“மாமியார்-மருமகள் மோதல் கதைதான் எல்.ஜி.எம். படம்”

தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘எல்.ஜி.எம்.’ திரைப்படம் எதிர்வரும் ஜூலை 28-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரமாக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாக்ஷி சிங் தோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே.விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியே இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நெக்ஸஸ் மால் வணிக வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சாக்ஷி சிங் தோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர். ஜே.விஜய், இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,

 ”தோனி உலகம் முழுதும் அறிந்த சர்வதேச கிரிக்கெட் வீரர். அவர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருக்கும் அபிமானத்தின் காரணமாக, அவர் நம் மண்ணை அவருடைய சொந்த மண்ணாக கருதி, தமிழில் தன்னுடைய முதல் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.இந்தப் படம், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய கம்ப்ளீட் என்டர்டெய்னர் படமாக இருக்கும். திரையரங்கத்தில் பணியாற்றும் 60 வயதுள்ள தொழிலாளி ஒருவர், நதியா மீதுள்ள பற்றின் காரணமாக அவரை ஓவியமாக வரைந்து.. அவரிடம் நேரில் சமர்ப்பிக்க வாய்ப்பு தருமாறு என்னிடம் கேட்டார். இவரைப்போல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகை நதியா. அவரும் இந்த படத்தில் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.
நடிகை இவானா பேசுகையில்
 ” முன்னோட்டத்தில் நான் பேசும் ஒரு டயலாக், ‘எனக்கு ஒரு ஐடியா’. இது பிரபலமாகிவிட்டது. இந்த வசனத்தை நான் பேசியிருப்பது பெருமிதமாக இருக்கிறது. ஆனால் இந்த ஐடியாவை சாக்ஷி மேடம்தான் உண்மையிலேயே கொடுத்தார்கள்.படத்தில் வசனங்கள் இயல்பாக பேசுவது போல் இருக்கும்.என்னுடைய திரையுலக பயணத்தில் ‘லவ் டுடே’ படத்திற்குப் பிறகு என்ன படத்தில் நடிக்கிறீர்கள்? என நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். அவர்களுக்கான பதிலை இந்த திரைப்படம் சொல்லும்” என்றார்.
நடிகை நதியா பேசுகையில்,
 ”இந்தப் படத்திற்கு தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனமே மிகப் பெரிய அட்ராக்சன். தோனி என்ற ஒருவரின் பெயர் இடம் பெற்றால் போதும்… இப்படத்திற்கு அதுவே மிகப் பெரிய விளம்பரம். ரமேஷ் தமிழ்மணி இப்படத்தின் இயக்குநர். மிக மிக திறமையானவர். இயக்குநர் மட்டுமல்ல.. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.
கேப்டன் தோனி எப்படி மிகவும் கூல் என்று சொல்கிறோமோ… அதே போல் இவரும் மிகவும் அமைதியான மனிதர். அவர் இயல்பாக பழகியதால்தான் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக பணியாற்றினோம்.
இந்தப் படத்தின் கதை மிகவும் சுவாரசியமானது. இந்தப் படத்தில் மெசேஜ் என்று எதுவும் இல்லை. இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் ஐடியா சாக்க்ஷி தோனியுடையது. அது அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.ஜூலை 28ஆம் தேதி தியேட்டருக்கு வாங்க. ஃபேமிலியோட வாங்க.. சிரிச்சுக்கிட்டே இருப்பீங்க.. சிரிச்சுக்கிட்டே போவீங்க.” என்றார்.
ஹரிஷ் கல்யாண் பேசுகையில்,
 ”நான் நடித்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிறது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு திரையரங்கில் எப்போது திரைப்படம் வெளியாகும் என எண்ணிக்கொண்டிருந்தேன்.
எந்த வகையான சினிமா வரும்? மக்கள் எப்படி ஆதரவு கொடுப்பார்கள்? என யோசித்துக் கொண்டே இருந்தேன். விஜய், அஜித், ரஜினி போன்ற நட்சத்திர நடிகர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று ரசிக்கிறார்கள். என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களின் படங்களுக்கு மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவார்களா..! என்ற கவலை இருந்தது.
