வி.ஜி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.வெங்கடேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ரித்விக்கா ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி கலைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு
நரேஷ் மற்றும் விஜய் இசையமைத்துள்ளனர். ராஜேந்திரன் படத்தொகுப்பு செய்ய, அசால்டு மதுரா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். பவர் சிவா நடனக் காட்சிகளை வடிவமைக்க, கலைக்குமார் மற்றும் ஜி.சரவணன் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 18 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க பொருளாளர் பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன், சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிச்செல்வன், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில்
நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில்,
“விசாரணை கைதி பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போது அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதிகமாக மகேந்திரன் தான் சந்தோஷப்பட்டார். படத்தின் ஹீரோ உன்னி கிருஷ்ணன், டூயட் , ஆக்ஷன் பண்ணதை விட அவரது தாடி தான் எனக்கு பிடித்திருக்கிறது. ஒவ்வொரு ஹீரோவிடம் ஒரு ஸ்டைல் இருக்கும், அதுபோல் உன்னியிடம் தாடி ஒரு ஸ்டைல் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில்,
“விசாரணை கைதி நல்ல தலைப்பு. இத்தனை நாட்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. விசாரணை, கைதி என இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த ‘விசாரணை கைதி’ படமும் பெரிய வெற்றி பெறும்.
நடிகர் உன்னி கிருஷ்ணன், ஒரு போராளி. அவரும் எதாவது ஒரு படத்தில் நடித்து, எதாவது பெயர் வாங்கிட மாட்டோமா என்று தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் படங்களில், தயாரிப்பாளர்களுக்கு பக்கபலமாக இருப்பார். எந்த படமாக இருந்தாலும், அதை வெளிக்கொண்டு வருவதற்காக ஒத்துழைப்பார்.
படத்தின் தயாரிப்பாளரை பார்க்கும் போது தயாரிப்பாளர் போலவே தெரியல, வாய்ப்பு கேட்டு வந்தவர் போல இருக்கிறார். நான் இப்போது மதிப்பது பெரிய தயாரிப்பாளர்களை அல்ல சிறிய தயாரிப்பாளர்களை தான். காரணம், பெரிய தயாரிப்பாளர்கள் பெரிய பெரிய கலைஞர்களை தான் போடுகிறார்கள். ஆனால், இவரைப்போன்று சிறிய தயாரிப்பாளர்கள் தான் வளரும் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்கள். இவர்களை போன்ற சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இபோதைக்கு இவர்கள் தான் பெரிய தயாரிப்பாளர்கள். இருப்பவர்களுக்கு கொடுக்கிறவர்களை விட, இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்கள் தான் மனிதர்கள். இயக்குநர் மணிகண்டன் இந்த படத்திற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாதது போல் அமைதியாக இருக்கிறார். நானும் அவரைப் போல் தான் இருப்பேன், என்னை பார்ப்பது போல தான் இருக்கிறது. அவர் தேர்வு செய்த தலைப்பே சிறப்பாக இருக்கிறது. படமும் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.