சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா? நாடோடி வாழ்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நாகரீக வாழ்கையில் அவனுக்குக் கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கான விடை சொல்லும் படமாகத் தயாராகியிருக்கும் படம் “முன்னா“.
தெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். அதே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால் நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதோடு கதையின் நாயகனாகவும் நடித்து இப்படத்தை இயக்கியுள்ளார் சங்கை குமரேசன்.
ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமுமுத்துச்செல்வன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் பாடல்களுக்கான இசையினை டி.ஏ.வசந்த்தும், பின்னணி இசையினை சுனில் லாசரும் அமைத்துள்ளனர்.
ஒளிப்பதிவினை ரவியும், நடனத்தை கென்னடி மாஸ்டரும், படத்தொகுப்பை பத்மராஜும் மேற்கொண்டுள்ளனர்.
நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து,ராஜாமணி, சண்முகம்,வெங்கட் ஆகியோர் முக்கிய கதாப்பாதிரங்களில் நடித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வர உள்ள இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சனவரி 22 ஆம் தேதி மாலை நடைபெற்றது.
விழாவில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ரமேஷ் செல்வன், இயக்குநர் வி.சேகர், ஆர்.வி.உதயகுமார்,நடிகர் விக்னேஷ், பெப்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியது..
“சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் ரொம்ப மோசமான நிலையில் இருந்தார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கம் மாறியிருக்கிறது அதனால் நல்லது நடக்கும். இந்த முன்னா படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுங்கள். அவர்கள் உதவுவார்கள் என்றார்.
நடிகர் விக்னேஷ் பேசியதாவது..
“வி.சேகர் சாரின் படம் ரஜினி சார் படத்திற்குச் சமமாக ஓடும். ஆர்.வி உதயகுமார் சாரின் பெரிய இரசிகன் நான். இவர்கள் எல்லாம் இந்தப்படத்தைப் பாராட்ட வந்திருப்பதைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. இந்த விழாவிற்கு என்னை தம்பி புவன் அழைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள். அவமானங்கள் இல்லாமல் வெற்றியில்லை. இனி நல்ல நல்ல படங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
பெப்சி சிவா பேசும்போது..
“இந்த நிகழ்ச்சி உண்மையிலே சந்தோசமாக இருக்கிறது. திருப்பியும் சினிமா புத்துணர்ச்சியோடு நடைபோடத் துவங்கி இருக்கிறது. அதற்கு மாஸ்டர் தான் பெருங்காரணம். தியேட்டரில் சினிமா பார்ப்பது தான் ரசிகர்களுக்கு சந்தோசம். அதை மாஸ்டர் படம் உறுதி செய்துள்ளது. அதுபோல இந்த முன்னா படமும் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்
இயக்குநர் வி.சேகர் பேசியதாவது…
“முன்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கொரோனாவிற்கு பின் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி. ஒரு வெற்றிப்படத்திற்கு நல்ல கதை இயக்குநர் தான் தேவை என்பது உண்மை. ஒரு படம் எடுக்கும் போதே பலபேருக்கு வேலை கிடைத்து விடுகிறது. அந்த வகையில் ஒரு தயாரிப்பாளர் படம் வெளியாகும் முன்பே பலரை வாழ வைக்கிறார். சின்னப்படங்கள் தான் நிறைய பேர்களை வாழ வைக்கிறது. பெரிய படங்கள் ஆலமரம் என்றால் சிறிய படங்கள் தான் நெல் போன்றது. எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார். அதுதானே உண்மை. ஒரு முதலாளியை மதிக்கிற துறை முக்கியம். பெரியபடம் அளவிற்கு நமது சின்னப்படங்களும் ஓட வேண்டும் என்றால் நாம் பெரிய படங்களை விட அதிகமாக உழைக்க வேண்டும். அந்த வகையில் இந்தப்படம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசியதாவது..
“இந்த முன்னா படத்தின் இயக்குநர் நடிகர் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தக் கொரோனா கால கட்டத்தில் 150 நாட்களுக்கு மேல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் விக்னேஷ் எங்களுக்கு பெரிய உதவி செய்தார். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். ரஷ்யாவின் புரட்சிக்குக் கூட சினிமா ஒரு உதவியாக இருந்தது. நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும். இப்போதெல்லாம் ஓவர் பில்டப்பில் தான் படம் எடுக்குறார்கள். நேர்மையாகப் படம் எடுக்க வேண்டும். நேர்த்தியாக படம் எடுத்தால் எப்படி ஓடாமல் போகும். நம் ரசிகர்கள் சரியான படங்களை நிச்சயமாக ஓட வைப்பார்கள். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்தப்படம் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்திருக்கிறார்கள். இப்படியான தைரியம் தான் நிறைய பேர்களை உருவாக்கி இருக்கிறது. அதுபோல் இந்த இயக்குநரையும் பெரிதாக உருவாக்கும்” என்றார்
படத்தின் இயக்குநர் சங்கை குமரேசன் அனைவருக்கும் நன்றி சொல்லிப் பேசியதாவது…
“இருக்குறதை வச்சி எடுத்த படம் தான் இது. நிறைய ஏமாற்றங்கள் இருந்தது. ஆனாலும் சொன்னது போல படத்தைத் துவங்கினோம். காரைக்குடி அருகே சுற்றிச் சுற்றி 34 நாட்கள் எடுத்து முடித்தோம். இந்தக்கதையில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கு. அதனால் கதை நாயகனாக என்னையே நடிக்கும் படி சொன்னார்கள். இந்தப்படத்தின் கதை இருக்குறதை வைத்து வாழ வேண்டும் என்ற ஒரு வரி தான். மனதுக்கு நிம்மதியான வாழ்க்கை தான் நல்ல வாழ்க்கை. இந்தப்படத்தின் முக்கிய நோக்கம் எதற்காகவும் கலங்கத் தேவையில்லை என்ற கருத்தைச் சொல்வது தான்” என்றார்.
இறுதியில் சிறப்பு விருந்தினர்கள் இசைத் தட்டை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொள்ள நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
முன்னதாக படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. ஒரு பாடலுக்கு நடனக்குழுவினர் மேடையில் ஆடிய நடனம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.