னார். படத்தில் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும்போது தெரிகிறது என்று அதற்கு விளக்கமும் அளித்தார். அதேபோல் இந்தத் திரைப்படத்திலும் நடித்திருக்கும் முகங்களை பார்க்கும் போது இந்தத் திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக சொல்லலாம். இந்த அரங்கத்திற்கு உள்ளே வரும்போது ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரையும் பார்க்கும் போதே வெற்றி கூட்டணி என நம்பிக்கை வந்தது. அதனால் மாமன் நல்லதொரு குடும்பப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னுடைய உதவியாளர். நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு நான் நடுவராக பணியாற்றினேன். அந்த விழா நிறைவடைந்ததும் நான் மேடையில் பேசும்போது இங்கு வெற்றி பெற்ற இயக்குநர்கள் அனைவரும் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். உங்களின் யாருக்கேனும் என்னிடம் உதவியாளராக சேர விரும்பினால் என் அலுவலகத்திற்கு வருகை தாருங்கள் என சொன்னேன்.
இதை சொல்லிவிட்டு நான் அலுவலகத்திற்கு செல்வதற்குள் அங்கு பிரசாந்த் பாண்டியராஜ் நின்றிருந்தார். அப்போது அவர் ஏற்கனவே நான் உங்களை  ஃபாலோ செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னதும் உடனடியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார். அன்றிலிருந்து இன்று வரை என் உடன் பயணிக்கிறார்.
‘ விலங்கு ‘என்றொரு வெப் சீரிசை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் திருச்சியில் அலுவலகம் வைத்திருக்கிறார்.  இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பிரசாந்தின் இரண்டு பிள்ளைகளும் நடித்திருக்கிறார்கள்.‌
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை என்னிடம் காண்பிக்கும் போது, ‘ இந்த முன்னோட்டத்தில் பசங்க 2- கடைக்குட்டி சிங்கம் -நம்ம வீட்டு பிள்ளை -ஆகிய படத்தில் இருந்து சில காட்சிகள் இருக்கும் ‘ என்று சொன்னார். பரவாயில்லை. இது மக்களுடைய வாழ்க்கையில் இருந்து எடுப்பது தானே என்று சொன்னேன்.
இந்த படத்தை பார்த்த திங்க் மியூசிக் சந்தோஷ் சூரிக்கு பிறகு எனக்கும் போன் செய்து இந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலியை விட மிக சிறப்பாக இருக்கிறது . நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். சந்தோஷின் கணிப்பில் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் வெற்றி பெறும்.
எனக்கு இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சி, இரண்டு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை காண்பித்தனர். அதைப் பார்த்த நம்பிக்கையில் தான் நானும் சொல்கிறேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்  ” என்றார்.
சிறுத்தை சிவா பேசுகையில்,
” சூரி சாரை எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும்.  கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் சூரிக்கு போன் செய்து, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது. படம் நிச்சயமாக ஹிட் ஆகும் என்று சொன்னேன். அதேபோல் மாமன் படத்தின் ட்ரெய்லரையும் பார்த்தேன். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு மனம் நெகிழ்வது என்பது சகஜம். அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து விட்டு கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை
 என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில்,
” சில பேர் வெற்றி பெறுவார்கள் . தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். அத்துடன் ஒரு பிம்பத்தையும் கட்டமைப்பார்கள். வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர்கள் என்ற பிம்பத்தை கட்டமைப்பார்கள். அவர்களை நாம் ஆச்சரியமாக பார்ப்போம் .ரசிப்போம். ஆனால் சூரி சார் உன்னால் முடியும் உன் பக்கத்தில் தான் நான் இருக்கிறேன். உன்னை போல் நானும் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு இருக்கிறேன். ரோட்டில் அமர்ந்து போராடி இருக்கிறேன்.
அதன் பிறகு தான் இந்த வெற்றியை தொட்டிருக்கிறேன் என்ற ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே இருப்பார். இது நம் பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு உத்வேகத்தை அளிக்கும். நம்மாலும் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை விதைக்கும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதால் அவர் மென்மேலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அவர் வெற்றி பெறுவது தான் முக்கியம் என கருதுகிறேன். இதற்கு நான் சிறு பங்காக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இரண்டு நிமிட ட்ரெய்லரை பார்த்தோம். அதில் இந்த சின்ன பையனுக்கு இவர்தான் மாமன் என்ற நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தினார். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
விலங்கு வெப் சீரிஸை பார்த்துவிட்டு தமிழில் வெளியாகி இருக்கும் சிறப்பான இணைய தொடர் மட்டுமல்ல பெஸ்ட் கன்டென்ட். அந்தத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். மிகவும் குறுகிய காலத்திற்குள் பாடல்களை அவர் உருவாக்கினார். அனைத்தையும் பொறுப்புடன் பணியாற்றினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசுகையில்,
 ” என் இசையில் தமிழில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘மாமன்’. இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் ஜூம் மீட்டிங்கில் தான் சந்தித்து கதையை சொல்லத் தொடங்கினார். அந்தத் தருணத்தில் நான் வேறொரு படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகு அன்று இரவு கதையை முழுவதுமாக சொன்னார். படத்தின் கதையை இடைவேளை வரை சொல்லும் போதே என் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்கு நாம் இசையமைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன்.
