ரத்தம்இல்லாத ஈழயுத்த கால பதிவு “நீளிரா” திரைப்பட விமர்சனம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த படங்கள் வரிசையில் உயிரிழப்புகளும், இரத்த தெறிப்புகளும் இல்லாது வந்திருக்கும் முதல் படம் நீளிரா.
1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் நடக்கின்ற கதையாக இப்படத்தின் கதை இருக்கிறது.
மக்களின் பொழுதுபோக்கு மையமான திரையரங்கம் ஒன்றில் இந்திய அமைதிப்படையின் அலுவலகமாக திரையில் விரியும் காட்சி ஈழத்தின் அன்றைய நிலையை உணர்த்துகிறது
ஒரு திருமண வீடு.அதன் மகிழ்ச்சியினூடே, போர்ச் சூழல் காரணமாக எவ்விதச் சிக்கலும் இல்லாமல் திருமணம் நடக்கவேண்டும் என்கிற பதட்டம் அனைவரிடமும்இருக்கிறது.
அப்போது விடுதலைப் போராளிகளைத் தேடி இந்தியப்படை வீரர்கள் தவறுதலாக அங்கு வருகின்றனர்.
போராளிகளின் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள திருமண வீட்டை பாதுகாப்பு கேடயமாக மாற்றிக் கொள்கின்றனர் இந்திய அமைதிப்படை வீரர்கள்.
அதன்பின், திருமண வீட்டின் நிலை என்ன? என்பதற்கான நிகழ்வுகள் மூலம் தமிழீழமக்கள் அனுபவித்த கொடுமைகளையும் இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறது நீளிராக
இந்தியப்படையின் தலைவராக நவீன் சந்திரா நடித்திருக்கிறார்.அதற்குரிய மிடுக்குடன் இருக்கிறார்.யார் எக்கேடு கெட்டாலென்ன? நாம் தப்பவேண்டும் என்பதற்காக அவர் செய்யும் நடவடிக்கைகள் கோபமூட்டுபவை அந்த வேடத்தில் பொருத்தமாக நடித்து மேலும் கோபமூட்டுகிறார்.

போராளிப் படைத் தலைவராக நடித்திருக்கும் சனத்,நம் மக்களுக்குப் பாதிப்பின்றி எதிரிப்படையைத் தாக்கவேண்டும் என்கிற பொறுப்புடன் இருக்கும் அசல் போராளியாகவே வாழ்ந்திருக்கிறார்.

ஈழப்பெண்களாக நடித்திருக்கும் ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்தமக்களின் துயர்களை தம் கண்கள் மூலமாகவும் உடல்மொழிகள் மூலமாகவும் வெளிப்படுத்திப் பதற வைத்திருக்கிறார்கள்.

நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகிய நடிகர்களின் கதாபாத்திரங்களும் அவற்றில் அவர்களின் நடிப்புகளும் அதிர்வை ஏற்படுத்துகின்றன.

மிக மிக முக்கியமான ஒரு வரலாற்றைக் காட்சிப்படுத்துகிறோம் அதை அசலாகப் பதிவு செய்யவேண்டும் என்கிற கவனத்துடன் கதைக்களத்துக்கேற்ற ஒளியமைப்புகளை நேர்த்தியாக வடிவமைத்துபடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பார்த்திபன்.

திருமணவீட்டின் மகிழ்ச்சி, தமிழீழமக்கள் வாழ்வியல் ஆகியனவற்றை பாடலிலும்,பின்னணி இசையில் போராட்டக் காலகட்ட வலிகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கே.

படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்,இப்படம் பேசும் செய்தி சரியாகப் போய்ச்சேரவேண்டும் என்கிற சிரத்தையோடு படத்தைத் தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் சோமிதரன்.தமிழீழ விடுதலைப் போராட்டக் காலகட்ட துயர்களையும் வலிகளையும் இரத்தம்,மரணம் ஆகியன இல்லாமலேயே பதிவு செய்திருக்கிறார்.அதோடு,இதுவரை யாரும் சொல்லாத இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களை பதிவு செய்திருக்கிறார்.

போர்க்காலத்தில் நடந்த உண்மைச்சம்பவம் என்றாலும், ஒரு முழுநீள த்ரில்லர் படத்தின்   கூறுகளுடன், பல்வேறு அரசியல் விமர்சனங்களுடன் வந்திருக்கும் நீளிரா படத்தைத் தயாரித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டுக்குரியவர்.
Comments (0)
Add Comment