அருண்பாண்டியன் ஆயுள்காப்பீட்டுக்கழக முகவராக இருக்கிறார். மனைவி இல்லை. ஒரே மகள். செவிலியர் படிப்பு முடித்துவிட்டு வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து அப்பாவின் கடனை அடைத்தாக வேண்டும் என்கிற இலட்சியத்துடன் இருக்கிறார். பகுதி நேரமாக ஒரு கோழி உணவுக் கடையில் வேலை பார்க்கிறார்.
பார்ப்போர் கண்படுகிற மாதிரி அன்பான அப்பா மகளாக இருக்கும் அவர்களுக்கிடையே ஒரு சின்ன விரிசல். அந்த நேரத்தில் எதிர்பாராமல் இன்னொரு சிக்கல். இவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அப்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை விறுவிறுப்பாகச் சொல்கிற படம் தான் அன்பிற்கினியாள்.
காதலனாக நடித்திருக்கும் பிரவீன்ராஜா அமைதியாக வந்துபோகிறார்.பதட்டமான காட்சிகளிலும் இயல்பாக இருக்கிறார். காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய் கவனிக்க வைக்கிறார்.
தலைமைக்காவலர், வணிக வளாகக் காவல்காரர் உட்பட சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருப்பவர்களும் கதைக்களத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஜாவித் ரியாஸின் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. பின்னணி இசை படபடப்பை ஏற்படுத்துகிறது.
மகேஷ்முத்துசாமியின் ஒளிப்பதிவு நன்று. குறிப்பாக இரண்டாம் பாதிக் காட்சிகளில் அவர்தான் நாயகன் என்றால் மிகையாகாது. அவ்வளவு நேர்த்தி.இயக்குநர் கோகுல் இதுபோன்ற மென்மையான படங்களையும் பக்கா வியாபாரப் படங்களுக்கேயுரிய வேகத்துடன் கொடுத்திருக்கிறார். ஒரு காட்சியில் நடித்து வரவேற்பும் பெறுகிறார்.
ஒரு அப்பா மகள் கொண்ட மிகச்சிறிய குடும்பத்தை வைத்துக்கொண்டு, குடும்ப உறவுகள் எப்படியிருக்கவேண்டும், கூன் விழுந்து நடக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமான நல்ல செய்தி, தூயஅன்பின் முன்னால் சாதி, மதம் மற்றும் அதிகாரம் ஆகியன அடங்கிப்போகும் உள்ளிட்ட பல பெரிய விசயங்களை பரப்புரை செய்யாமல் கதையோட்டத்திலேயே செவிட்டில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கும் படம்அன்பிற்கினியாள்