நடிகர் விவேக் உடன்பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு ‘வாழ்க்கையே போராட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.வி.ஆர் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.கே.ஏ.அசோக் குமார் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தில் செந்தில், பாவா லட்சுமணன், முத்துக்காளை, சுப்பராஜ், ரெபக்கா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் இயக்குநர்கள் பேரரசு மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு வேலன் சகாதேவன். ஜி இசையமைக்க, வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் எழிலரசன் பாடல்கள் எழுத, ரவி தேவ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். பி.ஆர்.ஓவாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் துவக்க விழா ஜூலை 14காலை, சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பி.ஆர்.ஓ சங்க செயலாளர் விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
படக்குழுவினரை வாழ்த்தி பேசிய இயக்குநர் பேரரசு,
“கிளி ராமச்சந்திரன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ஒரு நடிகராக பிரபலமானார். இப்போது ஒரு இயக்குநராக அறிமுகமாகிறார், அவர் இந்த படத்தின் கதை பற்றி என்னிடம் கூறிய போது, கேட்டு ஆச்சரியமடைந்தேன். மிக நல்ல கதை, மக்களுக்கு தேவையான ஒரு அரசியல் படம். தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு குடும்ப படத்திற்கு மக்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்களோ, அதுபோல் அரசியல் படங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். அரசியல் படங்கள் அதிகமாக வர வேண்டும், அதை எந்த அரசும் தடுக்க கூடாது. அப்போது தான் நாட்டில் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கும். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது ஏராளமான அரசியல் படங்கள் வந்தது. அதேபோல், இப்போது விஜய் முதலமைச்சராக இருக்கிறார், இப்போதும் அரசியல் படங்கள் அதிகம் வரவேண்டும், அதன் மூலம் சொல்லப்படும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இயக்குநர் சுப்பிரமணியா சிவா பேசுகையில்,
“ஐந்தாம் தலைமுறை சித்த சிகாமணி படம் மூலம் ராமச்சந்திரன் எனக்கு அறிமுகம். அனைத்து கலைஞர்களுக்கும் நேரம் சரியாக அமைவதில்லை. சில கலைஞர்கள் வாய்ப்பு தேடாமல், தங்களுக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள், அப்படி தான் ராமச்சந்திரன் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறார். விவேக் சார் இருக்கும் போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தார்கள், அவரது மறைவு இவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்த சூழலில், அந்த இடத்தில் ராமச்சந்திரன் பலருக்கு உதவி செய்யும் இடத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி. விஜயகாந்த் சார், மயில்சாமி சார் கூட இவர் இருந்து பலருக்கு பல உதவிகள் செய்வார், சில சமயங்களில் கடன் வாங்கி கூட உதவி செய்வார், என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு மனிதர் இன்று இயக்குநராகி பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.
ராமச்சந்திரன் இந்த படத்தின் கதை பற்றி சொல்லும் போது ஆச்சரியமாக இருந்தது. காமெடி நடிகராக இருந்த இவருக்குள் இப்படி ஒரு சமூக சிந்தனை கொண்ட கதையா! என்று வியக்க வைத்து விட்டார். யோகி பாபுவின் ‘மண்டேலா’ எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே தாக்கத்தை ‘வாழ்க்கையே போராட்டம்’ படமும் ஏற்படுத்தும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, சமத்துவம் மற்றும் மனித நேயம் மிக்க ஒரு அரசியல் நையாண்டி கதை இது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் சிறிய படங்கள் என்று சொல்லக்கூடிய படங்கள் அனைத்தும் பெரிய படங்களாக உருவெடுக்கும்.” என்றார்.
இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன் படம் குறித்து பேசுகையில்,
“நான் சிறு வயதில் இருந்தே அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ் கட்சிக்காரர், அவருடன் பயணித்தது மட்டும் இன்றி, ஒரு நடிகனாகவும் பல அரசியல் தலைவர்களுடன் பயணித்திருக்கிறேன், பல அரசியல் கட்சிகளுக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அதனால் அரசியல் என்பது என் வாழ்க்கையின் ஒரு பாகம் தான். இந்த கதை நீண்ட நாட்களாகவே என் மனதில் இருந்தது. அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிள் மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்தாலும், மக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். அப்படி எதிர்பார்க்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள், அரசியலில் அவர்களது பங்கு என்ன ? என்பதை நையாண்டியாக சொல்லியிருக்கிறேன். இது மக்களுக்கான அரசியல் படம். எந்த அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல், மக்களைப் பற்றி பேசும் ஒரு அரசியல் படமாக இது இருக்கும்.
விவேக் சார் இருந்தவரை எங்களது வாழ்க்கை எந்தவித சிரமம் இன்றி இருந்தது. ஆனால், அவர் மறைவுக்குப் பிறகு காமெடி நடிகர்கள் பலர் கஷ்ட்டப்படுகிறார்கள், என் படம் மூலம் அவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறேன், அதனால் தான் இந்த படத்தில் பல காமெடி நடிகர்களை நடிக்க வைக்கிறேன். இயக்குநர்கள் பேரரசு மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறது. இது மக்களுக்கான படம், நிச்சயம் மக்களிடம் பெரிய வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.