பொதுவாக ஒரு கதையை முழுவதுமாக கேட்ட பிறகு அதனை என் மனைவியிடம் சொல்லி, விவாதித்து, அடுத்த நாள் காலையில் தான் இசையமைப்ப ஒப்புக் கொள்வதா? வேண்டாமா? என்பதை தீர்மானிப்பேன்.
படத்தின் இரண்டாம் பாதியை கேட்டுவிட்டு உடனடியாக இயக்குநரிடம் இப்படத்திற்கு நான் இசை அமைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்போது அவரிடம் நான் இதுவரை கேட்ட கதைகளிலே இது மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. எனக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்றேன்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது என் மனைவியும் கண்ணீர் வடித்தார் “” என்றார்.
தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசுகையில்,
 ” இது எங்களுடைய குடும்ப விழா. சூரி எங்கள் குடும்பத்தில் ஒருவர். இந்த விழாவில் நானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் வெளியான முதல் படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் பிறகு விலங்கு என்ற ஒரு வெப்சீரிஸை இயக்கி வெற்றி பெற வைத்து அதன் மூலமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
சூரி இந்த படத்தின் கதையை சொல்லும்போதும், பிரசாந்தின் இயக்கத்தை பற்றி சொல்லும் போதும் சந்தோஷமாக இருந்தது.
சூரியண்ணன் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். பத்து வருடமாக அவரை எனக்குத் தெரியும். காமெடியாக நடித்த பிறகு ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இது போல் இந்தியாவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை . இருந்தாலும் சினிமாவில் உள்ளவர்களுக்கு சூரியின் பயணம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.
 விடுதலை- கொட்டுக்காளி -கருடன் – என பல பரிமாணங்களை காட்டி தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் அவர் எவ்வளவு அப்பாவியாக இருந்தாலும் ..தெளிவாக யோசிப்பவர் என்பதும் தெரியும். அவரிடம் இருக்கும் கதை அறிவு சிறப்பானது. அவரிடமிருந்து வெளியாகும் முதல் கதை மாமன்.  இன்னும் அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கிறது.  அதை  எப்போதாவது ஒன்று இரண்டு என்று வெளியிட்டால் அவர் இன்னும் உயரம் அடையலாம். அதே நேரத்தில் மற்றவர்களின் கதையிலும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்  ” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில்,
” இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், சூரிக்கும் எமோஷனலான தொடர்பு உண்டு. இருவரும் ஒரே வீட்டிலிருந்து வந்திருப்பது போன்ற உணர்வு தான். நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இருந்து நிறைய இரவுகள் அவருடன் செலவழித்து இருக்கிறேன்.
அப்போதெல்லாம் என் மனதில் இவர் இவ்வளவு இயல்பானவராக இருக்கிறாரே எனத் தோன்றும். நான் சூரிஉடன் பழக தொடங்கிய போது அவருடைய மோசமான காலகட்டம் அது. அவருடைய காமெடி ஒர்க் அவுட் ஆகாமல் போன காலகட்டம் அது.
இந்தப் படத்தில் சூரியின் ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி திரைத்துறையில் அவருடைய இலக்கை சீக்கிரம் எட்டி விடுவார் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் சுவாசிகா பற்றி சூரி என்னிடம், ‘இந்த பொண்ணு தமிழ் சினிமா இருக்கும் வரை நடிக்கும். அவ்வளவு திறமைசாலி. நடிப்பு பிசாசு’ என்றார்.
நிஜ மனிதர்களை நாம் கதாபாத்திரங்களாக மாற்றும் போது அதில் நடிகர்கள் சரியாக உணர்ந்து நடிக்கவில்லை என்றால்.. படப்பிடிப்பு தளத்தில் கடினமாக இருக்கும்.  நமக்குள் தங்கி வலியை ஏற்படுத்திய உறவுகளை கதாபாத்திரங்கள் ஆக்கி அதனை திரையில் வெளிப்படுத்தும்போது சரியாக இருக்க வேண்டும் என நினைப்போம்.