‘லவ் டுடே’, ‘டா டா’, ‘குட் நைட்’, ‘போர் தொழில்’… போன்ற படங்களை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இது என்னை போன்று அடுத்தடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உற்சாகமளிக்கக்கூடிய விசயம்.
நாம் ஒருவரை ரசிப்போம். ஒருவரை பிடிக்கும். ஒருவருக்கு ரசிகராக இருந்திருப்போம். ஆனால் தோனி என்றால்.. அது ஒரு ஆளுமை மட்டுமல்ல. உணர்வு. குறிப்பாக தமிழக மக்களுக்கு தோனி மீது அளவு கடந்த பிரியம்.‌ அதைவிட தமிழக மக்கள் உணர்வுபூர்வமானவர்கள். குடும்பத்தின் மீதும்.. நண்பர்கள் மீதும்.. உணர்வுபூர்வமாக பின்னி பிணைந்து இருப்பார்கள். தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருவர்.
அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த ஜாக்பாட். ” என்றார்.
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில்,
”எல்.ஜி.எம். படத்தை இயக்க வாய்ப்பளிப்பதற்காக திருமதி சாக்ஷி சிங் தோனி மற்றும் தல தோனி மற்றும் அவரது தயாரிப்பு குழுவினருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தோனி நினைத்திருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பளித்திருக்கலாம்.
இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் படத்திற்கான கதைக் கருவை திருமதி சாக்ஷி மேடம் சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை சற்று விரிவாக்கம் செய்து கொடுத்தேன். அது சாக்ஷி மேடத்திற்கு பிடித்திருந்தது. பிறகு அவர் தோனியிடம் விவாதித்தார். தோனியும் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.ஒரு சாதாரணமான கான்செப்ட்டை பிரம்மாண்டமாக காண்பிக்க வேண்டும் என நினைத்தோம். அதற்காக நிறைய விவாதித்தோம். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம். அவர்களும் தங்களுடைய பொறுப்பினை உணர்ந்து நடித்துக் கொடுத்தார்கள்.இது ஒரு ஜாலியான திரைப்படம். இந்தப் படத்தில் சினிமாத்தனமான வசனங்கள் இல்லாமல்.. தினசரி வாழ்க்கையில் பேசும் வசனங்கள்தான் இடம் பிடித்திருக்கிறது. கன்டென்ட்டாக பார்க்கும்போது இது ஒரு சர்வதேச அளவிற்கானது. இதற்கு நாங்கள் தீர்வு என்று எதையும் சொல்லவில்லை. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தி இருக்கிறோம்.
இது ஒரு ஃபேண்டஸி சப்ஜெக்ட். குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் என ஒவ்வொருக்கும் அவர்களுடைய விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் பொருத்தமானது என்பதை சொல்லியிருக்கிறோம். இதை அறிவுரையாக சொல்லாமல் அற்புதமான தருணங்களாக உணர்த்தியிருக்கிறோம்.தயாரிப்பாளர் சாக்ஷி தோனி பேசுகையில்,
”எங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே மொழி ஒரு தடையாக இல்லை. தோனிக்கு இங்கு கிடைத்த வரவேற்பு முக்கியமானது. உணர்வுபர்வமானது.
இப்படத்தின் கதையை இயக்குநர் ரமேஷ் தமிழ் மணியிடம் சொன்னபோது அவர் “இதை திரைப்படமாக உருவாக்கலாம்…” என்றார். இந்தக் கதையின் கான்செப்ட் என்னுடைய தோழிகளின் வாழ்க்கையிலும், நான் கேட்ட விசயங்களிலும் இருந்தும் உருவானது.
மேலும் மாமியார் – மருமகள் பிரச்சனை என்பது உலக அளவிலானது. இந்தப் படத்தில் அந்த உறவுகள் குறித்த நேர் நிலையான அதிர்வுகளை பற்றி பேசி இருக்கிறோம். உண்மையில் இந்த திரைப்படம் ஒரு பாசிட்டிவான திரைப்படம். இந்தத் திரைப்படம் பொழுதுபோக்குடன் தயாராகி இருக்கிறது. எங்களுடைய இந்த திரையுலக பயணத்தில் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.
Comments (0)
Add Comment