 என்னைப் போன்ற படைப்பாளிகள் நினைப்பது என்னவென்றால் ..எங்களுடைய மனதில் இருக்கும் கதாபாத்திரங்களை நடிகர்கள் திரையில் துல்லியமாக பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான். அப்படி ஒரு கதையில் உள்ள கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தக்கூடிய அனைத்து நட்சத்திரங்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவராக ராஜ்கிரண் இருக்கிறார்.
ராஜ் கிரணின் பாதிப்பு இல்லாமல் கிராமத்து படங்கள் இல்லை. இந்தத் திரைப்படமும் அவருடைய படங்களில் பாதிப்பிலிருந்து தான் உருவாகி இருக்கிறது. இந்த படம் மட்டுமல்ல என்னுடைய வாழை திரைப்படமும் உருவாகி இருக்கிறது.  நாங்கள் அனைவரும் எப்போதும் ராஜ் கிரணுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹேஷாம் இனிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
சூரி தனக்கான தேரை உருவாக்கி, அதில் அவரே அமர்ந்து, அவரே இழுத்துக்கொண்டு செல்கிறார். அதனால் அவரிடமிருந்து யாரும் தேரை பிடுங்க இயலாது. வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்,
” இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே வெற்றி பெறும் என சொல்ல முடிகிறது. மக்கள் அண்மை காலமாக லைட் ஹார்ட்டட் ஸ்கிரிப்ட்டுகளுக்கு கொடுக்கும் வரவேற்பு சந்தோசமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த மாமன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறும்.
சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இவருடைய வளர்ச்சி அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கிறது என சொன்னார்கள். உண்மையில் ஒருவருடைய வளர்ச்சியில் மற்றவர்கள் மகிழ்ந்தால் அதுதான் சிறப்பு.
நானும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரிக்க தொடங்கி இருக்கிறேன். இதில் பத்து கதைகள் வந்தால் .. அதில் ஐந்து கதைகளில் சூரி ஹீரோ என்கிறார்கள்.‌ அதை பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசுகையில்,
”மாமன் படத்தை தாய் மாமன் என்ற உறவை வைத்து தான் தொடங்கினோம். ஆனால் இந்த படத்தில் அனைத்து உறவுகளும் இணைந்து இருக்கிறது. எல்லா குடும்பங்களிலும் நடைபெறும் விசயத்தை சூரி அண்ணன் கதையாக சொன்னார்.
விலங்கு மாதிரி ஒரு திரில்லரை மீண்டும் இயக்கக் கூடாது என்று தீர்மானித்திருந்தேன். அந்த தருணத்தில் இது போன்றதொரு கதையைக் கேட்டதும் ரொம்ப நெருக்கமானதாக இருந்தது. சவால் மிக்கதாகவும் இருந்தது. அதன் பிறகு கதை எழுதத் தொடங்கினோம். இந்தப் படத்தில் உள்ள முக்கியமான விசயங்கள் அனைத்தும் சூரி சொன்னது தான். அதை நாங்கள் சரியாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.
ஒரு தோல்வி படம் கொடுத்தவுடன் என்னை ஆழ்கடலில் புதைத்திருந்தார்கள். அதன் பிறகு எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களின் உதவியுடன் விலங்கு என்ற ஒரு வெப்சீரிசை இயக்கினேன். அந்த வெப்சீரிஸை பாராட்டி என்னை உயர்த்தி விட்டவர்கள் ஊடகத்தினர். அதன் பிறகு எனக்கு வாய்ப்பும் வாழ்க்கையும் கிடைத்தது. இதனால் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் அனைவரும் நண்பர்களாக இணைந்து மாமனை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகமாக சொல்கிறார்கள். அது எனக்கு பயத்தை அளிக்கிறது.  மே 16ஆம் தேதி அன்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்.  இந்தப் படத்தை என்னுடைய மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்” ‌என்றார்.
நடிகர் சூரி பேசுகையில், ‘
இப்படத்தில் பணிகள் நிறைவடைந்த உடன் 20 நிமிட காட்சிகளை பார்த்துவிட்டு இப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்வதற்கான உரிமையை பெற்ற விநியோகஸ்தர் சிதம்பரம் அவர்களை முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாண்டிராஜ் படத்தில் இடம்பெறும் வசனத்தை போல் இந்த படத்திலும் இடம்பெற வேண்டும் என இயக்குநர் பிரசாந்திடம் சொல்லி இருக்கிறேன்.
பதினாறு வருடமாக என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும் குமார் இன்று தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தை தயாரித்து சொன்ன நேரத்தில் வெளியிடுவதற்காக கடுமையாக உழைக்கிறார். கருடன் படம் போல் இந்த திரைப்படமும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என் நம்புகிறேன்.
ராஜ் கிரண் அப்பா இந்தப் படத்திற்காக நடிக்க ஒப்புக் கொண்டது எங்களுக்கெல்லாம் பெருமை. இந்தப் படத்தின் கதையை கேட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னதுடன் நடிக்கவும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியதற்கு நன்றி. கலைத்தாய் உங்களை நீடித்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பை தமிழ் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். இதற்கு முன் நீங்கள் இசை அமைத்த ஒன்ஸ்மோர் படத்தின் பாடல்களும் ஹிட் .இந்த படத்தின் பாடல்களும் ஹிட். படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது.. பாடல்களைக் கேட்டு எங்கள் குழுவினர் கொடுத்த நெருக்கடிகளுக்கும் , தொல்லைகளுக்கும் இந்த தருணத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூரி மீது இருக்கும் அன்பின் காரணமாகவும் , இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டதாலும் இப்படத்திற்கு பாடல்களை எழுதுவதற்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்று சொன்ன பாடலாசிரியர் விவேக்கிற்கு என்னுடைய நன்றி. அவர் மாமன் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு பெருமை. நாங்கள் நினைத்ததை விட இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. அதிலும் மண் சார்ந்த உறவுகளுக்கு உங்களுடைய வரிகள் நெருக்கமாக இருக்கிறது. இதற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌
‘ சீம ராஜா ‘படத்திற்காக இயக்குநர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள் என்றார் .இதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். என்னுடைய மனைவியும் உதவி செய்தார். இந்தப் படத்தை திரையரங்கத்தில் பார்ப்பதற்காக ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது. சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது. அன்று அது போன்றதொரு வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்கவில்லை என்றால்.. தற்போது என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இருந்திருக்காது.
நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி’. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்து தான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களை தான் சொல்லி இருக்கிறேன்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னை சந்தித்து இரண்டு கதைகளை சொன்னார். இரண்டும் நன்றாக இருந்தது. இருந்தாலும் தயாரிப்பாளர் குமார், ‘உங்களிடம் இருக்கும் கதையை சொல்லுங்கள். அதை பிரசாந்த் திரைக்கதையாக மாற்றி இயக்குவார் ‘ என சொன்னார். நான் முதலில் தயங்கினேன். பிறகு இந்த படத்தின் கதையை அவரிடம் சொன்னேன்.
குடும்பத்தில் அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் தங்கை என எத்தனையோ உறவுகள் இருந்தாலும் ஸ்பெஷலான உறவு என்றால்.. அது தாய் மாமன் உறவு தான். தாய்க்குப் பிறகு தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஒரு உறவு என்றால் அது தாய் மாமன் தான்.‌ தாய் மாமனை பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு சின்ன பையனுக்கும் அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை சொல்லி இருக்கிறோம்.
இந்த கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன். அவரும் நன்றாக இருக்கிறது என சொன்னார். இந்த கதையை கேட்டதும் பிரசாந்த் பாண்டிராஜ், ‘அண்ணே இந்த கதை என்னுடைய குடும்பத்திலும் நடந்திருக்கிறது’ என்றார்.‌
ஒரு
இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையானதாக இருக்கிறது என சொல்லி இப்படத்தை இயக்கத் தொடங்கினார். இந்தப் படத்திற்கு முக்கியமான நடிகரே அந்த சின்னப் பையன் தான். அவர் யார்? என்று இயக்குநரிடம் கேட்டேன். அந்த கதாபாத்திரத்திற்காக தயாரிப்பாளர் மூன்று குழந்தை நட்சத்திரங்களை பரிந்துரைத்தார். நான் ஒரு பத்து குழந்தை நட்சத்திரங்களை பரிந்துரைத்தேன். காரில் பயணிக்கும் போது எதிரில் தென்படும் குழந்தைகள் எல்லாம் போனில் போட்டோ எடுக்க தொடங்கினேன்.
படப்பிடிப்பும் தொடங்கியது. அதன் பிறகு இயக்குநர் மாஸ்டர் பிரகீத் சிவனை அறிமுகப்படுத்தினார். அவர் இயக்குநரின் மகன் என்பது அதன் பிறகு தான் தெரியும். அந்த பையனும் மிகச் சிறப்பாக நடித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவனின் சேட்டைகளை அனைவரும் ரசித்தோம். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் குடும்பத்தை மே 16ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு சென்று பார்க்க போகிறீர்கள். பல குடும்பங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும். ” என்றார்.

 

Comments (0)
Add Comment